262. தோழி கூற்று
பாடியவர்: பாலைபாடிய
பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : உடன்போக்கு
நேர்ந்த தோழி,
கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. (நேர்ந்த
= உடன்பட்ட)
கூற்று
விளக்கம்: ஊர்மக்கள்
தலைவன் தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றிப் பழிச்சொற்கள் பேசுகிறார்கள். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விப்பதற்கு அவள் பெற்றோர்கள் உடன்படவில்லை.
தலைவியின் தாய் தலைவியைக் காவலில் வைத்தாள். தலைவனும் தலைவியும் தங்களின் சூழ்நிலையை
நினைத்து மிகவும் வருந்துகிறார்கள். அவர்களின் நிலையைக் கண்ட
தோழி, தலைவனுடன் பேசி அவர்களின் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்தாள்.
தான் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்ததைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனி லன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.
கொண்டு
கூட்டு:
ஊஉர்
அலரெழ, சேரி கல்லென, ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை
தன்மனையானே தானே இருக்க, சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவான் கரும்புநடு
பாத்தி அன்ன பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீர் நெல்லி
தின்ற முள்ளெயிறு தயங்க அவரொடு உணல் யான் ஆய்ந்திசின்.
அருஞ்சொற்பொருள்: கல் = ஆரவாரத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு; ஆனாது
= இடைவிடாது; அலைக்கும் = துன்புறுத்தும்; எயிறு = பல்;
தயங்க = விளங்க; ஆய்ந்திசின்
= சிந்தித்து முடிவு செய்துள்ளேன்; ஆல் – அசைச்சொல்;
சேய்மை =நெடுந்தூரம் ; நிவந்த
= உயர்ந்த; விலங்குதல் = குறுக்கிடுதல்; கவான் = பக்கமலை;
நிலைஇய = தங்கிய.
உரை: ஊரில்
பழிச்சொல் உண்டாக,
தெருவில் உள்ளவர்கள் கல்லென்று ஆரவாரிப்ப, இடைவிடாமல் நம்மை வருத்துகின்ற, அறநெஞ்சம் இல்லாத தாய் தன்
வீட்டில், உன்னைப்
பிரிந்து தான் தனியாக இருக்கட்டும். நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண், வானத்தைத் தொடும்படி உயர்ந்த, குறுக்காக வளர்ந்த மலையின் அடிவாரத்தில் உள்ள,
கரும்பை நடுவதற்குத் தோண்டிய குழியைப் போன்ற, பெரிய ஆண்யானையினது அடிச்சுவட்டில் தங்கிய நீரை,
உன் தலைவரோடு, நெல்லிக்காயைத் தின்ற,
முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும்படி நீ உண்ணுவதை நான் நினைத்தேன்.
சிறப்புக் குறிப்பு: நெல்லிக்காய்
சற்று புளிப்பாக இருக்கும்.
அதைத்தின்ற பிறகு நீரைக் குடித்தால், அந்த நீர்
இனிப்பாக இருக்கும். அதுபோல், உடன்போக்கில்
துன்பம் இருந்தாலும், தலைவனோடு கூடி வாழும் வாழ்க்கை இனிதாக இருக்கும்
என்று தோழி கூறுகிறாள்.