256.
தலைவன் கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: பாலை.
கூற்று: பொருள்
விலக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. (விலங்கு = தடை)
கூற்று
விளக்கம்:
தலைவன்
பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச்
செல்ல விரும்புகிறான்.
அவன் தலைவியிடத்தில், “நான் திரும்பிவரும்வரை உன்னால்
என்னைப் பிரிந்து இருக்க முடியுமா?” என்று கேட்கிறான்.
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே அவள் அழத் தொடங்கிவிட்டாள்.
அவள் அழுகையால் அவன் தான் பொருள் தேடப் போவதைத் தவிர்க்கிறான்.
இந்த நிகழ்ச்சியை இப்பாடல் சித்திரிக்கிறது.
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை
பிணிகால் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.
கொண்டு கூட்டு: பூங்குழையோய்! மணிவார்ந்தன்ன மாக்கொடி அறுகை பிணிகால்
மென்கொம்பு பிணையொடும் ஆர்ந்த மான்ஏறு உகளுங் கானம்
பிற்பட, வினைநலம் படீஇ வருதும்; அவ்வரைத் தாங்கல் ஒல்லுமோ எனச் சொல்லா முன்னர், தெரிவை கண் நில்லாவாகி, நீர்விலங்கு அழுதல் ஆனா, தேர் விலங்கின.
அருஞ்சொற்பொருள்: மணி = நீலமணி; வார்தல் = நீளுதல்;
மா = கரிய; அறுகை
= அறுகம் புல்; பிணிகால் = பின்னிக்கொண்டுள்ள அடிப்பக்கம்; கொம்பு = தண்டு; பிணை = பெண்மான்;
ஆர்தல் = உண்ணுதல்; மானேறு
= மான் +ஏறு = ஆண்மான்;
உகளுதல் = துள்ளுதல்; கானம்
= காடு; வினைநலம் படீஇ வருதும் = செயலில் வெற்றிபெற்றுத் திரும்பி வருதல்; அவ்வரை
= அ+வரை = அதுவரை;
ஒல்லுமோ = முடியுமோ; பூ
= அழகு; குழை = காதணி;
விலங்கு = தடை; குறுக்காக
நிறைந்து மறைத்தல்;; ஆனா = நீங்காத;
அடங்காத; தெரிவை = பெண்
(இங்கு, தலைவியைக் குறிக்கிறது).
உரை: ”அழகிய காதணிகளை அணிந்த தலைவியே!
நீலமணி நீண்டு கிடப்பதைப் போன்ற கரிய நிறக்கொடியாகிய அறுகின்
பின்னிக் கொண்டுள்ள மெல்லிய தண்டை, பெண்மானோடு
சேர்ந்து வயிறு நிரம்ப உண்ட, ஆண்மான் துள்ளுகின்ற கார்காலம் வருவதற்கு
முன்பே, காட்டைக் கடந்து சென்று, தொழிலால் நன்மை
பெற்று (பொருள் தேடுவதிலே வெற்றி பெற்றுத்) திரும்பி வருவேன். அதுவரை,
உன்னால் பொறுத்திருக்க முடியுமா?” என்று நான் கேட்பதற்கு முன்னரே,
தலைவியின் கண்கள், பழைய நிலையில் நில்லாமல்
கலங்கி, தடுத்து நிறுத்த
முடியாமல் கண்ணீரால் மறைக்கப்பட்டு அழுவது மட்டுமல்லாமல்,
என் தேரைத் தடை செய்தன.
சிறப்புக் குறிப்பு: ”பிணையொடு மார்ந்த மானேறு உகளும் கானம் பிற்பட”
என்றது மான்கள் இன்பம் நுகர்ந்து துள்ளித் திரியும் கார்காலத்திற்கு
முன்பே திரும்பிவருவதாகத் தலைவன் கூறுவதைக் குறிக்கிறது.
பொருள் தேடச் செல்லப் புறப்பட்ட தலைவன்,
தான் செல்லப் போகும் செய்தியைக் கூறியவுடன், தலைவி
அழ ஆரம்பித்துவிட்டாள். ஆகவே, இன்னும் சில
நாட்கள் தலைவியுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிப் பிறகு செல்லலாம் என்ற நோக்கத்தோடு அவன் செல்லுவதைத் தவிர்த்தான்.
இவ்வாறு பிரிதலைத் தவிர்த்தலைத் தொல்காப்பியம், “செலவழுங்குதல்” என்று குறிப்பிடுகிறது.
இங்கு,
செல்லாமை
உண்டேல் எனக்குரை,
மற்றுநின்
வல்வரவு
வாழ்வார்க்கு உரை.
(குறள் – 1151)
என்ற குறள்
நினைவு கூரத் தக்கது.
No comments:
Post a Comment