43. பாலை - தலைவி கூற்று
பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 –இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் தலைவர் நினைத்தார். இப்பொழுது அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அதை நினைத்து நான் வருந்துகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
அருஞ்சொற்பொருள்: இகழ்தல் = சோர்தல், மறுத்தல்; ஒல்லல்
= இசைதல்; ஆயிடை = அக்காலத்து; ஆண்மை
= மன உறுதி; பூசல் = போராட்டம்; அரா
= பாம்பு; நல்லரா = நல்லபாம்பு;
கதுவுதல் = பற்றுதல்; அலமலக்குதல்
= கலக்கமடைதல்.
உரை: தோழி, என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து
செல்லமாட்டார் என்று நான் மனஉறுதியுடன் இருந்ததால், அவருடைய பிரிவைப்
பற்றிய எண்ணங்களை முற்றிலும் புறக்கணித்தேன். தான் பிரிந்து செல்லப்போவதை என்னிடம்
தெரிவித்தால், நான் அதற்கு உடன்படமாட்டேன் என்று எண்ணித் தன்
பிரிவைப்பற்றி என்னிடம் சொல்வதை அவர் புறக்கணித்தார். அப்பொழுது,
எங்கள் இருவருடைய மனஉறுதியினால் தோன்றிய போராட்டத்தால் துன்பம் அடைந்த
என் நெஞ்சம், இப்பொழுது
நல்லபாம்பு கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது.
விளக்கம்: .இகழ்தல்
என்பது செய்யவேண்டியதைச் செய்யாமல் சோர்ந்திருப்பதைக் குறிக்கிறது. தலைவன் தன்னிடம் மிகுந்த அன்போடு இருந்ததால் அவன் பிரிந்து செல்வான் என்பதைத்
தலைவி எதிர்பார்க்கவில்லை. பிரிவை எதிர்பார்த்திருந்தால்,
தலைவன் பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைத் தலைவி
செய்திருப்பாள். ஆகவேதான் “யான் இகழ்ந்தனன்”
என்று தலைவி குறிப்பிடுகிறாள். பிரிவைப் பற்றித்
தலைவியிடம் கூறினால் அவள் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டாள் என்று எண்ணியதால்,
தலைவன் பிரிவைப் பற்றித் தலைவியிடம் கூறாமல் இருந்தான். ஆகவே, அவனும் தான் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருந்ததால்
“அவர் இகழ்ந்தனரே” என்று தலைவி குறிப்பிடுகிறாள்.
தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும்பொழுது, சொல்லாமல் செல்வதும்
மரபு என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள்
அவருடைய குறுந்தொகை உரைநூலில் கூறியுள்ளார். குறுந்தொகைப் பாடல்
79 –இல் தலைவன் சொல்லாமல் பிரிந்து செல்வதில் வல்லவன் என்று தலைவி தோழியிடம்
கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லாமல் சென்றாலும்,
செல்வதற்கான குறிப்புகளைத் தலைவன் தலைவிக்கு மறைமுகமாக வெளிப்படுத்துவது
உண்டு என்பதற்கும் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன என்றும் உ. வே. சா அவர்கள் தம் நூலில் கூறுகின்றார். .
நல்லபாம்பு
தீண்டியதனால் தோன்றிய கொடுமை, முதலில் தெரியாமல், நஞ்சு குருதியில் கலந்து தலைக்கேறிய பிறகே தோன்றுவதுபோல், தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் அவன் பிரிந்து சென்ற பின்னரே தோன்றிற்று
என்று தலைவி கூறுகிறாள்.
No comments:
Post a Comment