Sunday, June 26, 2016

213. தோழி கூற்று

213. தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.  கச்சிப்பேடு என்பது காஞ்சிபுரத்துக்கு அருகே இருந்த ஓரூர். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் இரண்டு பாடல்கள் ( 213, 216)  உள்ளன.
திணை: பாலை.
கூற்று: நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. (இடைநின்று மீள்வர்பணியை முடிக்காமல் தலைவியை நினைத்து இடைவழியில் திரும்பி வருதல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் மீது மிகுந்த விருப்பம் உடையவன். ஆனால், அவன்  பொருள் தேடுவதற்காக அவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுக்க முடியாமல், தலைவைன் பொருள் தேடும் பணியை இடையிலே நிறுத்திவிட்டு  திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி நினைக்கிறாள். “தலைவன் தன் கடமையை நன்கு அறிந்தவன். ஆகவே, தலைவன் தன் பணியை முடித்து, விரும்பிய பொருளைப் பெற்ற பிறகுதான் திரும்புவான்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! நசை நன்கு உடையர். நம் இன்துயில் முனிநர் சென்ற ஆறு ஞெரேரெனக் கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிபசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் ஒழியின் உண்டு, வழுஇல் நெஞ்சின்தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி நின்று வெயில் கழிக்கும் என்ப!

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம்; ஞெரல் = விரைவு; ஞெரேரென = ஞெரேர் +என = விரைவாக; கவை = கிளை; கலை = ஆண்மான்; ஒற்றுதல் = தள்ளுதல் (உதைத்து வீழ்த்துதல்); இறைஞ்சுதல் = வளைதல்; ததரல் = சிதைந்த பட்டை; ஒழியின் = மிஞ்சினால்; வழு = குற்றம்; தெறித்தல் = துள்ளுதல்; மறி = ஆடு, குதிரை, மான் ஆகியவற்றின் குட்டி; முனிநர் = வெறுத்தவர்; ஆறு = வழி.

உரை: தோழி, தலைவர் உன்னிடம் மிகுந்த  விருப்பம்  உடையவர்; ஆயினும், உன்னோடு உறங்கும் இனிய உறக்கத்தை வெறுத்து அவர் பிரிந்து சென்றார். அவர் போன வழியில், கிளை போன்ற கொம்பை உடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான், விரைவாகக் காலால் உதைத்துப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த, பருத்த பெரிய மரப் பட்டையை தனது குட்டி உண்டபின், எஞ்சினால் தான் அதை உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினையுடைய,  தனது குட்டிக்கு நிழலாகி, நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.

சிறப்புக் குறிப்பு:   வழு என்பது  அறத்தின் நீங்கிய செயலைக் குறிக்கிறதுதன் குட்டி பசித்திருக்கத்  தான் உண்பதும், அது வெயிலால் வாடத் தான் ஓடுவதும் அறத்தின் நீங்கிய செயலாதலால் அவை வழுவாகும்.  தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயிலின் வெம்மையைக் கருதாமல் தன் குட்டிக்கு நிழலாக இருந்து தன் கடமையைப் புரிந்ததால் ஆண்மான் வழுவில்லாத நெஞ்சுடையது என்ற கூறப்பட்டது.
தலைவர் சென்ற வழியில், தன்னலம் கருதாது தன் குட்டியின் நலத்தைப் பேணுவதைத் தன் கடமையாகக் கொண்ட ஆண்மானைக் காண்பார். அந்த ஆண்மானைப் போலத் தம் விருப்பத்தை மட்டும் கருதாது தமக்கு இல்லறத்தில் உள்ள கடமையை நினைத்து அதற்கு உரிய பொருளைத் தேடிய பிறகுதான் திரும்பி வருவார் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.

இப்பாடல், தொல்காப்பியத்தில் உள்ள பாடல் ஒன்றுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தலைவி இறைச்சிப் பொருள் வைத்துக் கூறுமிடங்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியத்தில் கீழ்வரும் அடிகள் காணப்படுகின்றன.
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். (தொல்காப்பியம் – 1094)

பொருள்: முன்பு களவொழுக்கத்தில் இருந்த பொழுது, தலைவி உடன்போக்கில் சுரவழியில் நடைபெறும் காட்சிகளைக் கண்டாள். பாலை நிலத்தில் உள்ள கருப்பொருளாகிய பறவைகளைப் பற்றியும் விலங்குகளைப் (புறா, மான், யானை, குருவி முதலியவற்றைப்) பற்றியும் அவள் பேசுவாள். அவற்றின் அன்பான வாழ்க்கையைச் சுட்டிப் பேசும் அவள், அவற்றைப் பார்க்கும் தலைவன், தான் பொருள்தேடச் சென்ற பணியை முற்றிலும் முடிக்காமல் திரும்பி வந்துவிடுவானோ என்று அஞ்சுவாள்.

212. தோழி கூற்று

212.  தோழி கூற்று

பாடியவர்: நெய்தற் கார்க்கியன். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55 – இல் காணலாம்
திணை: நெய்தல்.
கூற்று: குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது.    (குறை நேர்ந்த - தலைவனது குறையை நிறைவேற்றுவதற்குஉடன்பட்ட, குறை நயப்ப - தலைவனது குறையைத் தீர்த்தலைத் தலைவி விரும்பும் வண்ணம்.)
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு ஊடி இருக்கிறாள். அவளைக் காண்பதற்காக, தலைவன் தன் தேரில் வருகிறான். ஆனால், தலைவி அவனை காண விரும்பவில்லை. ”உன்னைக் காண வந்தவனைக் காணாமல் திருப்பி அனுப்புவது அறச்செயல் அன்று; உன் செயல் நாணத் தகுந்தது. தலைவன் உன்மீது கொண்ட காதலை நினைத்து நான் வருந்துகிறேன். நீஅவனை ஏற்றுக்கொள்என்று தோழி தலைவியை வேண்டுகிறாள்.

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே. 

கொண்டு கூட்டு: கொண்கன் ஊர்ந்த, கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கடல் அடைகரைத் தெளிமணி ஒலிப்பகாண வந்து நாணப் பெயரும்காமம் அளிதோ தானே;  மன்ற விளிவது; யான் நோகு. 

அருஞ்சொற்பொருள்: கொண்கன் = நெய்தல் நிலத் தலைவன்; கொடுஞ்சி = தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேரின் முன்பக்கத்தில் நடப்பட்டிருக்கும் ஓர் உறுப்பு. தேரில் செல்பவர்  இதனைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம்;  அளிது = இரங்கத் தக்கது; விளிவது = அழிவது. ஓகாரம், ஏகாரம், தான் அசை நிலைகள்.

உரை:  நெய்தல் நிலத் தலைவன் ஏறி வந்த, கொடுஞ்சியை உடைய தேரானது, தெளிந்த  நீரைஉடைய கடற்கரையில்,  தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, நம்மைக் காண வந்தது. ஆனால், நாம் நாணும்படி திரும்பிச் சென்றது.  தலைவனின் காமம் இரங்கத் தக்கது;  அது நிச்சயமாக அழியக் கடவதாகும்.  இவற்றை நினைத்து நான் வருந்துகின்றேன்.


சிறப்புக் குறிப்பு:  தம்மை நாடி வந்தவரின் குறையைத் தீர்க்காமல்  அவரை வறிதே திருப்பி அனுப்புவது அறநெறி அன்று. ஆகவே, தலைவியின் செயல் நாணத் தக்கதாயிற்று.

211. தோழி கூற்று

211.  தோழி கூற்று

பாடியவர்: காவன்முல்லைப் பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 104 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: ”இடைச்சுரத்துக் கவலுவன  (கவலுதல் = மனம் வருந்துதல்) கண்டு, நம்மை ஆற்றாரென நினைந்து மீள்வர்கொல்எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் செல்லும் வழியில் பறவைகளும் விலங்குகளும் தங்கள் துணையைப் பிரிந்திருப்பதால் வருந்துவதைக் கண்டு, தன் தலைவியும் அவ்வாறு வருந்துவாளோ என்று எண்ணித் தலைவன் பொருள் தேடுவதை விட்டுவிட்டுத் திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி கவலைப்படுகிறாள். அதைக் கண்ட தோழி, தலைவன் மிகுந்த மன வலிமை உடையவன். ஆகவே, அவன் சென்ற காரியத்தை முடிக்காமல் திரும்பி வரமாட்டான்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி
ஆராது பெயருந் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழிஎஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும்  தும்பி நீர்இல்  வைப்பின் சுரன் இறந்தோர் அம் சில் ஓதி யாய் வளை நெகிழ நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; சில் = சிலவாகிய ; ஓதி = பெண்ணின் கூந்தல்; நேர்தல்  = உடன்படல்; நீத்தார் = பிரிந்து சென்றவர் ; எஞ்சுதல் =குறைதல் , விலகுதல்ஓங்கல் = உயர்ச்சி ; வெஞ்சினை = காய்ந்த கிளை; இணர் = கொத்து; ஆராது = உண்ணாமல் ; தும்பி = வண்டு; வைப்பு = இடம்; சுரன் = பாலை நிலம்; இறந்தோர் = கடந்தோர்; எஞ்சினம் = நீங்கினோம்.

உரை: தோழி!, குறைவின்றி முற்றிலும் தீய்ந்துபோன மராமரத்தின் உயர்ந்த, வற்றிய கிளையில் இருந்த, வேனிற் காலத்தில் மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தில் உள்ள தேனை ஊதி (உண்டு),பசி நிறைவு பெறாது திரும்பிய வண்டுகளையுடைய,  நீரில்லாத இடங்களுள்ள  பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர்,  அழகிய சிலவாகிய கூந்தலையுடைய உனது, அழகிய வளையல்கள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்கு உடன்பட்டு,  நமக்கு அருள் செய்யாதவர்அவர் பிரிவுக்காக  நாம் அஞ்சுவதைத் தவிர்ப்போம்.


சிறப்புக் குறிப்பு: பொருள் தேடச் சென்றவர், தாம் சென்ற பணியை முடிக்காமல் இடையிலே திரும்பி வருவது அறமாகாது என்பதனால் தலைவி வருந்துகிறாள். தலைவர் இரங்கும் நெஞ்சுடையவராக இருந்தால், வளையல்கள் நெகிழும்படி தனக்கு உண்டாகும் துன்பத்தையும், நீரில்லாத பாலைவனத்தில் தமக்கு உண்டாகும் துன்பத்தையும் நினைத்துப் பார்த்துப் பிரியாமல் இருந்திருப்பார் என்று தோழி கூறுகிறாள். தலைவர் தலைவிக்கும் தனக்கும் ஏற்படக் கூடிய துன்பங்களை எண்ணிப் பார்க்காமல், பிரிந்து சென்றதால், அவர் வலிமையுடைய நெஞ்சினர் என்றும் அவர் தேடிச் சென்ற பொருளை அடையாமல் திரும்ப மாட்டார் என்றும் கூறி, தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.

210. தோழி கூற்று

210. தோழி கூற்று

பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார். இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் செள்ளை. கீரன் என்ற பெயருடையவர் நக்கீரனார் என்றும் பூதன் என்ற பெயருடையர் நப்பூதனார் என்றும் சிறப்பித்து அழைக்கப்பட்டதைப் போல, இவர் பெயருக்கு முன் என்ற எழுத்தும், பெயரின் இறுதியில் ஆர்விகுதியும் சேர்த்து நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.  ‘விருந்து வருமாயின் கரைந்து காட்டுக; வாராதாயின் நடந்து காட்டுக.’ என்று சிறுமிகள் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் காக்கையை நோக்கிப் பாடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறதுஇக்கருத்தை மையமாக வைத்து, இப்புலவர் இப்பாடலை  இயற்றியுள்ளார். ஆகவே, இவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார். இவர், பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்துபாடி, தொள்ளாயிரம் பலம் பொன்னும், நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பிரிந்துவந்த தலைமகன், “நன்காற்றுவித்தாய்என்றாற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பி வந்தான். அவனைப் பிரிந்திருந்த காலத்தில் தலைவி துன்புறாமல் பொறுத்துக் கோண்டிருந்ததாகத் தலைவன் கேள்விப்பட்டான்.  “நான் தலைவியைப் பிரிந்திருந்த பொழுது, நீ அவளுக்கு ஆறுதல் கூறி, அவள் வருந்தாமல் கவனித்துக்கொண்டாய்என்று தோழியைப் பாரட்டுகிறான். அதற்குத் தோழி, “ நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. காக்கை கரைந்த பொழுதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினேன். அவள் காக்கை கரைவது உன் வருகைக்கு அடையாளம் என்று எண்ணி, நம்பிக்கையுடன் பொறுமையாக இருந்தாள்என்று கூறுகிறாள்.

திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. 

கொண்டு கூட்டு: திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலி சிறிது.

அருஞ்சொற்பொருள்: திண்மை = வலிமை; நள்ளிகடையெழு வள்ளல்களில் ஒருவன்; கானம் = காடு; அண்டர் = இடையர்; பல்லா = பல் + = பல பசுக்கள்; தொண்டிசேரநாட்டில் இருந்த துறைமுகப் பட்டினம்; வெஞ்சோறு = விரும்பத்தகுந்த சோறு; செல்லல் = துன்பம்; பலி = காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு. 

உரை:  வலிய தேரையுடைய நள்ளி யென்னும் வள்ளலின் காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்களின் பாலிலிருந்து கிடைத்த நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றி நன்றாக விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய விரும்பத்தகுந்த  சோற்றை, ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு,  விருந்தினர் வருவார் என்பதற்கு அடையாளமாகக்  கரைந்த காக்கைக்குரிய அப்பலியானது, சிறிதளவவே ஆகும்.


சிறப்புக் குறிப்பு: வீட்டிற்கு அருகே காக்கை கரைந்தால், விருந்தினர் வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது.

209. தலைவன் கூற்று

209. தலைவன் கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்முற்றி (பொருள் முற்றி - பொருளீட்டும் முயற்சி நிறைவெய்தி) மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது (தெருட்டுதல் = அறிவித்தல், தெளிவித்தல்)
கூற்று விளக்கம்: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் பொருளுடன் திரும்பி வந்தான். வந்தவுடன் தோழியிடம், “ நான் தலைவியைப் பிரிந்திருக்கும் காலத்தில் , தலைவியின் நட்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அவளையே நினைத்திருந்தேன்.” என்று தலைவன் தோழியிடம் தலைவியின் காதுகளில் விழுமாறு கூறுகிறான்.

அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.

கொண்டு கூட்டு:
குறுநடை! அறம் தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும் இறப்பு அருங்குன்றம் இறந்த யாம் பல உள்ளலம்.  நெறிமுதல்
கடற்றில்  கலித்த முடச்சினை வெட்சி தளை அவிழ் பல்போது கமழும் மைஇருங் கூந்தல் மடந்தை நட்பு.

அருஞ்சொற்பொருள்: தலைப்படுதல் =மேற்கொள்ளுதல்; மறம் = வலிமை; குருளை = குட்டி; கறங்கும் = உருளும்; இறத்தல் = கடத்தல்; கடறு = காடு; கலித்தல் = தழைத்தல்; முடம் = வளைந்தது; சினை = கிளை; தளை அவிழ் = முறுக்கு அவிழ்கின்ற; போது = மலரும் பருவத்து அரும்பு; மையிருங் கூந்தல் = மை போன்ற கரிய கூந்தல்.

உரை:  குறுகிய நடையை உடைய தோழி! வழிப்போக்கர்களின் உயிரைக் காக்கும் அறத்தைச் செய்யும், நெல்லிமரத்தினது அழகிய பசிய காய்கள்,  வலியையுடைய புலிக்குட்டிகள் கொள்ளக் கூடிய இடத்தில், உதிர்ந்து உருளுகின்ற, கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்ற நான், அங்ஙனம் சென்றவிடத்தில் உள்ள பொருள்களை நினைக்கவில்லை. வழியில் காட்டில் தழைத்த,  வளைந்த கிளைகளையுடைய வெட்சியின், முறுக்குஅவிழ்ந்த,  மலர்ந்த பல மலர்கள் மணக்கின்ற,  மையைப் போன்ற கரிய கூந்தலையுடைய, தலைவியின்  நட்பையே நினைந்திருந்தேன்.


சிறப்புக் குறிப்பு: வழிப்போக்கர்களின் நீர் வேட்கையைத் தணித்து அவர்களின் உயிரைக் காக்கும் தன்மையையுடையதால் நெல்லிக்காய்அறம் தலைப்பட்ட நெல்லிஎன்று அழைக்கப்பட்டது.

208. தலைவி கூற்று

208.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தை உணர்ந்த தோழி, “தலைவன் திருமணத்திற்குப் போருள் தேடத்தானே சென்றிருக்கிறான். அவன் வரும்வரை நீ பொறுமையாகத்தான்  இருக்க வேண்டும்என்று தோழி தலைவிக்கு அறிவுறை கூறுகிறாள். தோழியின் கூற்றுக்குத்  தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றனானே. 

கொண்டு கூட்டு: தோழி! ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் பொருகளிறு மிதித்த, நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரும் நாடனொடு ஒன்றனான் ஒன்றேன்.

அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = மனம் ஒன்றுதல் (பொருந்துதல்); பொருதல் = போரிடுதல்; நெரிதல் = முழுவதும் அறாமல் முரிந்து போதல்; பெய்ம்மார் = பெய்து சூடுவதற்காக; நின்று கொய = நின்றுகொண்டு மலர் பறிக்கும்படி; ஒன்றனான் = ஒரு காரணத்தால் மட்டுமே ( என்னை வேறு யாராவது மணந்துகொள்ள விரும்புவோர் வந்து பெண் கேட்பார்களோ என்ற ஒரு காரணத்தால் மட்டுமே)

உரை: தோழி! நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையவள் அல்லள்;  பொருந்தும் இயல்புடையவள்தான். மலையினிடத்து, ஒன்றோடொன்று போரிட்ட யானைகளால் மிதிக்கப்பட்ட, முரிந்த அடிப்பக்கத்தையுடைய வேங்கைமரம், குறவர் மகளிர் தங்கள் கூந்தலில் சூடுவதற்காக, மரத்தில் ஏறாமலே கீழே நின்றபடியே கொய்துகொள்ளுமாறு மலரும் மலை நாட்டையுடைய தலைவனோடு, ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே நான் உடன்படமட்டேன்.
சிறப்புக் குறிப்பு: இச் சிறிய பாடல் பலவிதமான விளக்கங்களுக்கு இடமளிக்கிறது. வேங்கை மரத்தைத் தலைவிக்கும் களிற்றைத்  தலைவனுக்கும் உவமையாகக் கொள்ளலாம். அவ்வாறு கொண்டால், களிறு வேங்கை மரத்தைச் சாய்த்தது போல், தலைவன் தலைவியைக் காதலித்துக் காமநோயைத் தந்து அவளை மெலியச் செய்தான். அவன் செயலால், சாய்ந்த மரத்தில் குறமகளிர் எளிதில் மலர் கொய்வது போல்  ஊர் மகளிர் அலர் கூற எளிதாயிற்று என்பதை உள்ளுறை உவமமாகக் கருதலாம்.

போரிட்ட யானைகளால் மிதிக்கப்பட்ட  வேங்கை மரம், அழியாது சாய்ந்து, குறமகளிர் நின்றபடியே மலைர்களைப் பறித்துக் கொள்ளும்படி உள்ளது. அது போல், வேறு யாராவது தன்னை எளிதில் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று தலைவி கருதுவதாகவும் பொருள் கொள்ளலாம்.


பொருகளிறுஎன்பது இருகளிறுகள் போரிட்டதைக் குறிப்பதாகக் கொண்டால், தலைவியின் சுற்றத்தார், பெற்றோர் முதலியோர், தலைவி தலைவனை மணந்து கொள்வதற்கு உடன்பட்டவர், மறுப்பவர் என்று இருபிரிவினராக இருந்தனர் என்றும், யானை மிதித்ததால் சாய்ந்த மரம் போல், மறுப்பவரால் தலைவன் அவமதிக்கப்பட்டான் என்றும், அதனால், மலர்களைப் பறிப்பதற்கு எளிதாகிய வேங்கை மரம் போல், முன்பு அரியவனாக இருந்த தலைவன் இப்பொழுது எளியவனாகி அருள் செய்கிறான் என்றும் இறைச்சிப் பொருள் கொள்ளலாம்

207. தலைவி கூற்று

207. தலைவி கூற்று

பாடியவர்: உறையனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: செலவுக் குறிப்பறிந்து, அவர் செல்வார் என்று தோழி சொல்லக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து, பொருள்தேடச் செல்லுவதற்கு முடிவு செய்தான். தலைவியிடம் பிரிவைப் பற்றிச் சொன்னால், பிரிவது கடினம் என்று எண்ணிய தலைவன் அவளிடம் சொல்லாமலேயே பிரிந்து சொல்லத் துணிந்தான். ”தலைவன் உன்னிடம் சொல்லாமல் உன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறான்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  “அச்செய்தியைப் பலரும் என்னிடம் ஏற்கனவே கூறினர். தலைவன் பிரிந்து செல்லுவதைத் தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது வந்து அச்செய்தியை என்னிடம் கூறுகிறாயே!” என்று தலைவி தோழியைக் கடிந்துகொள்கிறாள்.
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே. 

கொண்டு கூட்டு:
செப்பினம் செலின்,  செலவு அரிதாகும் என்று அத்த ஓமை அம்கவட்டு இருந்தஇனம் தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி சுரம்செல் மாக்கட்கு உயவுத்துணை ஆகும்கல்வரை அயலது தொல்வழங்கு சிறுநெறி நல்லடி பொறிப்பத் தாஅய்ச்  சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. 

அருஞ்சொற்பொருள்: அத்தம் = பாலை நிலம், வழி; ஓமை = ஒருவகை மரம்; கவடு = கிளை; இனம் = துணை; இனம் தீர் = இனத்தைவிட்டு நீங்கிய; புலம்பு = தனிமை; தெள்விளி = தெளிந்த ஓசை; சுரம் = பாலை நிலம்; உயவுத்துணை = பேச்சுத்துணை; வரை = மலை; தொல்வழங்கு சிறுநெறி = பழைமையான சிறிய (ஒற்றையடிப்) பாதை; பொறிப்ப = காலடிச் சுவடு பட; தாஅய்ச் செல்லுதல் = விரைந்து செல்லுதல்; ஆர்வலர்அன்புடையவர்.


உரை: நாம் செல்லுவதைத் தலைவியிடம் சொல்லிச் செல்வேமாயின், செல்லுதல் அரிதாகும் என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தின்,  அழகிய கிளையில் இருந்த, இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமைத் துயரை வெளிப்படுத்தும் தெளிந்த ஓசை, பாலைநிலத்தின் அரிய வழியிற்செல்லும் மனிதர்களுக்கு,  பேச்சுத்துணையாக அமைந்த இடமாகிய,  கற்களையுடைய மலையின் பக்கத்தில் பழமையான சிறிய ஒற்றையடிப் பாதையில்  தம் நல்ல அடிகள் சுவடு செய்ய, தலைவர் விரைந்து  சென்றார் என்று கேள்விப்பட்ட  நம்முடைய அன்பர்கள் பலராவர்.

206. தலைவன் கூற்று

206.  தலைவன் கூற்று

பாடியவர்: ஐயூர் முடவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 123 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண் மீது காதல் கொண்டு காமநோயால் வருந்துகிறான். அதைக் கண்ட தோழன் தலைவனை இடித்துரைக்கிறான். அதைக் கேட்ட தலைவன், “நான் அறியாமையால் காம நோயுற்றேன். அறிவுடையவர்களே! நீங்கள் என்னுடைய நிலைக்கு ஆளாகாமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்என்று கூறுகிறான்.

அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும்படர் செய்யு மாயின்
உடனுறை வரிதே காமம்
குறுக லோம்புமின் அறிவுடை யீரே. 

கொண்டு கூட்டு:
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி  அன்ன இனியோள் குணனும், இன்ன இன்னா அரும்படர் செய்யுமாயின்காமம் உடன்உறைவு அரிதே! அறிவுடையீரே! குறுகல் ஓம்புமின்!

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய ; அன்ன = போன்ற, அத்தகைய; தீம் = இனிய ; கிளவி = சொல்; இன்ன = இத்தகைய; இன்னா = துன்பம்; படர் = துன்பம்; ஓம்புமின் = தவிருங்கள்.

உரை:, என் காதலி அமிழ்தத்தைப்போன்ற, அழகிய இனிமை நிறைந்த  சொற்களைப் பேசுபவள்.  அதுபோல், அவள் இனிய குணமும் உடையவள். இத்தகையவள் மீது நான் கொண்ட காமம் மிகுந்த துன்பங்களை உண்டாக்குமாயின், காமத்தோடு ஒத்து வாழ்வது அரிது. ஆகவே,  அறிவையுடையவர்களே! காமத்தை அணுகுவதைத் தவிருங்கள்.
அரும்படர் என்றது மருந்துகளால் தீர்க்க முடியாத துன்பத்தை குறிக்கிறது.இங்கு,
 பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.                               (குறள் – 1102)


என்ற குறள் ஒப்பு நோக்கத் தக்கது.

Sunday, June 12, 2016

205. தலைவி கூற்று

205.  தலைவி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன்  தன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றான். அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள்தலைவி வருந்துவதைக் கண்டு வருந்திய தோழியை நோக்கி, “ என் தலைவன் இப்பொழுதுதான் பிரிந்து சென்றான். அதைப் பசலை எப்படித் தெரிந்து கொண்டதோ? என் நெற்றியில் அது உடனே படர்ந்து விட்டதுஎன்று தலைவி கூறுகிறாள்

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக்
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. 

கொண்டு கூட்டு:  தோழி! இடுமணற் சேர்ப்பன் மின்னுச்செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக்கலங்கு கடல் துவலை ஆழி நனைப்பஇனிச் சென் றனன்.  பசப்பு யாங்கு அறிந்தன்றுஎன் தேம் கமழ் திருநுதல் ஊர்தரும்.

அருஞ்சொற்பொருள்: கருவி = மேகம்; மழை = மேகம்; தூங்கல் = பொழிதல் (பெய்தல்); விசும்பு = ஆகாயம்; பறை = பறத்தல்; நிவந்தாங்கு = உயரத்தில் செல்வதுபோல்; பொலம் = பொன்; படை = தட்டு; பொலிவு = அழகு; துவலை = நீர்த்துளி; ஆழி  = சக்கரம்; இனி = இப்பொழுது; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்;தேம் = மணம்.

உரை: தோழி! அலைகள் மணலைக் கொண்டுவந்து சேர்க்கும் கடற்கரையையுடைய நெய்தல் நிலத் தலைவன்,  மின்னலோடு கூடிய பெருமழை பெய்ய,  வானத்தில் பறக்கின்ற அன்னப் பறவை, உயர்ந்து பறப்பதைப்போல், பொன்னாலான பக்கங்களுடன் அழகுடன் விளங்கும்,  யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட  வெண்மையான தேரில் ஏறி,  கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள், அத்தேரின் சக்கரங்களை நனைக்கும்படி,   இப்பொழுதுதான் என்னைப் பிரிந்து சென்றான்; இந்தப் பசலை இதனை எப்படி அறிந்தது?   எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியில் இந்தப் பசலை உடனே பரவியது.

சிறப்புக் குறிப்பு: மழைத்துளியில் நனைந்து உயரப் பறந்து செல்லும் வெண்ணிற அன்னம், கடலலைகளின் நீர்த்துளிகள் சக்கரங்களை நனைக்குமாறு செல்கின்ற வெண்ணிறமான தேருக்கு உவமை. தான் தலைவனின் பிரிவை நினைத்து வருந்துவதற்கு முன்னரே, பசலை அவன் பிரிவை அறிந்து கொண்டதே என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் கூறுகிறாள்.

தலைவனைப் பிரிந்ததால்தலைவியை உடனே பசலை பற்றிக் கொண்டது என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பு ஊர்வது.                                                          (குறள் – 1185)
பொருள்: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                             (குறள் – 1186)

பொருள்: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                            (குறள் – 1187)

பொருள்: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!