46. மருதம் - தலைவி
கூற்று
பாடியவர்: மாமலாடனார். இவருடைய பெயர் மாமிலாடன் என்று சில பிரதிகளில் காணப்படுவதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார். இப்புலவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
பாடலின்
பின்னணி:
கணவனைப் பிரிந்து
வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத்
தோழி வருகிறாள். “இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பத்தை அளிக்கிறது.
என்னைத் துன்புறுத்தும் இந்த மாலைப்பொழுதும் தனிமையும் என் கணவர் சென்ற
நாட்டிலும் இருக்கும். ஆகவே, அவர் விரைவில்
திரும்பி வருவார்” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
அருஞ்சொற்பொருள்: ஆம்பல் = அல்லிப்பூ; சாம்பல் = ஒடுக்கல் ; சிறகர் = சிறகு; குரீஇ = குருவி; முன்றில் = முற்றம்; உணங்கல் = உலர்ந்த தானியம் ; மாந்துதல் = உண்ணுதல்; மன்றம் = பொதுவிடம்; தாது = பொடி ; நுண்தாது = நுண்ணிய பொடி; எருவின் நுண்தாது = சாணத்தின் நுண்ணிய பொடி; குடைவன = குடைந்து; இறை = வீட்டின் இறப்பு; பள்ளி = இடம்; வதிதல் = வசித்தல்; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை; இன்றுகொல் = இல்லையோ.
உரை: தோழி, இங்கே, வாடிய அல்லிப்பூவைப் போல் குவிந்த
சிறகுகளையுடைய, வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, பொதுவிடத்தில்
உள்ள சாணத்தின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டிறப்பிலுள்ள இடத்தில் தம்முடைய
குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல்,
பிரிந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதும், தனிமையும், தலைவர் சென்ற நாட்டில், இல்லையோ?
விளக்கம்: மாலை
நேரத்தில்,
தமக்குரிய இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு இருக்கும் குருவிகளைக் கண்ட
தலைவர் தாமும் தம் பிள்ளைகளோடும் தலைவியோடும் சேர்ந்து வாழ்தல் வேண்டும் என்று எண்ணுவார்
என்பது குறிப்பு.
No comments:
Post a Comment