Monday, April 18, 2016

182. தலைவன் கூற்று

182. தலைவன் கூற்று

பாடியவர்: மடல் பாடிய மாதங்கீரனார்.  மடலேற்றத்தைப் பற்றிய செய்தியைத் தம் செய்யுளில் குறிப்பிடுவதால் இவர்மடல் பாடிய என்னும் அடைமொழியைப் பெற்றார். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும், (182) நற்றிணையில் ஒருபாடலும் (377) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். அந்தப் பெண்ணின் தோழியிடம் அப்பெண்ணின்மீது தான் கொண்ட காதலைக் கூறி, அவளைச் சந்திப்பதற்கு உதவி புரியுமாறு வேண்டுகிறான். அப்பெண் அவனை விரும்பவில்லை என்பதை அறிந்த தோழி, தலைவனின் வேண்டுகோளை ஏற்க மறுத்தாள். தோழியால் கைவிடப்பட்ட தலைவன் தன் நெஞ்சை நோக்கி, “அந்தப் பெண்ணுக்கு நம்மீது இரக்கம் இல்லை. அவள் நம் வேண்டுகோளை ஏற்கவில்லை. இனி, தோழியைத் தூதுவிட்டுப் பயனில்லை. அவளை அடைவதற்கு மடலேறுவதுதான் சிறந்த வழி. அதுவே நாம் அவளுக்கு அனுப்பும் தூதாகும்என்று கூறுகிறான்.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்பு அணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே. 

கொண்டு கூட்டு: கலிழ் கவின் அசை நடைப் பேதை  மெலிந்திலள்.  நாம் விடற்கு அமைந்த தூது விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டிவெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றிஒருநாள் மருங்கில் பெருநாண் நீக்கித்தெருவின் இயலவும் தருவதுகொல்லோ

அருஞ்சொற்பொருள்: விழு = சிறந்த; தலை = உச்சி; பெண்ணை = பனை; விளைவு = முதுமை; மா = குதிரை; மடல் = பனை மட்டை; மாமடல் = பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை போன்ற உருவம்; தார் = மாலை; என்பு = எலும்பு; மருங்கு = பக்கம்; இயலுதல் = இழுக்கப்படுதல்; கலிழ்தல் = ஒழுகுதல்; கவின் = அழகு; அவிர் = ஒளி; பேதை = இளம்பெண்; மெலிதல் = இளைத்தல் (இரங்குதல்).


உரை: நெஞ்சே, அழகு ஒழுகும் அசைந்த நடையையுடைய தலைவி, நம்மிடத்தில் இரக்கம் இல்லாதவளாக இருக்கிறாள்.  நாம் அத் தலைவிக்கு விடுகின்ற தூது,  சிறந்த உச்சியையுடைய பனைமரத்தின் முதிர்ந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை முறையாக அணிவித்து, நாம் வெண்ணிறமான எலும்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அக்குதிரையின் மேல் ஏறி அமர்ந்து, ஒருநாள் என்னுடைய பெரிய  நாணத்தை விட்டுவிட்டுத் தெருவில் செல்வது ஆகும்.

181. தலைவி கூற்று


181. தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளிமங்கலங் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 76 - இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள்ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல் - தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறுதல்; யற்பட மொழிதல் - தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறுதல்)
கூற்று விளக்கம்: தலைவனுக்குப் பரத்தையோடு தொடர்பு இருப்பதால், தோழி தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “நமக்கு  எவ்வளவோ கடமைகள் இருக்கும்பொழுது, தலைவரைப் பற்றிப் இழிவாகப் பேசுவது முறையன்றுஎன்று கூறுகிறாள். .

இதுமற்று எவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. 

கொண்டு கூட்டு: தோழி! இருமருப்பு எருமை ஈன்ற அணிக் காரான்உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கு,  துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி,  இது மற்று எவனோ?

அருஞ்சொற்பொருள்: மற்றுஅசை; எவன் = ஏன்; அசைதுனி = முதிர்ந்த ஊடல்; இன்னர் = இத்தகையவர்; இன்னா = இனிமையில்லாத; கிளவி = கூற்று; இரு = பெரிய; மருப்பு = கொம்பு; ஈனுதல் = பெறுதல்; அணி = அண்மை; காரான் = எருமை; யாத்த = கட்டிய; குழவி = கன்று; பால் = பக்கம்; ஆர்தல் = உண்ணுதல்; திருமனை = செல்வப் பொருந்திய இல்லம்; கடம் = கடமை; பூணல் = மேற்கொள்ளல்.

உரை: தோழி! பெரிய கொம்புகளையுடைய எருமையினத்தைச் சேர்ந்த பெண்ணெருமை ஒன்றை, அது அண்மையில் ஈன்ற கன்றின் அருகேயே உழவன் கட்டியிருக்கிறான். அப் பெண்ணெருமை, தன் கன்றின் பக்கத்திலிருந்து விலகிச் செல்லாமல், அங்கேயே உள்ள பசிய பயிர்களை மேய்கிறது. அத்தகைய ஊரின் தலைவனது செல்வம் பொருந்திய இல்லத்தில், பல கடமைகளை மேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு, நாம் அவரோடு ஊடியிருக்கும் இந்த நேரத்தில், அவர் இத்தகையவர் என்று பழிச்சொற்களைப் பேசுவதால் என்ன பயன்?

சிறப்புக் குறிப்பு:   தலைவன் பரத்தையரிடம் சென்றிருந்த காலத்தில் தலைவி வருத்தத்தோடு இருந்தாள். அவளுக்கு ஆதரவாக இருக்க விரும்பிய தோழி, தலைவனின் பரத்தமையைப் பற்றி இழிவாகப் பேசினாள். தன் கணவனைப் பற்றித் தோழி இழிவாகப் பேசியதை விரும்பாத தலைவி, “அவரோடு நாம் ஊடி இருக்கும்பொழுது அவரைப் பற்றிக் குறை கூறுவதனால் ஒரு பயனுமில்லை. நாம் இன்பத்தை மட்டுமே விரும்பும் இளமைப் பருவத்தைக் கடந்து முதுமைப் பருவத்தை அடைந்தவர்கள். நாம் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. ஆகவே, தலைவர் எப்படி இருப்பினும் நாம் நம் கடமைகளைச் செய்வதுதான் முறைஎன்று தோழியிடம் கூறுகிறாள்.


எருமை தன் கன்றின் அருகிலேயே மேய்கிறதுஎன்றது, தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமலேயே, அவளோடு தன் வீட்டில் இருந்துகொண்டு அவ்வப்பொழுது பரத்தையரோடு தொடர்பு கொண்டான் என்றும் பொருள்கொள்ளுவதற்கு இடமளிக்கிறது.

180. தோழி கூற்று

180. தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். இவறைப் பற்றிய செய்திகளைப் பாடல் 30 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது (உறுதியாகச் சொல்லுதல்).
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர் சென்ற இடத்தில் தாம் விரும்பிய பொருளைப் பெற்றாரோ? இல்லையோ? அவர் பொருளை பெற்றிருப்பாரானால் உடனே மீண்டு வருவார்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாஅடி
இருங்களிற்று இனநிரை ஏந்தல் வரின்மாய்ந்து
அறைமடி கரும்பின் கண்ணிடை அன்ன
பைதல் ஒருகழை நீடிய சுரன்இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே, அல்குல்
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத்தாம் சென்ற நாட்டே.

கொண்டு கூட்டு: பழூஉப்பல் அன்ன பருஉகிர்ப் பா அடி இருங்களிற்று இனநிரை ஏந்தல் வரின், மாய்ந்து அறைமடி கரும்பின் கண்ணிடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்துநம் அல்குல் அவ்வரி வாட  வன்பர் ஆகத் துறந்தோர், தாம் சென்ற நாட்டே பொருளே எய்தினர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: பழு = பேய்; பரு = பருமை; உகிர் = நகம்; பா = பரவுதல்; இரு = பெரிய; களிறு = யானை; இனம் = கூட்டம்; நிரை = வரிசை; ஏந்தல் = தலைவன்; மாய்ந்து = அழிந்து; அறை = பாத்தி; மடிதல் = வீழ்தல்; கண் = கணு; பைதல் = வருத்தம்; கழை = மூங்கில்; நீடிய = ஓங்கிய; சுரன் = பாலை நிலம்; இறந்து = கடந்து; எய்துதல் = அடைதல்; வரி = தேமல்; வன்பர் = வன்னெஞ்சினர் ( அன்பில்லாதவர்); அல்குல் = இடை.

உரை:, பேயின் பற்களைப் போன்ற, பருத்த நகங்களையும் பரந்த பாதங்களையும் உடைய  பெரிய யானைக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கி வந்த யானை புகுந்ததால், அழிந்து,  பாத்தியில் வீழ்ந்த கரும்புகளின், கணுக்களின் இடையேயுள்ள பகுதியைப் போன்ற,  வருத்தத்திற்குரிய ஒற்றை மூங்கில், மட்டும் ஓங்கிவளர்ந்து நிற்கும்  பாலைநிலத்தைக் கடந்து, நமது இடையில் உள்ள அழகிய தேமல் வாடும்படி (நாம் வாடும்படி),  நம்மைப் பிரிந்த வன்னெஞ்சினரான தலைவர் தாம் போன இடத்தில் தேடிய பொருளைப் பெற்றாரோ? இல்லையோ?


சிறப்புக் குறிப்பு: யானையின் பாதத்தில் உள்ள நகத்திற்குப் பேயின் பல் உவமை. யானைகள் கூட்டமாகப் போகும்பொழுது அக்கூட்டத்திற்குமுன் ஒரு வலிய களிறு (ஆண் யானை) செல்லுவது வழக்கம். இங்கு ஏந்தல் என்றது தலைமை யானையைக் குறிக்கிறது. யானையால் முறிக்கப்பட்ட கரும்பின் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையிலுள்ள அளவே வளர்ந்த ஒற்றை மூங்கில் மட்டுமே என்றதால் அது வருத்தத்திற்கு உரியதாயிற்று.

179. தோழி கூற்று

179. தோழி கூற்று

பாடியவர்: குட்டுவன் கண்ணனார்.  இவரது இயற்பெயர் கண்ணன். இவர் குட்ட நாட்டில் இருந்ததால் குட்டுவன் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார். சேரருக்கு குட்டுவன் என்ற ஒருபெயரும் உண்டு. ஆகவே, இவர் சேரர் மரபினர் என்று கருதுவாரும் உளர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவுகடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியோடு அளவளாவுவது வழக்கம். ஒருநாள் அவன் வேட்டையாடிய பிறகு தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்தபொழுது கதிரவன் மறைத்து இருள் சூழ ஆரம்பித்ததுஅவனைப் பார்த்த தோழி, “இப்பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டதுஇன்றிரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக என்று கூறுகிறாள். இரவில் திரும்பிப் போனால், போகும் வழியில், தலைவனுக்கு இன்னல்கள் நேருமோ என்று அஞ்சிய தோழி அவனை இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதால், தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று தோழி கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய உதுஎம் ஊரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே. 

கொண்டு கூட்டு: ஐய! கல்லென் கானத்து, கடமா ஆட்டி எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தனசெல்லல்! ஓங்குவரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கில் குவட்டிடையது. உது எம் ஊர்.

அருஞ்சொற்பொருள்: கல் = ஒலிக் குறிப்பு; கானம் = காடு; கடமா = ஒரு விலங்கு; ஆடி = வேட்டை ஆடி; எல் = வெயில், ஓளிஞமலி = நாய்; அடுக்கம் = மலைப்பக்கம்; குவை = கூட்டம்; கழை = மூங்கில்; கயவாய் = ஆழமான வாய், பெரிய வாய்; கூழை = குட்டையானது; குவடு = மலையுச்சி.

உரை: ஐய! கல்லென்னும் ஆரவாரமான ஓசையையுடைய காட்டில், கடமாவை நீ வேட்டையாடினாய். இப்பொழுது, பகற்பொழுது மங்கியது.  வேட்டை ஆடுவதற்கு உனக்கு உதவியாக இருந்த நாய்களும் களைப்பாக இருக்கின்றன. இப்பொழுது, நீ திரும்பிச் செல்ல வேண்டாம். உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனடையைக் கிழித்த, கூட்டமாக வளர்ந்துள்ள பசிய மூங்கில்களின் குருத்தை, ஆழ்ந்த வாயையும் பேதைமையையும் உடைய யானைகள் தின்றன.  யானைகள் தின்றதால் குட்டையாகிய மூங்கிலையுடைய, மலையுச்சியின் இடையே எமது ஊர் உள்ளது.


178. தோழி கூற்று

178. தோழி கூற்று

பாடியவர்: நெடும்பல்லியத்தையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் நெடும்பல்லியத்தனாரின் உடன் பிறந்தவர் என்று சிலர் கருதுகின்றனர். பலவகையான பல்லியங்களில் (இசைக்கருவிகளில்) பயிற்சி உடையவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.  இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியாக வாழும் இல்லத்திற்குத் தோழி சென்றாள்.  தலைவன் தலைவியொடு கூடுவதற்கு ஆவலாக இருப்பதைக் கண்ட தோழி, “தலைவி எப்போழுதும் உன்னோடு இருக்கும்பொழுதே இவ்வளவு விரைகின்ற நீ, களவுக்காலத்தில், அவள் காண்பதற்கு அரியவளாக இருந்தபொழுது எப்படிப் பொறுத்துக் கொண்டிருந்தாயோ என்பதை நினைத்து வருந்துகிறேன்என்றாள்.

அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.

கொண்டு கூட்டு: அயிரை பரந்த அம்தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர், நீர்வேட் டாங்கு, இவள் இடைமுலைக் கிடந்து நடுங்கலானீர்!
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனிர்.  யான் நோகு.

அருஞ்சொற்பொருள்: அயிரை = அயிரை மீன்; பரத்தல் = மிகுதல்; அம் = அழகிய; தண் = குளிர்ச்சி; பழனம் = நீர்நிலை; ஏந்தல் = உயர்ச்சி; ஏந்தெழில் = மிகுந்த அழகு; தூம்பு = துளை; திரள்கால் =திரண்ட தண்டு; குறுநர் = பறிப்போர்; இடைமுலை = முலையிடை; தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை; அரியம் ஆகிய காலை = காண்பதற்கு அரிய களவுக் காலத்தில்; நோன்றனிர் = துன்பங்களைப் பொறுத்தீர்; நோகு = வருந்துகிறேன்.

உரை: அயிரைமீன்கள் நிறைந்த, அழகிய குளிர்ந்த நீர்நிலையில்நீர்பரப்பின் மேலெழுந்து நிற்கும் அழகுடைய மலர்களாகிய, உள்ளேதுளையையுடைய, திரண்ட தண்டுகளைக்கொண்ட ஆம்பலைப் பறிப்போர், நீருக்குள்ளே இருந்தும் குடிநீருக்கு வேட்கை கொண்டதுபோல், நீர் இத்தலைவியின் முலையிடத்தே உறங்கிய பின்பும், காமவேட்கையால் நடுங்குகின்றீர். யாம், கன்னிப் பெண்களும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, எங்களைக் காண்பதற்கு அரியதாக இருந்த களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர் போலும்; நான் இப்போது அதனை எண்ணி வருந்துகிறேன்.


சிறப்புக் குறிப்பு: ”குடிப்பதற்குத் தகுந்த நீர் உள்ள குளத்தில் இருந்துகொண்டு ஆம்பல் மலரைப் பறிப்பவர், நீர் வேட்கை அடைந்தது போல், உன்னுடைய வேட்கையை முற்றிலும் தீர்ப்பதற்கு உன் மனைவி எப்பொழுதும் உன்னோடு இருக்கும் பொழுதும் நீ காமவேட்கையால் நடுங்குகிறாய். ஒருமாதத்தில் ஒருநாள் மட்டுமே தோன்றும் மூன்றாம் பிறை காண்பதற்கு அரியது. அதுபோல், நாங்கள் களவுக் காலத்தில் காண்பதற்கரியவர்களாக இருந்த பொழுது நீ எப்படிப் பொறுத்துக்கொண்டிருந்தாய் என்பதை நினைத்து நான் வருந்துகிறேன்என்று தோழி கூறுகிறாள்.

177. தோழி கூற்று

177. தோழி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வரப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அவனை நினைத்து வருத்தத்தோடு இருக்கும் தலைவியிடம் அச்செய்தியைக் கூறுகிறாள்.

கடல்பாடு அவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாம்தம்
புலப்பினும் பிரிவுஆங்கு அஞ்சித்
தணப்புஅருங் காமம் தண்டி யோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! கடல் பாடு அவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென்று. மன்றம் அம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பை என நரலும். நாம் தம் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அரும் காமம் தண்டியோர் அவர் இன்று வருவர் கொல்?

அருஞ்சொற்பொருள்: பாடு = ஒலி; அவிந்துஅடங்கி; கானல் = கடற்கரைச் சோலை; மயங்குதல் = மாறுபடுதல் ( ஒளி மங்குதல்); கழி = உப்பங்கழி; புலென்றன்று = பொலிவிழந்தது; மன்றம் = பொதுவிடம்; பெண்ணை = பனை; பை என = மென்மையாக; நரலுதல் = ஒலித்தல்; கூவுதல்; பலத்தல் = ஊடுதல்; ஆங்கு = அசைச்சொல்; தணப்பு = பிரிவு; தண்டுதல் = வசூலித்தல் (வலித்து அணைத்துக் காம இன்பத்தை நுகர்தல்); கொல் = அசைச்சொல்.

உரை: தோழி! கடல் ஒலி அடங்கியது.  கடற்கரைச் சோலை ஒளி மங்கியது.  துறையையும் நீரையும் உடைய கரிய உப்பங்கழி,  பூக்கள் கூம்பியதனால் அழகிழந்தது. பொதுவிடத்தில் உள்ள அழகிய பனைமரத்தின் மடலில் வாழும் அன்றிற் பறவையும், மெல்லக் கூவுகின்றது. முன்பு நீ அவரோடு ஊடினாலும், உன்னைப் பிரிவதற்கு அஞ்சி,  நீங்குதற்கரிய காம இன்பத்தை உன்னுடன் நன்றாக அனுபவித்த உன் தலைவர்  இன்று வருவார்.

சிறப்புக் குறிப்பு: கடல் ஒலி அடங்குதல் முதலியன இரவு வந்ததைக் குறிக்கின்றன. கடல் ஒலியடங்குதலாவது, மீனவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அவர்களுடைய இல்லங்களுக்குச் சென்றதால், அவர்கள் எழுப்பும் ஆரவாரம் அடங்கியது என்பதைக் குறிக்கிறது.


இப்பாடலைத் தோழியின் கூற்றாகக் கருதாமல் தலைவியின் கூற்றாகக் கருதலாம்.  தலைவனைக் காணத் துடிக்கும் தலைவி, ”இன்று வருவர் கொல்?” என்று தோழியிடம் கேட்பதாக இப் பாடலுக்குப்  பொருள் கொள்ளுதல் சிறந்ததாகத் தோன்றுகிறது.