Tuesday, June 30, 2015

50. மருதம் - தலைவி கூற்று

50. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவர் குறுந்தொகையில் ஆறு பாடல்களும் (50, 51, 117, 238, 301, 336), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (117, 239), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் ( 40, 41) இயற்றியவர்.
பாடலின் பின்னணி: மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன் ஒருவனை மனைவியிடம்  அனுப்புகிறான். மனைவி கணவன் மீது கோபமாக இருக்கிறாள். “அவர் அழகான இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் உடல் மெலிந்து தனிமையில் வாடுகிறேன்என்று தன் கோபத்தையும் வருத்தத்தையும் மனைவி தூதுவனிடம் கூறுகிறாள்.


ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 

அருஞ்சொற்பொருள்: ஐயவி = வெண் சிறுகடுகு ; வீ = பூ; ஞாழல் = ஒரு மரம் ; செ = சிவந்த; மருது = மருத மரம் ; செம்மல் = பழம்பூ ; தாஅய் = பரந்து ; இறை = உடலுறுப்பின் மூட்டுவாய் (இங்கு தோளைக் குறிக்கிறது); இறந்து = கடந்து; இலங்குதல் = விளங்குதல்; ஞெகிழல் = நெகிழ்தல்; சாய்தல் = மெலிதல் ; புலம்பு = தனிமை; மணத்தல் = கூடுதல்.

உரை: வெண் சிறுகடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, சிவந்த மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து, தலைவருடைய ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்கிறது. அவர் முன்பு தழுவிய என் தோள், என் கையில் அணிந்திருக்கும் ஓளிபொருந்திய  வளையல்கள் நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.


விளக்கம்: அவர் ஊர்என்றது, தலைவன் தலைவியோடு வாழாமல் தனித்து வாழ்வதைக் குறிக்கிறது.  ’‘அவர் ஊரிலுள்ள துறையை அணிந்தன்றுஎன்றது, தலைவன் பரத்தையரோடு விளையாடி இன்புற்றிருந்தான் என்பதைக் குறிக்கிறது.

49. நெய்தல் - தலைவி கூற்று

49. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.  இவர் குறுந்தொகையில் பதினொரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், அகநானூற்றில் ஆறு பாடல்களும் ( 10, 71, 35, 140, 280, 370, 390), நற்றிணையில் பத்துப் பாடல்களும் ( 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) இயற்றியவர். இவர் சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தர்களாலும், திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும், அந்நாட்டிலிருந்த மரந்தை என்னும் நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடுநாட்டில் இருந்த கோவலூரும் இவரால் பாராட்டப்பட்டதால் இவர் அந்நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். 

பாடலின் பின்னணி: தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன்  விரும்பும் மனைவியாகவும் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள்.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 

அருஞ்சொற்பொருள்: கொங்குபூந்தாது; முண்டகம் = முள்ளிச் செடி; மணி = நீலமணி; கேழ் = நிறம்; மா = கருமை; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இம்மை = இப்பிறவி ; மறுமை = மறு பிறவி; நேர்தல் = பொருந்துதல் .

உரை: அணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச்செடியும்நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையுமுடைய நெய்தல் நிலத் தலைவஇப்பிறப்பு நீங்கிநமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்றவளாக (மனைவியாக) இருக்க வேண்டும்.

விளக்கம்: முள்ளிச் செடி முட்கள் நிறைந்த செடி. அந்த முள்ளிச் செடியின் இடையே மணமுள்ள தாதுக்கள் மிகுந்த மலர் இருப்பது போல், பரத்தையோடு கூடித் தன்னைப் பிரிந்து தனக்குக் கொடுமைகள் பலசெய்தாலும், தன் கணவன் தன்மீது மிகுந்த அன்புடையவன் என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.


நீயாகியர் என் கணவன்என்றதால் மறுபிறவியிலும் தலைவன்தான் அவளுக்குக் கணவன் என்பது தெளிவு. ஆகவே, தலைவிதான் அவனுக்கு மனைவி என்பதும் பெறப்படுகிறது. ஆனால், ”யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று தலைவி கூறுவது, அவள் மனைவியாக மட்டுமல்லாமல் அவனால் விரும்பப்படுபவளாகவும் இருக்க விரும்புகிறாள் என்பதைக் குறிக்கிறது. அதாவது, மறுபிறவிகளில் தன் கணவன் வேறு பெண்களை விரும்பாமல் தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என்ற கருத்தையும் தலைவி வலியுறுத்துகிறாள்.

48. பாலை - தோழி கூற்று

48. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார்.  இவரது இயற்பெயர் உத்திரை. உத்திரம் என்னும் விண்மீன் நிலவிய நாளில் பிறந்ததால் இவர் உத்திரையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் ஒருபெண்பாற் புலவர்.  இவர் பூங்கண் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் பூங்கண் உத்திரையார் என்று அழைக்கப்பட்டார். இவர், புறநானூற்றில் ஒரு செய்யுளும் (277) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (48, 171) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள். பூந்தாதுக்களால் செய்யப்பட்ட பாவையைக் கையில் வைத்திருக்கிறாள். நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகமாகிக் கொண்டிருகிறது. வெயிலின் கொடுமையால் அவள் கையில் உள்ள பாவை வாடிக் கொண்டிருக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் காணப்படுகிறாள். அங்கு, சில பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளயாடிக்கொண்டிருக்கிறார்கள். தாதுக்காளால் செய்யப்பட்ட பாவை வாடுவதைக் கண்டு, தலைவி வருத்தத்துடன் செயலற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள், “வெயிலில் அந்தப் பாவை வாடுவது இயற்கை. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்படாதே. எங்களோடு விளையாட வா.” என்று தலைவியை அழைக்கிறார்கள். தலைவியின் வருத்தத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று அவளுடைய தோழிக்குத் தெரியும். ”தலைவன் விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால் தலைவி அவள் கவலையைவிட்டு மகிழ்ச்சியாக இருப்பாளே.” என்று தோழி எண்ணுகிறாள்.

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; பாவை = பொம்மை; கையாறு = செயலொழிந்து அயர்தல் ; ஓம்புதல் = ஒழித்தல், விடுதல்; ஒரை = மகளிர் விளையாட்டு; ஆயம் = கூட்டம்; இனை = வருத்தம்; உழத்தல் =வருத்துதல், செய்தல்; நசை = விருப்பம்; இசைதல் = கிடைத்தல், இயலுதல்.

உரை: ”பூந்தாது முதலிய பொருட்களால் செய்யப்பட்ட, மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவை காலைப் பொழுதில் வாடுவதால் வருந்திச் செயலற்ற நிலையில் இருப்பதை தவிர்ப்பாயாக.” என்று ஒரை ஆடும் மகளிர் கூட்டம் சொல்லிய பிறகும் மிகுந்த வருத்தத்தோடு உள்ள, நல்ல நெற்றியை உடைய தலைவியின் பசலை நீங்க,  இவள் விரும்பும் ஒரு சொல்லைத் தலைவர் கூறமாட்டாரோ?


விளக்கம்: இன்ன பண்புஎன்றது தலைனைக் காணாத நேரம் நீடித்ததால், தலைவி வருத்தமுற்று பசலை நோயைப் பெற்றாள் என்பதைக் குறிக்கிறது.  நசையாகு பண்பின் அன்ன ஒரு சொல்என்றது திருமணம் செய்துகொள்வேன் (வரைந்துகொள்வேன்) என்று தலைவி தலைவனிடமிருந்து கேட்க விரும்பும் சொல்லைக் குறிக்கிறது.

47. குறிஞ்சி - தோழி கூற்று

47. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: நெடுவெண்ணிலவினார். இப்பாடலில்நெடுவெண்ணிலவேஎன்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பதால், இவர் நெடுவெண்ணிலவினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது..
பாடலின் பின்னணி: தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.  ஆகவே, தோழி நிலவை நோக்கி, “ நீ ஓளி தருவதால்தான் தலைவன் இரவில் வருகிறான். அவர்களின் களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், இவ்வாறு நீ நீண்ட நேரம் காய்வது அவர்களின் களவொழுக்கத்திற்கு நீ செய்யும் நல்ல செயலன்று.” என்று கூஊறுகிறாள்.

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 

அருஞ்சொற்பொருள்: கருங்கால் = கரிய அடிப்பக்கம்; வேங்கை = வேங்கை மரம்வீ = பூ; உகுதல் = உதிர்தல்; துறுகல் = பாறை; இரு = பெரிய; குருளை = நரி, நாய், பன்றி, புலி, மான், முயல் ஆகியவற்றின் குட்டி; எல் =இரவு.

உரை: நீண்ட நேரம் எறியும் வெண்ணிலவே! கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பாறை, பெரிய புலிக்குட்டியைப் போலக் காட்சி அளிக்கும் காட்டில் இரவு நேரத்தில் வரும் தலைவருடைய களவொழுக்கத்திற்கு, நீ நன்மை புரியவில்லை.

விளக்கம்: நிலவின் ஒளியிருப்பதால், கருமை நிறமுடைய பாறையின்மேல் விழுந்து கிடக்கும் மஞ்சள் நிறமுள்ள வேங்கை மலர்களைக் கண்டு தலைவன் புலிக்குட்டி என்று எண்ணி அஞ்சக்கூடும். அதுமட்டுமல்லாமல், புலிக்குட்டி இருந்தால், அங்கே மற்ற புலிகளும் இருக்கக்கூடும் என்று தலைவன் எண்ண வாய்ப்பு இருப்பதால், அவனுடைய அச்சம் மிகுதியாகலாம். நிலவொளி  நீண்ட நேரம் இருப்பதால் தலைவன் தலைவியின் களவொழுக்கம் அதிக நேரம் நீடிக்கலாம். இவ்வாறு களவொழுக்கம் தொடர்ந்து நீடித்து நடைபெற்றால், அது தலைவியின் பெற்றோர்களுக்கும் ஊராருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு. பின்னர், களவொழுக்கம் தொடர்ந்து நடைபெற முடியாது. ஆகவே, நீண்ட நேரம் நிலவு காய்வதால், களவொழுக்கத்திற்கு கேடு விளையுமே ஒழிய நன்மை இல்லை என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.  

46. மருதம் - தலைவி கூற்று

46. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: மாமலாடனார். இவருடைய பெயர் மாமிலாடன் என்று சில பிரதிகளில் காணப்படுவதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார். இப்புலவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி:  கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். “இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பத்தை அளிக்கிறது. என்னைத் துன்புறுத்தும் இந்த மாலைப்பொழுதும் தனிமையும் என் கணவர் சென்ற நாட்டிலும் இருக்கும். ஆகவே, அவர் விரைவில் திரும்பி வருவார்என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. 

அருஞ்சொற்பொருள்: ஆம்பல் = அல்லிப்பூ; சாம்பல் = ஒடுக்கல் ; சிறகர் = சிறகு; குரீஇ = குருவி; முன்றில் = முற்றம்; உணங்கல் = உலர்ந்த தானியம் ; மாந்துதல் = உண்ணுதல்; மன்றம் = பொதுவிடம்; தாது = பொடி ; நுண்தாது = நுண்ணிய பொடி; எருவின் நுண்தாது = சாணத்தின் நுண்ணிய பொடி; குடைவன = குடைந்து; இறை = வீட்டின் இறப்பு; பள்ளி = இடம்; வதிதல் = வசித்தல்; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை; இன்றுகொல் = இல்லையோ.

உரை: தோழி, இங்கே, வாடிய அல்லிப்பூவைப் போல் குவிந்த சிறகுகளையுடைய, வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, பொதுவிடத்தில் உள்ள சாணத்தின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி,  வீட்டிறப்பிலுள்ள இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல், பிரிந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதும், தனிமையும், தலைவர் சென்ற நாட்டில், இல்லையோ?


விளக்கம்:   மாலை நேரத்தில், தமக்குரிய இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு இருக்கும் குருவிகளைக் கண்ட தலைவர் தாமும் தம் பிள்ளைகளோடும் தலைவியோடும் சேர்ந்து வாழ்தல் வேண்டும் என்று எண்ணுவார் என்பது குறிப்பு.

45. மருதம் - தோழி கூற்று

45. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.  இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே, ஒரு பாணனைத் தலைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான். தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குத் தூதுவன் வருகிறான். தலைவன் மீண்டும் வரவிரும்புகிறான் என்று தூதுவன் கூறியதைக் கேட்ட தலைவி, தலைவன் வருவதற்குச் சம்மதிக்கிறாள். தலைவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும் அவற்றை எல்லாம்  பொறுத்துக் கொண்டு தலைவன் வரவுக்குத் தலைவி உடன்பட்டதைக் கண்டு தோழி வியக்கிறாள்.


காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 

அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு; வால் = மிகுதி; தழீஇய = தழுவ; மல்லல் = வளமை; எல் = ஒளி, பெருமை; மறுவரல் = மயக்கம், கலக்கம்; தெறு = துன்பம்  ; திணை =  குடி.

உரை: காலையில் எழுந்து, விரைந்து செல்லும் குதிரைகளைத் தேரில் பூட்டி, மிகுந்த அணிகலன்களை அணிந்த பரத்தையரைத், தழுவும் பொருட்டு, வளமை பொருந்திய ஊரையுடைய தலைவன் சென்றான். அவன், மிகுந்த பெருமைக்குரியவன். அவன் மீண்டும் தன்னிடம் வந்தால் அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி மனம் கலக்கம் அடைகிறாள். தலைவியின் மனம் கலங்கக்கூடிய செயலைத் தலைவன் செய்தாலும் அதனை மறந்து அவனைத் தலைவி  ஏற்றுக்கொள்வது துன்பத்திற்குரியதாயினும் அஃது இந்தக் குடியிற் பிறந்தவர் செய்யும் செயல் போலும்.


விளக்கம்:  வாலிழை மகளிர்என்றது மிகுந்த அளவில் அணிகலன்களை அணிந்து, இயற்கை அழகால் அன்றி, அவர்கள் அணிந்திருக்கும் அனிகலன்களின் அழகால்  ஆண்களை மயக்கும் பரத்தையரைக் குறிக்கிறது. உயர்ந்த குடியிற் பிறந்த கற்புடைய மகளிர் தம் தலைவர் கொடுமை புரிந்தாலும்  அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப் பிறப்பிற்குரிய இயல்பு என்னும் கருத்து  குறுந்தொகைப் பாடல்கள் 9 மற்றும் 10 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

44. பாலை - செவிலித்தாய் கூற்று

44. பாலை - செவிலித்தாய் கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். தலைவியின் செவிலித் தாய் ( தோழியின் தாய்) அவர்களைத் தேடி அலைகிறாள். ”நான் தேடிய இடங்களிலும் வந்த வழியிலும் பலரைப் பார்த்தேன், ஆனால் தலைவியைக் காணவில்லையேஎன்று செவிலித்தாய் வருந்துகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. 

அருஞ்சொற்பொருள்: பரி = நடை; நோக்குதல் = ஊன்றிப்பார்த்தல்; வாள் = ஒளி ; அகல் = அகன்ற; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; மீன் = விண்மீன்கள் (நட்சத்திரம்); மன்ற = நிச்சயமாக.

உரை: என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற, (என்மகள் போன்ற) பெண்ணைக் காணவில்லை.


விளக்கம்: ஆகாயத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும் ஒரேஒரு திங்கள் மட்டுமே உண்டு. அதுபோல், மிகுந்து காணப்படும் விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், திங்களைப் போன்ற, அவள் தேடுகின்ற பெண்ணைக் காணவில்லையே என்று செவிலித்தாய் கூறுவதாகத் தோன்றுகிறது

43. பாலை - தலைவி கூற்று

43. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் தலைவர் நினைத்தார். இப்பொழுது அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அதை நினைத்து நான் வருந்துகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. 

அருஞ்சொற்பொருள்: இகழ்தல் = சோர்தல், மறுத்தல்; ஒல்லல் =  இசைதல்; ஆயிடை = அக்காலத்து; ஆண்மை =  மன உறுதி; பூசல் = போராட்டம்; அரா = பாம்பு; நல்லரா = நல்லபாம்பு; கதுவுதல் = பற்றுதல்; அலமலக்குதல் = கலக்கமடைதல்.

உரை: தோழி,  என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார் என்று நான் மனஉறுதியுடன் இருந்ததால், அவருடைய பிரிவைப் பற்றிய எண்ணங்களை முற்றிலும் புறக்கணித்தேன்தான் பிரிந்து செல்லப்போவதை என்னிடம் தெரிவித்தால், நான் அதற்கு உடன்படமாட்டேன் என்று எண்ணித் தன் பிரிவைப்பற்றி என்னிடம் சொல்வதை அவர் புறக்கணித்தார். அப்பொழுது, எங்கள் இருவருடைய மனஉறுதியினால் தோன்றிய போராட்டத்தால் துன்பம் அடைந்த என் நெஞ்சம்இப்பொழுது நல்லபாம்பு கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது.

விளக்கம்: .இகழ்தல் என்பது செய்யவேண்டியதைச் செய்யாமல் சோர்ந்திருப்பதைக் குறிக்கிறது. தலைவன் தன்னிடம் மிகுந்த அன்போடு இருந்ததால் அவன் பிரிந்து செல்வான் என்பதைத் தலைவி எதிர்பார்க்கவில்லை. பிரிவை எதிர்பார்த்திருந்தால், தலைவன் பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைத் தலைவி செய்திருப்பாள். ஆகவேதான்யான் இகழ்ந்தனன்என்று தலைவி குறிப்பிடுகிறாள். பிரிவைப் பற்றித் தலைவியிடம் கூறினால் அவள் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டாள் என்று எண்ணியதால், தலைவன் பிரிவைப் பற்றித் தலைவியிடம் கூறாமல் இருந்தான். ஆகவே, அவனும் தான் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருந்ததால்அவர் இகழ்ந்தனரேஎன்று தலைவி குறிப்பிடுகிறாள்.

தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும்பொழுது, சொல்லாமல் செல்வதும் மரபு என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் அவருடைய குறுந்தொகை உரைநூலில் கூறியுள்ளார். குறுந்தொகைப் பாடல் 79 –இல் தலைவன் சொல்லாமல் பிரிந்து செல்வதில் வல்லவன் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லாமல் சென்றாலும், செல்வதற்கான குறிப்புகளைத் தலைவன் தலைவிக்கு மறைமுகமாக வெளிப்படுத்துவது உண்டு என்பதற்கும் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன என்றும் உ. வே. சா அவர்கள் தம் நூலில் கூறுகின்றார். .

நல்லபாம்பு தீண்டியதனால் தோன்றிய கொடுமை, முதலில் தெரியாமல், நஞ்சு குருதியில் கலந்து தலைக்கேறிய பிறகே தோன்றுவதுபோல், தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் அவன் பிரிந்து சென்ற பின்னரே தோன்றிற்று என்று தலைவி கூறுகிறாள்

42. குறிஞ்சி - தோழி கூற்று

42. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 –இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை. தோழி மட்டும் வருகிறாள். “இனி இரவு நேரங்களில் தலைவி வரமாட்டாள். இதுவரை நீ அவளோடு இரவு நேரங்களில் சந்தித்ததைப் போல் இனிமேல் சந்திக்க முடியாது. அதனால், உனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு குறையும் என்று எண்ண வேண்டாம்.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 

அருஞ்சொற்பொருள்: காமம் = புணர்ச்சி; யாமம் = நள்ளிரவு (இரவு 10 மணி முதல் 2 மணி வரை); கருவி = மேகம்; மா = பெரிய; விடர் = மலைப் பிளப்பு; இயம்புதல் = ஒலித்தல்; தேய்தல் = குறைதல்; வயின் = இடம்.

உரை: நடு இரவில் மலையில் பெய்த பெருமழை, பின்னர் அருவியாக (மலைப்பிளப்புகளில்) ஒலிக்கும் குறிஞ்சிநிலத்தையுடையவனே! தலைவியோடு நீ கூடி மகிழாவிட்டாலும், உன்னிடத்தில் அவளுக்குள்ள நட்பு குறையுமோ?  

விளக்கம்: தலைவன் முதலில் பகல் நேரங்களில் தலைவியைச் சந்தித்தான். பின்னர் இரவு நேரங்களில் சந்தித்தான். இருவருக்கும் இடையே உள்ள காதல் அடுத்த நிலைக்குச் சென்றது. தலைவன் அவளோடு உடலுறவு கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவு நேரங்களில் தலைவனை மறைமுகமாகச் சந்தித்தாலும், அவர்களுடைய நட்பையும் செயல்பாடுகளையும் பலரும் அறிய வாய்ப்பு இருக்கிறது. மற்றும், தலைவனோடு உறவு கொள்வதால் பிற பின்விளைவுகளும் ஏற்படலாம். இதைப் பற்றி எல்லாம் எண்ணிப் பார்த்த தலைவிதலைவனை இரவில் சந்திப்பதை நிறுத்திவிட்டால், அவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று எண்ணுகிறாள். ஆகவே, தன் தோழியை அனுப்பித் தான் இனி தலைவனை இரவு நேரங்களில் சந்திக்க முடியாது எபதையும், அதனால் தான் அவனை விரும்பவில்லை என்றோ அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள நட்பு குறைந்துவிடும் என்றோ அவன் எண்ண வேண்டாம் என்பதையும் தெரிவிக்கிறாள்.


 இரவில் மலையில் பெய்த மழை பின்னர் அருவிகளிலிருந்து விழும் நீரில் இருந்து தெரியவரும் என்பதுதலைவனும் தலைவியும் யாருக்கும் தெரியாமல் உறவு கொண்டாலும், தலைவியின் செயல்பாடுகள், அவள் உடலில் தோன்றும் மாற்றங்கள் ஆகியவற்றால் அவர்களின் உறவைப் பலரும் அறியக்கூடும்என்பதை உள்ளுறை உவமமாகப் புலவர் குறிப்பிடுகிறார்

41. பாலை - தலைவி கூற்று

41. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: அணிலாடு முன்றிலார்.  இவருடைய இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. மக்கள் இல்லாத வீடுகளின் முற்றத்தில் அணில் விளையாடிக்கொண்டிருப்பதை இப்பாடலில் இவர்அணிலாடு முன்றில்என்று குறிப்பிட்டதால்இவர் அணிலாடு முன்றிலார் என்று அழைக்கப்படுகிறார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். தோழி, “ நீ ஏன் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்கிறாள். தலைவி, “என் தலைவர் என்னோடு இருந்த பொழுது நான் மகிழ்ச்சியோடு இருந்தேன். இப்பொழுது அவர் என்னோடு இல்லாததால், நான் பொலிவிழந்து, தனிமையில் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. 

அருஞ்சொற்பொருள்: உழை = பக்கம்; உவத்தல் = மகிழ்தல்; சாறு = திருவிழா; புகலுதல் = மகிழ்தல்; மன்ற = உறுதியாக; அத்தம் = பாலைநிலம்; நண்ணுதல் = நெருங்குதல்; குடி = வீடு; சீறூர் =  சிற்றூர்; முன்றில் = வீட்டு முன்னிடம், முற்றம்; புலம்பு = தனிமை; புல்லென்று = பொலிவிழந்து; அலப்புதல் = வருந்துதல்; ஞான்று = பொழுது, காலம்.

உரை: தோழி, தலைவர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன், திருவிழா நடைபெறும் ஊரில் உள்ளவர்கள் மகிழ்வதைப் போல் நானும் மகிழ்ச்சியோடு இருப்பேன். அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், பாலைநிலத்தில் உள்ள, அழகிய வீடுகளுடன் கூடிய சிறிய ஊரிலிருந்து மக்கள் நீங்கிச் சென்ற பிறகு அணில் விளையாடும் முற்றத்தையுடைய தனிமையான வீட்டைப் போல் நானும் பொலிவிழந்து வருந்துவேன்.

விளக்கம்: ”சாறுகொள் ஊரிற் புகல்வேன்என்றது, இயல்பாக உள்ளதைவிட, விழாக்காலத்தில் மிகுதியான சிறப்பை ஓரூர் கொண்டிருப்பது போல, என் தலைவர் என்னோடு இருக்கும் பொழுது எனது இயற்கை அழகோடு  இன்னும் அதிக மகிழ்ச்சியோடும் அழகோடும் சிறந்து விளங்குவேன் என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. “அணிலாடு முன்றில்என்பது, மக்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில்தான் அணில் ஓடியாடிக்கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. .


Sunday, June 14, 2015

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: செம்புலப் பெயனீரார். இப்பாடலை இயற்றியவரின் இயற்பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பாடலில், “செம்புலப் பெயல் நீர்என்ற அருமையான உவமையை இவர் பயன்படுத்தியதால், இவர் இப்பெயர் பெற்றார் என்று கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள்முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும் சந்தித்துக் கருத்தொருமித்துப் பழகினார்கள்தங்களுடைய காதல்  தொடருமா அல்லது தன் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று காதலி கவலைப்படுகிறாள்.  ”எவ்விதமான உறவும் இல்லாத நாம் நெருங்கிப் பழகுகிறோம். நம்முடைய நெஞ்சங்கள் ஒருமித்தன. நாம் பிரிய மாட்டோம்.” என்று உறுதி கூறித் தலைவன்  அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 

அருஞ்சொற்பொருள்: ஞாய் = தாய் (உன்னுடைய தாய்); நுந்தை = உன்னுடைய தந்தை; புலம் = நிலம்; செம்புலம் = சிவந்த நிலம்; பெயல் = மழை.

உரை: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும், ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? ஆனால் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன. நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டோம்.

விளக்கம்: யாய், ஞாய், தாய்ஆகிய சொற்கள் முறையே என் தாய், உன் தாய், அவர் தாய்என்பவற்றைக் குறிக்கின்றன. அதுபோல், ”எந்தை, நுந்தை, உந்தைஎன்ற சொற்கள் என் தந்தை, உன் தந்தை, அவர் தந்தைஎன்பவற்றைக் குறிக்கின்றன.

நிலத்தியல்பான் நீர்திரிந்தற்று ஆகும் மாந்தர்க்கு
 இனத்தியல்பது ஆகும் அறிவு. (குறள் 452)

என்றும்,

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
 நீரியைந் தன்னார் அகத்து. (குறள் 1323)

என்றும்  வள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

எவ்வித உறவும் இல்லாத, முன்பின் தெரியாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த பிறகு, அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்கி  அன்புடை நெஞ்சம் கலந்து கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கும்  இப்பாடல் பொருந்துவதாகத் தோன்றுகிறது.


இப்பாடலின் அடிப்படையில் சில திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பாடலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இலண்டன் மாநகரத்தின் தொடர்வண்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை http://www.thehindu.com/thehindu/2001/07/01/stories/1301067c.htm என்ற இணைய தளத்தில் காணலாம்.

39. பாலை - தலைவி கூற்று

39. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் சென்ற வழி மிகவும் வெம்மையான காற்று வீசும் பாலைநிலம் என்று கூறுகிறார்களே! அதைக் கேட்ட பிறகும் நான் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்?” என்று கூறுகிறாள்.

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே. 

அருஞ்சொற்பொருள்: வெம்மை = சூடு; திறல் = வலிமை; வளி = காற்று; பொங்கர் = மரக்கிளை; போந்தென = வீசுவதால்; நெற்று = உலர்ந்த பழம்; உழிஞ்சில் = வாகை மரம்; ஆர்த்தல் = ஒலித்தல்; சுரம்பாலைநிலம்; முனிதல் = வெறுத்தல்; ஆறு = வழி.
உரை: தோழி, என்னுடைய மார்பைத்தழுவி உறங்குவதை வெறுத்த என் தலைவர், என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற வழியானது, வெம்மையான, வலிமையுடைய, விரைவான காற்று  வீசுவதால், வாகை மரத்தின் மரக்கிளைகளில் உள்ள முற்றிய வற்றல் ஒலிக்கும் மலைகளையுடைய, கடத்தற்கரிய பாலைநிலம் என்று கூறுவர்.


38. குறிஞ்சி - தலைவி கூற்று

38. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். தலைவியைக் காண்பதற்குத் தோழி வருகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ திருமணத்திற்குப் பொருள் திரட்டுவதற்காகத்தானே உன் தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் விரைவில் திரும்பி வருவார். பிரிவைப் பொறுத்துக்கொள்என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் மனவலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும். அது எனக்கு இல்லையே! “ என்று கூறுகிறாள்.

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; மஞ்ஞை = மயில்; அறை = பாறை; ஈனுதல் = பெறுதல்; முசு = குரங்கு (கருங்குரங்கு); குருளை = குட்டி; கேண்மை = நட்பு; நன்று = பெருமை; உண்கண் = மை தீட்டிய கண்கள்; உள்ளாது = நினையாது; ஒராங்கு =  ஒரு படியாக; தணத்தல் = பிரிதல்.

உரை: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில்  பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே!


விளக்கம்: குரங்குக் குட்டிகள் மயிலின் முட்டையை உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைலவனுடைய பிரிவால் தலைவியின்  காதல் முறியக்கூடும் என்று உள்ளுரை உவமமாகப் புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது. மயிலின் முட்டையை குரங்குக் குட்டிகள் உருட்டி விளைடுவதைப் போல் தலைவனின் பிரிவினால் அவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் எள்ளி நகையாடப்படுகிறது என்றும் பொருள்கொள்ளலாம்.

37. பாலை - தோழி கூற்று

37. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 16-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண்யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம், அன்பு; நல்கல் = அன்போடு அளித்தல் ; பிடி = பெண் யானை; களைஇய = நீக்குவதற்காக; பெருங்கை = பெரிய துதிக்கை; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); மென் = மெல்லிய; சினை = கிளை; யாஅம் = யா = ஒருவகை மரம் ; பொளித்தல் = கிழித்தல், உரித்தல்.

உரை: தோழி, தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர், நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் சென்ற வழிபெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது.


விளக்கம்: ஆண்யானை அன்போடு தன் பெண்யானையின் பசியைப் போக்குவது போல் தலைவனும் தலைவியின் விருப்பத்திற்கு இணங்கி விரைவில் வருவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

36. குறிஞ்சி - தலைவி கூற்று

36. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுதுஉனக்கு என் நெஞ்சில் எப்பொழுதும் இடமுண்டு. நீ இல்லாமல் நான் இல்லை’” என்று உறுதிமொழி கூறினான். தலைவன் அவ்வாறு உறுதிமொழி கூறியது தோழிக்குத் தெரியும். இப்படி உறுதிமொழி கூறியவன் தலைவியைவிட்டு இத்தனை நாட்கள் பிரிந்திருக்கிறானே என்று தோழி வருத்தப்படுகிறாள். ”என் தலைவன் கூறிய உறுதிமொழிதான் உன் வருத்தத்திற்குக் காரணமா? தலைவனின் பிரிவினால் வரும் துயரத்தை நானே பொறுத்துக்கொண்டிருக்கும் பொழுது, நீ இவ்வாறு வருந்துவது முறையன்று.” என்று தலைவி தோழிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே. 

அருஞ்சொற்பொருள்: துறுகல் = பாறை; அயல் = அருகில்; மாணை = ஒரு வகைக் கொடி; மா = பெரிய; துஞ்சுதல் = தூங்குதல்; களிறு = ஆண் யானை; இவர்தல் = ஏறுதல் (படர்தல்) ; களன் = இடம் ; அல் = வறுமை (இல்லாமல்) ; நற்றோள் = நல்ல தோள்; மணத்தல் = கூடுதல் ; ஞான்று = பொழுது; தா = கேடு; தாவா = கெடாத (நல்ல) ; வஞ்சினம் = சூளுரை (உறுதிமொழி); வயின் = இடம் (ஏழாம் வேற்றுமை உருபு).

உரை: தோழி, என்னுடைய காதலன், பாறையின் அருகில் உள்ள, மாணை என்னும் பெரிய கொடியானது, தூங்குகின்ற ஆண்யானையின்மேல் படரும் குன்றுகளை உடைய நாட்டிற்குத் தலைவன். அவன் என்னோடு கூடிய (எனது நல்ல தோளை அணைத்த) பொழுது, “உனக்கு எப்பொழுதும் என் நெஞ்சில் இடமுண்டு; நீ இல்லாவிட்டால் நான் இல்லைஎன்று கூறிய உறுதிமொழிதான் உன்னிடம் காணப்படும் வருத்தத்திற்குக் காரணமோ?


விளக்கம்: தன்மேல் படரும் கொடியைவிட்டு யானை விலகுவதைப்போல் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியக்கூடும் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.