Sunday, July 31, 2016

229. கண்டோர் கூற்று

229.  கண்டோர் கூற்று

பாடியவர்: மோதாசானார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:
பாலை.
கூற்று: இடைச் சுரத்துக் கண்டார், தம்முள்ளே சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் சிலர் அவர்களைக் காண்கிறார்கள். தலைவனும் தலைவியும் சிறுவர்களாக இருந்த பொழுது அவர்கள் சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டதையும்,  இப்பொழுது, அவர்கள் இணைபிரியாத காதலர்களாக இருப்பதையும் கண்ட வழிப்போக்கர்கள், அவர்களை சேர்த்துவைத்த ஊழ்வினையை வியந்து பாராட்டுகிறார்கள்.

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

கொண்டு கூட்டு: இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,  காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப, மன்னோமெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய்,  பாலே, நல்லை மன்ற. அம்ம.

அருஞ்சொற்பொருள்: ஐம்பால்  - சங்க காலத்தில், பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்ற ஐந்து வகையாக அலங்கரித்துக் கொள்வது வழக்கிலிருந்தது. அதனால், ஐம்பால் என்பது பெண்களின் கூந்தலைக் குறிக்கும் சொல் ஆகியது; ஓரி = ஆணின் தலைமுடி ; வாங்குதல் = வளைத்து இழுத்தல்; பரிதல் = ஓடுதல்; ஏது = காரணம்; ஏதில் = காரணமில்லாத; செரு = சண்டை; மன்கழிந்தது என்ற பொருளில் வந்த இடைச் சொல்; அம்மஅசைச்சொல்; பால் = ஊழ்வினை; பிணையல் = பின்னிய மாலை.


உரை: சிறுவயதில்,  இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது சிறிய தலைமுடியை வளைத்து இழுத்து ஓடவும், அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும், ஓயாமல், காரணமில்லாமல் இவர்கள் சிறுசிறு சண்டை போட்டுக்கொள்வார்கள்.  இப்பொழுது, மெல்லிய இயல்புடைய மலர்களால் பின்னிய இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்,  மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கிய  ஊழ்வினையே, நிச்சயமாக நீ நன்மையை உடையாய்.

228. - தலைவி கூற்று

228. - தலைவி கூற்று

பாடியவர்: செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.  சங்க காலத்தில், அரசாங்கத்தின் செய்திகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் பணியினைச் செய்தவர்கள் வள்ளுவர் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, இவர் அத்தகைய பணியைச் செய்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: ’கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நடத்துகிறார்கள். தலைவியைக் காணத் தோழி வருகிறாள். திருமணத்திற்குமுன் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதும் அந்தப் பிரிவிவின் பொழுது தலைவி பொறுமையாக இருந்ததும் தோழிக்கு நினைவிற்கு வருகிறது. “திருமணத்திற்குமுன் நீ உன் தலைவைனைவிட்டுப் பிரிந்திருந்த பொழுது, உன்னால்  வருத்தப்படாமல் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது?” என்று தோழி கேட்கிறாள். அதற்குத் தலைவி, “ அவர் வெகு தொலைவில் இருந்தாலும் அவர் நாட்டிலிருந்து கடல் அலைகள் என் சிற்றூருக்கு வந்தன. அது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அதனால், நான் பொறுமையாக இருக்க முடிந்ததுஎன்று மறுமொழி அளிக்கிறாள்.


வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. 

கொண்டு கூட்டு: நம் துறந்து நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும், நெஞ்சிற்கு அணியர் தண்கடல் நாட்டு வீழ்தாழ் தாழை ஊழ்உறு கொழுமுகை குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரைவந்து பெயரும் என்ப

அருஞ்சொற்பொருள்: வீழ் = விழுது; ஊழ்உறு = முற்றிய; கொழுமுகை = வளமான மொட்டு ; குருகு = நாரை; உளர் = கோதுதல்; விரிபு = விரிந்து; தோடு = மடல்; கானல் = கடர்கரைச் சோலை; நண்ணிய = அருகில் உள்ள; முன்றில் = முற்றம்; சேண் = தொலை; அணியர் = அருகில் உள்ளவர்.


உரை: தோழி!  நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்று, வெகு தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், அவர் என் நெஞ்சிற்கு மிக அருகிலேயே இருந்தார். அவர் இருந்தகுளிர்ந்த  கடலையுடைய நாட்டிலிருந்து, விழுதுகள் தொங்கும் தாழையின், முதிர்ந்த, வளமான மொட்டுகள், நாரைகள் கோதுகின்ற சிறகைப் போல, விரிந்து மடல்களாக மலர்கின்ற, கடற்கரைச் சோலைக்கு அருகில் உள்ள நமது  சிற்றூரின் முன்னிடத்தில், அலைகள் வந்து திரும்பிச் செல்லும் என்பர்.

227. தோழி கூற்று

227. தோழி கூற்று

பாடியவர்: ஓதஞானியார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: முதல் நாள் தலைவன், குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தலைவியைக் காண முடியாமல் திரும்பிச் சென்றான். அவன் வரவில்லை என்று தலைவி எண்னுகிறாள். அவன் மறுநாள் வந்து, தான் முதல் நாள் வந்ததாகவும் தலைவியைக் காண முடியவில்லை என்றும் தோழியிடம் கூறுகிறான்.  “தலைவன் முதல் நாள் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லைஎன்று கூறிய தலைவிக்குத் தோழி, அவன் வந்ததற்கான அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகிறாள்.


பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே. 

கொண்டு கூட்டு: இவண் தேரோன் போகிய கானலான் பூண்வனைந்த அன்ன பொலம்சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து

அருஞ்சொற்பொருள்: பூண் = உலக்கை முதலியவற்றிலிடும் வளையம்; வனைதல் = அலங்கரித்தல்; பொலம் = பொன் (பொன் என்ற சொல்லுக்கு இரும்பு என்று ஒருபொருள் உண்டு. இங்கு பொலம் என்ற சொல், இரும்பைக் குறிக்கிறது); சூடு = சக்கரத்தின் விளிம்பு; நேமி = சக்கரம்; துமித்தல் = வெட்டுதல்; கூழை = குட்டையானது.

உரை: இங்கு, தேரில் வந்த தலைவன் திரும்பிச் சென்ற கடற்கரைச் சோலையில், பூணைப் பதித்தாற் போன்ற, இரும்பால் விளிம்பைஉடைய சக்கரத்தின், வாளைப்போன்ற வாய் வெட்டியதால், வளமான இதழ்கள் ஒடிக்கப்பட்டு  குறைந்து கிடக்கும் நெய்தல் பூக்களும் உள்ளன.

228. - தலைவி கூற்று

226. தலைவி கூற்று

226. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 90 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவால் தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவனோடு கூடி மகிழ்ந்து இருந்ததற்குமுன், தன் கண்களும், தோளும், நெற்றியும் எவ்வளவு அழகாக இருந்தன என்று எண்னித் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 

கொண்டு கூட்டு:
தோழி! வாழி! அல்கலும்  தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்  குருகென மலரும் பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகா ஊங்கு, பூவொடு புரையுங் கண்ணும், வேய்என விறல் வனப்பு எய்திய தோளும், பிறைஎன மதி மயக்குறூஉம் நுதலும் நன்றும் நல்ல. மன்.

அருஞ்சொற்பொருள்: புரையும் = போலும்; வேய் = மூங்கில்; விறல் = தனிச் சிறப்பு  விறல் வனப்பு = பிறிதொன்றற்கு இல்லாத பேரழகு; நுதல் = நெற்றி; மன் = இடைச் சொல் (கழிந்தது என்ற பொருளில் வந்துள்ளது); அல்கல் = இரவு; தயங்கல் = ஒளி செய்தல்; குருகு = நாரை;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நகுதல் = சிரித்தல் (இங்கு கூடி மகிழ்தலைக் குறிக்கிறது); ஊங்கு = முன்பு.


உரை: தோழி! வாழ்க! இரவுதோறும், ஓளி பொருந்திய அலைகளால் மோதப்பட்ட, தாழையின் வெண்மையான பூ, நாரையைப் போல மலரும் இடமாகிய, பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய நெய்தல் நிலத் தலைவனோடு கூடி மகிழுமுன்,  என்னுடைய தாமரை மலரைப் போன்ற கண்களும், மூங்கிலை ஒத்த  சிறப்பான அழகிய தோளும், பிறை என்று கருதும்படிக் காண்போர்  அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும்,  மிகவும் நல்லனவாக இருந்தன. அந்த நிலை இப்பொழுது கழிந்தது!

225. தோழி கூற்று

225.  தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவார்க்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் புறப்படுகிறான். அவனிடம், தோழி, “தலைவி உனக்குச் செய்த நன்மைகளை மறவாதே. விரைவில் பொருள் தேடிவந்து , அவளைத் திருமணம் செய்துகொள்என்று கூறுகிறாள்.

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. 

கொண்டு கூட்டு:
கன்றுதன் பயமுலை மாந்த, முன்றில் தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட ! கெட்ட இடத்து வந்த உதவி, கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின், இவள் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன ஒலிமென் கூந்தல் நினக்கே உரிய.

அருஞ்சொற்பொருள்: பயம் = பயன்; பயமுலை = பயனுள்ள முலை (பாலுள்ள முலை); மாந்துதல் = குடித்தல் ; முன்றில் = வீட்டின் முன்னிடம்; பிடி = பெண்யானை; கல் = மலை; கட்டில் = அரசுக் கட்டில்; வீறு =  சிறப்பு; சீர் = சிறப்பு, அழகு; கலித்தல் = ஆரவாரித்தல்; கலாவம் = மயிலின் தோகை; ஒலித்தல் = தழைத்தல்.

உரை: கன்று தன்னுடைய பால் சுரக்கும் முலையில் உள்ள பாலைக் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது, வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை, பெண்யானை உண்ணும் இடமாகிய,  பெரிய மலைகளை உடைய நாடனே! , தான் துன்புற்ற காலத்தில் பிறரிடமிருந்து பெற்று மகிழ்ந்த உதவியை, அரசுக் கட்டிலாகிய சிறப்பைப் பெற்றவுடன் மறந்து விட்ட மன்னனைப் போல, நீ நாங்கள் செய்த நற்செயல்களை மறவாது இருப்பாயானால், இத்தலைவின், மெல்லிய சிறப்புடைய ஆரவாரிக்கும் மயிலினது தோகையைப் போன்ற, தழைத்த மென்மையான கூந்தல் உனக்கே உரியதாகும்.

சிறப்புக் குறிப்பு: பெண்யானை தன் கன்றுவின் பசியைப் போக்கிக் கொண்டு தானும் உண்ணுவதைப் போல், தலைவன் பொருளை ஈட்டி, விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்து மகிழ்விக்க வேடும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
 சங்க காலத்தில், ஒரு பெண்ணின் கூந்தலுக்கு அவள் கணவன் மட்டுமே உரிமையுடையவன் என்ற கருத்து நிலவியது. இக்கருத்து புறநானூற்றுப் பாடல் 113 –-இல் காணப்படுகிறது
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
 நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.            (புறநானூறு 113, 8-9)


பொருள்: பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்பரைத் தேடி செல்லும் பொழுது, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம் என்று கபிலர் கூறுகிறார்.

224. தலைவி கூற்று

224. தலைவி கூற்று

பாடியவர்: கூவன் மைந்தனார்.இவர் இயற்றியதாக குறுந்தொகையில் உள்ள இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை இறந்து படுமெனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவையைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாமல் தலைவி இறந்துவிடுவாளோ என்று எண்ணி மிகவும் வருந்துகிறாள். தலைவனின் பிரிவினால் வருந்தி வாடும் தலைவி, தோழி வருந்துவதைக் கண்டு இன்னும் அதிகமாக வருந்துகிறாள். தோழி வருத்தப்படுவதைக் கண்ட தலைவி தன்னுடைய வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். தலைவி,  கிணற்றில் விழுந்த பசுவைக் கண்ட ஊமன், தன் வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பதைப் போல் தானும் வருந்துவதாகத் தோழியின் காதுகளில் கேட்குமாறு தனக்குத் தானே கூறிக்கொள்கிறாள்.

கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. 

கொண்டு கூட்டு:
கூவல்  குரால் ஆன் படுதுயர் இராவிற் கண்ட  உயர்திணை ஊமன் போல தோழி நோய்க்கே துயர் பொறுக்கல்லேன்.  கவலை யாத்த, அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா நோயினும் நோய் ஆகின்று.  

அருஞ்சொற்பொருள்: கவலை = பல கிளைவழிகள்; யாத்த = யாமரங்களையுடைய; அவலம் = துன்பம்; எற்றி = நினைத்து; துஞ்சுதல் = உறங்குதல்; கூவல் = கிணறு; குரால் = கபில நிறம் ( கருமை கலந்த பொன்மை); ஆன் = பசு; ஊமன் = ஊமை, கோட்டான்; உயர்திணை ஊமன்  - இங்கு குறிப்பிடப்பட்ட ஊமன் கோட்டான் அன்று  என்பதைக் குறிக்கிறது.

உரை: கிணற்றில் வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை, இரவில் கண்ட, ஊமை அத்துயரத்தை வெளியிட முடியாமல் துன்புற்றது போல, எனக்காகத் தோழி படும் துன்பத்தைப் பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். தோழியின் துயரத்தால் நான் பெற்ற துன்பம், பல கிளைவழிகளும் பல யா மரங்களும் உள்ள நீண்ட வழியில் சென்ற தலைவன் செய்த கொடுமையை நினைத்து நான் தூங்காமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும்,மிகுந்த துன்பமாக இருக்கின்றது.


சிறப்புக் குறிப்பு: தன் துயரத்தைக் கூற இயலாத நிலையில் உள்ள தலைவிக்குக் குராற்பசு கிணற்றில் விழுவதைக் கண்ட ஊமன் உவமை. இந்த உவமைச் சிறப்பினால் இப்புலவர் கூவன் மைந்தனார் என்று அழைக்கப்பட்டதாகக்  கருதப்படுகிறது.  

223. தலைவி கூற்று

223. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “உன் தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடத்தானே சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். நீ வருந்தாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஊரிலே நடைபெறும் திருவிழாவுக்குப் போகலாம் என்று தோழி தலைவியை அழைக்கிறாள். அதைக் கேட்ட தலைவி, தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே. 

கொண்டு கூட்டு: பேரூர் கொண்ட ஆர்கலி விழவில் ”செல்வாம், செல்வாம் என்றி. அன்று, இவண் நல்லோர் நல்ல பலவால்தில்லதழலும் தட்டையும் முறியும் தந்து,  இவை
நினக்கு ஒத்தன எனப் பொய்த்தன கூறிஅன்னை ஓம்பிய ஆய்நலம் என் ஐ கொண்டான். யாம் இனி இன்னம்!. 

அருஞ்சொற்பொருள்: பேரூர் = பெரிய ஊர்; ஆர்கலி = மிகுந்த ஆரவாரம்; இவண் = இங்கே; நல்ல = நல்ல சொற்கள் ( நல்ல நிமித்தங்கள் ); ஆல், தில்ல  - அசைச்சொற்கள்; தழல் = சுற்றுவதால் ஓசை உண்டாக்கும் ஒரு கருவி (கவண்); தட்டை = தட்டுவதால் ஓசை எழுப்பும் கருவி; முறி = தழை; ஓம்பிய = பாதுகாத்த; ஆய் = அழகிய; என்னை =என்+ = என் தலைவன்; இன்னம் = இவ்வாறு; ஆல்அசைச்சொல்.

உரை: முன்பு ஒருநாள், பெரிய ஊரில் நடந்த மிகுந்த ஆரவாரமான விழாவிற்குச்செல்வோம்; செல்வோம்என்று கூறினாய்.  அன்று நாம் விழாவிற்குப் புறப்படும்பொழுது, இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்கள் (நிமித்தங்கள்) பலவாக இருந்தன; கிளிகளை வெருட்டுவதற்குப் பயன்படும் கருவிகளாகிய தழலையும், தட்டையையும், தழையாடையையும், எனக்குக் கொடுத்து,  இவை உனக்கு ஏற்றவைஎன்று சொல்லி, பின்பு பொய்யுரைகள் கூறி,  என் அன்னையால் பாதுகாக்கப்பட்ட என்னுடைய அழகிய பெண்மை நலத்தை என்னிடமிருந்து என் தலைவன் கொள்ளை கொண்டான். அதனால், நான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கின்றேன்.

சிறப்புக் குறிப்பு: முன்பு ஒருநாள், தோழி தலைவியைப் பேரூர் விழாவிற்கு அழைத்துச் சென்றாள். அவள் சொற்களைக் கேட்டு அங்குச் சென்றதால், தலைவி தலைவனைச் சந்தித்தாள். தலைவன், தழல், தட்டை, தழையாடை ஆகியவற்றைத் தலைவிக்குக் கொடுத்துப் பல பொய்யுரைகள் பேசி அவள் பெண்மை நலத்தைக் கொள்ளைகொண்டான். இதுவரை, தலைவி தன் தாயின் பாதுகாப்பினால் தன் பெண்மை நலத்தை இழக்காமல் இருந்தாள். தலைவனைப் பேரூர் விழாவில் சந்த்தித்த பொழுது அதை இழந்தாள். அதை நினைத்து அவள் வருந்துகிறாள்.


222. தலைவன் கூற்று

222.  தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 56 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பெட்ட (பெட்டல் = மிக விரும்புதல்) வாயில் (தூது) பெற்று இரவு (யாசித்தல், கெஞ்சிக் கேட்டல்) வலியுறுத்தல்.
கூற்று விளக்கம்: தலைவன் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவளோடு பழக வேண்டும் என்று விரும்புகிறான். ”அவளை எப்படி அணுகுவது?”,  ”யாரைத் தூதாக அனுப்புவது?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அப்போழுது, தலைவி அவளுடையய தோழி ஒருத்தியுடன் நீராடிக்கொண்டிருப்பதைத் தலைவன் பார்க்கிறான்.  தோழி எதைச் செய்தாலும் தலைவியும்  அதையே செய்கிறாள். அதைப் பார்த்த தலைவன், தலைவியும் அந்தத் தோழியும் மிகவும் நெருங்கிய நட்புடையவர்களாக இருப்பதை உணர்கிறான். ”இந்தத் தோழிதான் தலைவியிடம் தூதாக அனுப்புவதற்குத் தகுந்தவள். அவள் சொன்னால் நம் வேண்டுகோளுக்குத் தலைவி இணங்குவாள்என்று தலைவன் எண்ணுகிறான்.

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. 

கொண்டு கூட்டு: மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்  துளிதலைத் தலைஇய தளிர் அன்னோளேதலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும்!

அருஞ்சொற்பொருள்: புணை = தெப்பம்; புனல் = ஆற்றுநீர்; மாண்ட = மாட்சிமைப்பட்ட (சிறந்த); மாரி = மாரிக்காலம் (மழைக்காலம்); பித்திகம் = பிச்சி; கொழு = கொழுப்பு (வளம்); முகை = மொட்டு; வெரிந் = முதுகு; செவ்வெரிந் = சிவந்த புற இதழ்; உறழுதல் = ஒத்தல்; மழை = குளிர்ச்சி; தலைஇய = பரவியுள்ள.

உரை: நல்ல மழைக் காலத்தில் மலரும் பிச்சியின்,  நீர் ஒழுகும் வளமான அரும்பின், சிவந்த வெளிப்பக்கத்தைப் போன்ற, வளமான கடைப்பகுதியையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், மழைத்துளிகளோடு தன்னிடம் பொருந்தி இருக்கின்ற தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தெப்பத்தின் தலைப் பக்கத்தை இத்தோழி பிடித்துக்கொண்டால் தானும் அதன் தலைப் பக்கத்தைப் பிடித்துக்கொள்கிறாள். தோழி தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொண்டால், தலைவியும் அதன் கடைப்பகுதியைக் பிடித்துக்கொள்கிறாள். தோழி தெப்பத்தைக் கைவிட்டு, நீரோடு சென்றால், தலைவி அங்கும் வருவாள் போலும்.

சிறப்புக் குறிப்பு: .புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி தலைப்புணை, கடைப்புணை என்று வந்தன. மழையில் நனைந்த சிவந்த அரும்பு, நீராடியதால் சிவந்த கண்ணுக்கு உவமை. நீராடிய தூய மென்மையான நீர்த்துளிகள் உள்ள உடலுக்கு மழைத்துளிகளையுடைய மென்மையான தளிர் உவமை.


இங்கு புணை என்றது, முறையாகக் கட்டப்பட்ட  தெப்பத்தைக் குறிக்காமல், வழைமரத் துண்டு அல்லது நீரில் மிதக்கக்கூடிய மரக்கட்டையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்


Sunday, July 17, 2016

221. தலைவி கூற்று

221.  தலைவி கூற்று

பாடியவர்: உறையூர் முதுகொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்கள் ( 221, 390) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும்என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ முல்லை மலர்ந்தது; கார்காலமும் வந்துவிட்டது. நான் எவ்வாறு பொறுமையாக இருப்பேன்என்று கூறுகிறாள்.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே. 

கொண்டு கூட்டு: முல்லையும் பூத்தனபறியுடைக் கையர், மறிஇனத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. அவரோ வாரார்!

அருஞ்சொற்பொருள்: பறி = பனை ஓலைக் குடை; மறி =  குட்டி; ஒழிய = தங்க; கூழ் = உணவு; சென்னி = தலை; முகை = மொட்டு; பசுமுகை = புதிய மொட்டு.

உரை: முல்லைப் பூக்கள் மலர்ந்தன; பனை ஓலையால் செய்த குடையைக் கையில் வைத்துள்ள இடையர்கள்,  குட்டிகளோடு கூடிய ஆட்டு மத்தையோடு சென்று தங்குவதற்காக, பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பிச்  செல்கின்றார்கள். அவர்கள் தம் தலையில் அணிந்து கொண்டன யாவும், முல்லையின் அரும்புகளே ஆகும்; ஆனால், தலைவரோ இன்னும் வரவில்லை.


சிறப்புக் குறிப்பு: ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.

220. தலைவி கூற்று

220.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராததால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழியிடம்  தலைவி கூறுகிறாள்.

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 

கொண்டு கூட்டு:
தோழி!  பழமழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லைவெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் பொருட் பிரிந்தோர்  வாரார்கண்டிசின்!

அருஞ்சொற்பொருள்: பழமழை = பழைய மழை; கலித்த = தழைத்த; புனம் = கொல்லை; இரலை = ஆண்மான்; பாவை = மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின்தாள்;  இருவி = வரகு அரிந்த தாள்; சேர் = சேர்ந்த; வெருகு = காட்டுப்பூனை; வீ = பூ; பிணி = அரும்பு (விரிவதற்கு முன்னுள்ள மொட்டு); முகை = மொட்டு; புறவு = முல்லை நிலம்; கண்டிசின் = காண்பாயாக.

உரை: தோழி! பழைய மழையினால் தழைத்த, கொல்லையில் உள்ள புதிய வரகின் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டனகதிர் அரியப்பட்ட வரகின் தாள்களில் எஞ்சியிருந்த இலைகளை ஆண்மான் மேய்ந்ததால், அவை குறைந்த தலையையுடைனவாக உள்ளனஅவற்றின் பக்கத்தில் உள்ள முல்லைக் கொடியில், காட்டுப் பூனை சிரித்ததைப் போன்ற தோற்றத்தையுடைய, மெல்லிய இதழ்கள் மூடிய புதிய பூவின் சிறிய அரும்புகள் மலர்ந்து, மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில், வண்டுகள் அம் மலர்களில் உள்ல தேனை உண்ணுவதற்காகச் சுற்றுகின்றன. இத்தகைய மாலைக்காலத்திலும், பொருள் ஈட்டுவதற்காக நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர் வரவில்லை. நீ இதனைக் காண்பாயாக!


சிறப்புக் குறிப்பு: பழமழை என்றது வரகு விதைத்த காலத்தில் பெய்த மழையைக் குறிக்கிறது. புதுமை என்றது வரகின் கதிரைக் குறிக்கிறது.

219. தலைவி கூற்று

219. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 97 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவன் வந்து வேலிக்கு வெளியே நிற்பதை அறிந்த தலைவி, தோழிக்குக் கூறுவது போல், தன்னுடைய வருத்தத்தை தலைவனின் காதுகளில் விழுமாறு கூறுகிறாள்.

பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 

கொண்டு கூட்டு: தோழி! பயப்பு என் மேனியது. நயப்பு அவர் நார்இல் நெஞ்சத்து ஆர் இடையது. செறிவும் சேண் இகந்தன்று; அறிவுஆங்கண் செல்கம் எழுகஎனஈங்கே வல்லா கூறி இருக்கும். முள்ளிலைத் தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு :எ நீரிரோ எனின் இடம் மன்

அருஞ்சொற்பொருள்: பயப்பு = பசப்பு; நயப்பு = விருப்பம்; நார் = அன்பு; ஆர் – இடைச்சொல்; செறிவு = அடக்கம்; சேண் = தொலை (தூரம்); இகத்தல் = கடத்தல் (பிரிதல்); வல்லா = முடியாதவற்றை; தடவு நிலை = அகன்ற அடிப்பாகம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இடம் = காலம் (சமயம்).


உரை: தோழி! பசலையானது என் மேனியில் படர்ந்துள்ளது. காதல் அவரது அன்பற்ற நெஞ்சமாகிய அரிய இடத்தில் உள்ளது. எனது அடக்கம், என்னைவிட்டு நெடுந்தூரம் விலகியது. எனது அறிவு, “தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வதற்காக எழுவாயாகஎன்று நம்மால் முடியாதவற்றைக் கூறி இங்கேயே தங்கி இருக்கிறது. பருத்த அடிகளையுடைய தாழைகள் உள்ள கடற்கரைத் தலைவருக்குஎத்தன்மையுடன் இருக்கின்றீர்?” என்று பரிவுடன் கேட்டு, நம் குறை தீர்க்க இது தக்க சமயமாகும்

218. தலைவி கூற்று

218. தலைவி கூற்று

பாடியவர்: கொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில்  உள்ள இரண்டு படல்கள்  (218, 358) மட்டுமே சங்க இலக்கியத்தில் உள்ளன.
திணை:
பாலை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்து.
கூற்று விளக்கம்: தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்பட்ட  தோழியை நோக்கி, “தலைவர் நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்பொழுதும் வாழும் வலிமை எனக்கு இல்லை. இத்தகைய நிலையில் உள்ள என்னை மறந்து அவர் சென்றை இடத்திலேயே இருப்பாராயின், அவருக்காக கடவுளை வேண்டுதலும், நிமித்தம் பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறுகிறாள்.


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: தோழி!  உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம் இன்று  இமைப்பு வரை அமையா நம்வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, விடர்முகை அடுக்கத்து, விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; உள்ளலும் உள்ளாம்

அருஞ்சொற்பொருள்: விடர்முகை = பிளவுள்ள குகை; விறல் = வெற்றி; சூலி = கொற்றவை; கடன் = பலி; கைந்நூல் = காப்பு; யாத்தல் = கட்டுதல்; புள் = நிமித்தம் (சகுனம்); ஓர்தல் = ஆராய்தல்; விரிச்சி = வாய்ச்சொல் ( அசரீரி); உள்ளல் = நினைத்தல்; அன்றுஅசைச்சொல்;  இமைப்பு = இமைப்பொழுது.


உரை: தோழி! நம் தலைவர் நமக்கு உயிருக்கு உயிரைப் போன்றவர். அவரை இமைப்பொழுதும் பிரிந்திருக்க முடியாத நம்மை மறந்துவிட்டு, அவர் தாம் தாம் சென்ற  இடத்திலேயே தங்குவதில் மனவலிமை மிக்கவராக உள்ளார். இனி, அவருக்காக, பிளவுற்ற குகைகளையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, வெற்றி பொருந்திய கொற்றவைக்குப் பலி கொடுக்க மாட்டோம்; கையில் காப்பு நூலைக் கட்டிக்கொள்ள மாட்டோம்; நற்சொற்களைக் கேட்பதாற்காகச் சென்று நிற்க மாட்டோம். இனி, அவரை மனத்தாலும் நினைக்க மாட்டோம்