208.
தலைவி கூற்று
பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை
ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
திருமணத்திற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவைப்
பொறுத்துக்கொள்ள முடியாமல், தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தை உணர்ந்த தோழி, “தலைவன் திருமணத்திற்குப்
போருள் தேடத்தானே சென்றிருக்கிறான். அவன் வரும்வரை நீ பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்” என்று தோழி தலைவிக்கு அறிவுறை கூறுகிறாள். தோழியின் கூற்றுக்குத்
தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றனானே.
கொண்டு
கூட்டு:
தோழி! ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்;
குன்றத்துப் பொருகளிறு மிதித்த,
நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரும் நாடனொடு ஒன்றனான் ஒன்றேன்.
அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = மனம் ஒன்றுதல் (பொருந்துதல்); பொருதல்
= போரிடுதல்; நெரிதல் = முழுவதும்
அறாமல் முரிந்து போதல்; பெய்ம்மார் = பெய்து
சூடுவதற்காக; நின்று கொய = நின்றுகொண்டு
மலர் பறிக்கும்படி; ஒன்றனான் = ஒரு காரணத்தால்
மட்டுமே ( என்னை வேறு யாராவது மணந்துகொள்ள விரும்புவோர் வந்து
பெண் கேட்பார்களோ என்ற ஒரு காரணத்தால் மட்டுமே)
உரை: தோழி! நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையவள் அல்லள்; பொருந்தும் இயல்புடையவள்தான். மலையினிடத்து, ஒன்றோடொன்று போரிட்ட யானைகளால்
மிதிக்கப்பட்ட, முரிந்த அடிப்பக்கத்தையுடைய வேங்கைமரம்,
குறவர் மகளிர் தங்கள் கூந்தலில் சூடுவதற்காக, மரத்தில்
ஏறாமலே கீழே நின்றபடியே கொய்துகொள்ளுமாறு மலரும் மலை நாட்டையுடைய தலைவனோடு,
ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே நான் உடன்படமட்டேன்.
சிறப்புக் குறிப்பு: இச்
சிறிய பாடல் பலவிதமான விளக்கங்களுக்கு இடமளிக்கிறது. வேங்கை மரத்தைத்
தலைவிக்கும் களிற்றைத் தலைவனுக்கும் உவமையாகக் கொள்ளலாம். அவ்வாறு கொண்டால்,
களிறு வேங்கை மரத்தைச் சாய்த்தது போல், தலைவன்
தலைவியைக் காதலித்துக் காமநோயைத் தந்து அவளை மெலியச் செய்தான். அவன் செயலால், சாய்ந்த மரத்தில் குறமகளிர் எளிதில் மலர்
கொய்வது போல் ஊர் மகளிர் அலர் கூற எளிதாயிற்று
என்பதை உள்ளுறை உவமமாகக் கருதலாம்.
போரிட்ட யானைகளால்
மிதிக்கப்பட்ட வேங்கை மரம், அழியாது சாய்ந்து, குறமகளிர் நின்றபடியே மலைர்களைப் பறித்துக்
கொள்ளும்படி உள்ளது. அது போல், வேறு யாராவது
தன்னை எளிதில் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று தலைவி கருதுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
“பொருகளிறு”
என்பது இருகளிறுகள் போரிட்டதைக் குறிப்பதாகக் கொண்டால், தலைவியின் சுற்றத்தார், பெற்றோர் முதலியோர், தலைவி தலைவனை மணந்து கொள்வதற்கு உடன்பட்டவர், மறுப்பவர்
என்று இருபிரிவினராக இருந்தனர் என்றும், யானை மிதித்ததால் சாய்ந்த
மரம் போல், மறுப்பவரால் தலைவன் அவமதிக்கப்பட்டான் என்றும்,
அதனால், மலர்களைப் பறிப்பதற்கு எளிதாகிய வேங்கை
மரம் போல், முன்பு அரியவனாக இருந்த தலைவன் இப்பொழுது எளியவனாகி
அருள் செய்கிறான் என்றும் இறைச்சிப் பொருள் கொள்ளலாம்.
No comments:
Post a Comment