Tuesday, June 30, 2015

44. பாலை - செவிலித்தாய் கூற்று

44. பாலை - செவிலித்தாய் கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். தலைவியின் செவிலித் தாய் ( தோழியின் தாய்) அவர்களைத் தேடி அலைகிறாள். ”நான் தேடிய இடங்களிலும் வந்த வழியிலும் பலரைப் பார்த்தேன், ஆனால் தலைவியைக் காணவில்லையேஎன்று செவிலித்தாய் வருந்துகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. 

அருஞ்சொற்பொருள்: பரி = நடை; நோக்குதல் = ஊன்றிப்பார்த்தல்; வாள் = ஒளி ; அகல் = அகன்ற; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; மீன் = விண்மீன்கள் (நட்சத்திரம்); மன்ற = நிச்சயமாக.

உரை: என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற, (என்மகள் போன்ற) பெண்ணைக் காணவில்லை.


விளக்கம்: ஆகாயத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும் ஒரேஒரு திங்கள் மட்டுமே உண்டு. அதுபோல், மிகுந்து காணப்படும் விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், திங்களைப் போன்ற, அவள் தேடுகின்ற பெண்ணைக் காணவில்லையே என்று செவிலித்தாய் கூறுவதாகத் தோன்றுகிறது

No comments:

Post a Comment