Monday, April 18, 2016

178. தோழி கூற்று

178. தோழி கூற்று

பாடியவர்: நெடும்பல்லியத்தையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் நெடும்பல்லியத்தனாரின் உடன் பிறந்தவர் என்று சிலர் கருதுகின்றனர். பலவகையான பல்லியங்களில் (இசைக்கருவிகளில்) பயிற்சி உடையவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.  இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியாக வாழும் இல்லத்திற்குத் தோழி சென்றாள்.  தலைவன் தலைவியொடு கூடுவதற்கு ஆவலாக இருப்பதைக் கண்ட தோழி, “தலைவி எப்போழுதும் உன்னோடு இருக்கும்பொழுதே இவ்வளவு விரைகின்ற நீ, களவுக்காலத்தில், அவள் காண்பதற்கு அரியவளாக இருந்தபொழுது எப்படிப் பொறுத்துக் கொண்டிருந்தாயோ என்பதை நினைத்து வருந்துகிறேன்என்றாள்.

அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.

கொண்டு கூட்டு: அயிரை பரந்த அம்தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர், நீர்வேட் டாங்கு, இவள் இடைமுலைக் கிடந்து நடுங்கலானீர்!
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனிர்.  யான் நோகு.

அருஞ்சொற்பொருள்: அயிரை = அயிரை மீன்; பரத்தல் = மிகுதல்; அம் = அழகிய; தண் = குளிர்ச்சி; பழனம் = நீர்நிலை; ஏந்தல் = உயர்ச்சி; ஏந்தெழில் = மிகுந்த அழகு; தூம்பு = துளை; திரள்கால் =திரண்ட தண்டு; குறுநர் = பறிப்போர்; இடைமுலை = முலையிடை; தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை; அரியம் ஆகிய காலை = காண்பதற்கு அரிய களவுக் காலத்தில்; நோன்றனிர் = துன்பங்களைப் பொறுத்தீர்; நோகு = வருந்துகிறேன்.

உரை: அயிரைமீன்கள் நிறைந்த, அழகிய குளிர்ந்த நீர்நிலையில்நீர்பரப்பின் மேலெழுந்து நிற்கும் அழகுடைய மலர்களாகிய, உள்ளேதுளையையுடைய, திரண்ட தண்டுகளைக்கொண்ட ஆம்பலைப் பறிப்போர், நீருக்குள்ளே இருந்தும் குடிநீருக்கு வேட்கை கொண்டதுபோல், நீர் இத்தலைவியின் முலையிடத்தே உறங்கிய பின்பும், காமவேட்கையால் நடுங்குகின்றீர். யாம், கன்னிப் பெண்களும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, எங்களைக் காண்பதற்கு அரியதாக இருந்த களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர் போலும்; நான் இப்போது அதனை எண்ணி வருந்துகிறேன்.


சிறப்புக் குறிப்பு: ”குடிப்பதற்குத் தகுந்த நீர் உள்ள குளத்தில் இருந்துகொண்டு ஆம்பல் மலரைப் பறிப்பவர், நீர் வேட்கை அடைந்தது போல், உன்னுடைய வேட்கையை முற்றிலும் தீர்ப்பதற்கு உன் மனைவி எப்பொழுதும் உன்னோடு இருக்கும் பொழுதும் நீ காமவேட்கையால் நடுங்குகிறாய். ஒருமாதத்தில் ஒருநாள் மட்டுமே தோன்றும் மூன்றாம் பிறை காண்பதற்கு அரியது. அதுபோல், நாங்கள் களவுக் காலத்தில் காண்பதற்கரியவர்களாக இருந்த பொழுது நீ எப்படிப் பொறுத்துக்கொண்டிருந்தாய் என்பதை நினைத்து நான் வருந்துகிறேன்என்று தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment