Thursday, July 25, 2024

 அன்புடையீர்,

வணக்கம்.

குறுந்தொகையில் உள்ள சில பாடல்களைத் தழுவி சில திரைப்படப் பாடல்கள் வந்துள்ளன. அதைப்போல், குறுந்தொகைப் பாடல்களைத் தழுவி, சிறுகதைகள் எழுத வேண்டும் என்று தோன்றியது. அந்த நோக்கத்தில், இதுவரை ஆறு சிறுகதைகள் எழுதியுள்ளேன். அந்தச் சிறுகதைகளுக்கான சுட்டி:

http://sangamstories.blogspot.com/

நேரமிருந்தால், இந்தச் சிறுகதைகளில் ஒரு சிலவற்றையாவது படித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

அன்புடன்,

பிரபாகரன். 

Sunday, August 20, 2017

401. தலைவி கூற்று

401. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ந்தாள். அதன் பின்னர் சிலநாட்கள் தலைவனைக் காணவில்லை. தலைவனைக் காணாததால், தலைவியின் உடலில் மாற்றங்கள் தோன்றினதலைவியின் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைத்தாள். காவலில் வைக்கப்பட்ட தலைவி, தான் இனித் தலைவனை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியதை நினைத்து வருந்துகிறாள்.

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே. 

கொண்டு கூட்டு: அடும்பின் ஆய்மலர் விரைஇ, நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த, நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டுகடலிற் பரிக்குந் துறைவனொடு, மெய்தோய் நட்பு ஒருநாள் நக்கு விளையாடலும், கடிந்தன்று. ஐதேகம்ம!

அருஞ்சொற்பொருள்: அடும்பு = கடற்கரையில் வளரும் ஒருவகைக் கொடி; ஆய் = அழகு; விரைஇ = கலந்து; தொடை = மாலை; ஓரை = மகளிர் விளையாட்டு; ஞெண்டு = நண்டு; பரிதல்ஓடுதல்; நக்கு = நகைத்து; கடிந்தன்று = கடிந்தது = நீக்கியது; ஐதேகம்ம = ஐது+ஏகு+அம்ம; ஐது = வியப்புடையது; ஏகு - அசைநிலை; அம்ம வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்; மெய்தோய் நட்பு = உடலுடன் கூடிய நட்பு.


உரை: அடும்பினது அழகிய மலரைக் கலந்து தொடுத்த நெய்தல் மலர் மாலையை அணிந்த,  நீர் ஒழுகும் கூந்தலையுடைய,  ஓரை விளையாட்டு விளையாடும் மகளிரை அஞ்சி, ஈரத்தையுடைய நண்டு, கடலுக்குள் ஓடும் துறையையுடைய தலைவனோடு, அவனுடைய உடலைத் தொட்டுக் கூடி, நான் செய்த நட்பு, இனிமேல் ஒருநாள்கூட  அவனோடு சிரித்து விளையாட முடியாமல் தடுத்தது. இது வியத்தற்குரியது!

400. தலைவன் கூற்று

400. தலைவன் கூற்று
பாடியவர்: பேயனார்.
திணை: முல்லை.
கூற்று : வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.
கூற்று விளக்கம்தான் மேற்கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து, தேரில் வந்து தலைவியைக் கண்ட பின்னர், தலைவன், தேர்ப்பாகனை நோக்கி, ”இன்று நாம் விரைவாகத் தேரைச் செலுத்தாவிட்டால், என்னால் தலைவியைக் கண்டு, அவள் காமநோயைத் தீர்க்க முடியாது என்று கருதி, எனக்கு நீ நன்மை செய்ய விரும்பித் தேரை வெகு விரைவாகச் செலுத்தி, இங்கு கொண்டுவந்தாய். நீ  தேரை மட்டும் இங்கு கொண்டுவந்து தரவில்லை. என் தலைவியின் உயிரையே எனக்குத் தந்தாய்!” என்று பாராட்டுகிறான்.

சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே. 

கொண்டு கூட்டு: சேயாறு செல்வாமாயின், பெருந்தோட்கு காமம் இடர் இன்று களைகலம் என்று நன்று புரிந்து எண்ணிய மனத்தையாகி, முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப் புதுவழிப் படுத்த, மதியுடை வலவோய்! நோயுழந்து உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

அருஞ்சொற்பொருள்: சேய் = நெடுந்தூரம்; ஆறு = வழி; இடர் = துன்பம்; பெருந்தோள் = பெரிய தோளையுடைய தலைவி; முரம்பு = பருக்கைக்கற்கள் உள்ள மேட்டு நிலம்; கரம்பை = பாழ்நிலம்; வலவன் = தேர்ப்பாகன்; உழத்தல் = வருந்துதல்.; நல்குதல் = ஈதல் (தருதல்).

உரை: நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்வோமானால்பெரிய தோளையுடைய தலைவியின் காமநோயாகிய துன்பத்தை இன்று என்னால் களைய முடியாது என்று நினைத்துநன்மையை விரும்பிய மனமுடையவனாகிபருக்கைக் கற்கள் உள்ள மேட்டு நிலம் பிளக்கும்படி சென்று, பாழ் நிலத்திலே புதிய வழியைக் கண்டு தேரைச் செலுத்திய  அறிவிற் சிறந்த தேர்ப்பாகனே! காமநோயினால் வருந்தி வாழ்கின்ற தலைவியை, இறந்துபடாமல் உயிருடன் தருதற்குக் காரணமானதால், இன்று நீ தேரை மட்டுமா இங்கு கொண்டுவந்து தந்தாய்? இல்லை; என் தலைவியையே எனக்கு உயிருடன் தந்தாய்!

சிறப்புக் குறிப்பு: கரம்பைப் புது வழிப்படுத்தஎன்றது, இதற்குமுன் தேர் செல்லாத நிலத்தில் புதுவழியில் தேர்ப்பாகன் தேரைச் செலுத்தினான் என்பதைக் குறிக்கிறது. அவ்வாறு, புதுவழியில் தேரைச் செலுத்தியதால், தேர்ப்பாகனை, “ மதியுடை வலவோன்என்று தலைவன் பாராட்டுகிறான்.

399. தலைவி கூற்று

399. தலைவி கூற்று

பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
கூற்று : வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தான். அதனால் வருத்தம் அடைந்த தலைவி, தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருக்கும் பொழுது பசலை நீங்குகிறது. அவர் என்னைவிட்டுப் பிரியும் பொழுது பசலை என்னைப் பற்றிக்கொள்கிறதுஎன்று கூறுகிறாள்.

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

கொண்டு கூட்டு: பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கிவிடுவுழி விடுவுழிப் பரத்தலான்ஊருண் கேணி உண்துறைக் தொக்க பாசி அற்று.

அருஞ்சொற்பொருள்: கேணி = குளம்.

உரை: பசலையானது, தலைவர், நம்மைத் தொடுந்தோறும் தொடுந்தோறும் நம் உடலை விட்டு அகன்று, அவர் நம்மை விட்டுப் பிரியுந்தோறும் பிரியுந்தோறும் பரவுவதால், ஊரார் நீர் உண்ணும் குளத்தில், அவர்கள் நீரை உண்ணும் துறையில் திரண்டிருக்கும்  பாசியைப் போன்றது.

சிறப்புக் குறிப்பு: பசலைக்குப் பாசியை உவமையாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. பாசி படர்ந்த குளத்தில் நீரை உண்ணுபவர்கள் பாசியை விலக்கி நீரை உண்பர். அவர்கள் கையால் நீரைத் தொட்டு, முகந்து குடிக்கும் பொழுது, பாசி விலகி இருக்கும். அவர்கள் நீரைக் குடித்து முடித்துக் கரையேறிய பிறகு பாசி மீண்டும் ஒன்று சேர்ந்துகொள்ளும். அதுபோல், தலைவனோடு இருக்கும் பொழுது பசலை விலகியும், தலைவன் பிரியும் பொழுது பசலை தலைவியைப் பற்றிக்கொண்டு அவள் உடலில் பரவுவதும் பசலையின் இயல்பு. பசலை என்பது, காமநோயால் உடலில் தோன்றும் நிறமாற்றத்தையும் பொலிவிழந்த நிலையையும் குறிக்கிறது. தலைவைனைத் திருமணம் செய்துகொண்டு அவனைவிட்டுப் பிரியாமல் வாழ்ந்தால் பசலை முழுமையாகத் தன்னைவிட்டு நீங்கும் என்பது  தலைவியின் கருத்து.
தலைவனின் பிரிவால், தலைவியின் உடலில்  பசலை உடனே பரவும் என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                             (குறள் – 1186)

பொருள்: விளக்கொளி எப்பொழுது மறையும் என்று பார்த்துகொண்டிருந்து, அப்பொழுதே பரவக் காத்திருக்கும் இருளைப்போல், கணவன் என்னைத் தழுவுவதைச் சற்றே தளர்த்தும் சமயம் பார்த்து, பசலைநிறம் என் உடலில் பரவக் காத்திருக்கின்றது.

 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
 அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                           (குறள் -  1187)

பொருள்: என் கணவனைத் தழுவிக்கொண்டு கிடந்த நான், பக்கத்தே சிறிது அகன்றேன். அவ்வளவிலேயே பசலை நிறம் என்னை அள்ளிக்கொள்வது போல் பற்றிகொண்டது.


398. தலைவி கூற்று

398. தலைவி கூற்று

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.
திணை: பாலை.
கூற்று : பிரிவுணர்த்திய தோழி, தலைமகன் பிரிந்து வினைமுடித்து வருந் துணையும் ஆற்றியுளராவர் என்று உலகியல்மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, “ உலகில் ஆண்கள் பொருள் தேடுவதற்காகத் தங்கள் துணைவியரைவிட்டுப் பிரிந்து செல்வது இயற்கை. அவர்கள் தம் பணியை முடித்துத் திரும்பிவரும் வரை, தம் தலைவரின் பிரிவை மகளிர் பொறுத்துக்கொண்டு இருப்பதுவும்  உலக இயற்கைதான். நீயும் மற்றவர்களைப் போல் உன் துணைவரின் பிரிவைப் பொறுத்துகொள்ள வேண்டும்என்று அறிவுரை கூறினாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “நமக்கு அறிவுரை கூறுவாரையன்றி நம் துயரைப் போக்குவாரைக் காணவில்லைஎன்று கூறுகிறாள்.

தேற்றா மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.

கொண்டு கூட்டு: தோழி! தண்ணெனத் தூற்றும் துவலைத் துயர்கூர் காலைகயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர் கை புணையாக, நெய்பெய்து மாட்டிய சுடர், துயர் எடுப்பும் புன்கண் மாலை அரும்பெறற் காதலர் வந்தென,  விருந்து அயர்பு, மெய்ம்மலி உவகையின் எழுதரு கண்கலிழ் உகுபனி அரக்குவோர் தேற்றாம்.

அருஞ்சொற்பொருள்: தேற்றாம் = தெளிவாக அறிந்திலோம்; அன்று அசைச்சொல்; தண் = குளிர்ச்சி; துவலை = நீர்த்துளி; கயல் = கயல் மீன்; ஏர் -   உவம உருபு; குழை = காதணி; புணை = உதவி (கருவி); மாட்டிய = கொளுத்திய; சுடர் = விளக்கு; எடுப்புதல் = எழுப்புதல்; புன்கண் = துன்பம்; அயர்தல் = செய்தல்; மலிதல் = மிகுதல்; உவகை = மகிழ்ச்சி; கலிழ் = கலங்கி; அரக்குதல் = துடைத்தல்.

உரை: தோழி! குளிர்ச்சி உண்டாகும்படித் தூற்றுகின்ற மழைத்துளியையுடைய, துயரம் மிகுந்த குளிர்காலத்தில்,  கயல்மீனைப் போன்ற, அழகிய, மைதீட்டிய கண்களையும்,  கனத்த காதணியையுமுடைய மகளிர், தம் கையால், நெய்யை ஊற்றி ஏற்றிய விளக்கு, துயரத்தை எழுப்புகின்ற, மாலைக்காலத்தில், பெறுதற்கரிய தலைவர் வந்ததால், விருந்து செய்து, மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நேரத்தில், என் கண்கள் கலங்கியதால் உண்டாகி வீழ்கின்ற நீர்த்துளிகளைத் துடைப்போரைக் காணோம்.

சிறப்புக் குறிப்பு: கயலேர் உண்கண்ணும் கனங்குழையும் என்றது தலைவி இயற்கை அழகும் செயற்கை அழகும் பொருந்தியவள் என்பதைக் குறிக்கிறது.  சுடர் துயர் எடுப்பும் மாலை என்றது மாலையில் மகளிர் விளக்கேற்றுவது மரபு என்பதையும், மாலைக்காலத்தில் காமநோய் மிகுவதையும் குறிக்கிறது.


397. தோழி கூற்று

397. தோழி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவன்  புறப்பட்டான். அதை அறிந்த தோழி, தலைவனை நோக்கி,  “என் தோழியாகிய தலைவி, உன்னுடைய பாதுகாப்பின் எல்லைக்கு உட்பட்டவள். அவள் துன்பங்களைக்  களைபவர் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை. அதனால், விரைவில் திரும்பிவந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!” என்று கூறுகிறாள்.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.

கொண்டு கூட்டு: நனைமுதிர் ஞாழல் தினைமருள் திரள் வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போலஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்பதாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல இன்னா செயினும், இனிது தலையளிப்பினும் என் தோழி நின் வரைப்பினள். தன் உறு விழுமம் களைஞர் இலள். 
 
அருஞ்சொற்பொருள்: நனை = அரும்பு; ஞாழல் = புலிநகக் கொன்றை; சினை = மீனின்  முட்டை; மருள் = போன்ற (உவம உருபு); திரள் = உருண்டை; வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக வந்தது.); ஊதை = குளிர்காற்று; உரவு = வலிமை; உரவு நீர் = வலிய நீர் (கடல்); உடன்று = சினந்து; அலைத்தல் = அடித்தல்; அன்னா - அன்னை என்பது திரிந்து அன்னா என்று வந்தது; தலையளி செய்தல் = கருணை காட்டுதல்; வரைப்பு = எல்லை; விழுமம் = துன்பம்.

உரை: அரும்புகள் முதிர்ந்த ஞாழல் மரத்தின், மீனின் முட்டையைப் போன்ற உருண்டையான  மலர்களை, கீழே உள்ள நெய்தலின் கரிய மலர்களின்மேல் பெய்வதைப்போல, குளிர்காற்று வீசி நீர்த்துளிகளைத் தூற்றும் வலிய கடற்கரைத் தலைவ! தாய் சினந்து அடித்தாலும், வாய்திறந்து அம்மா!” என்று அழும் குழந்தையைப் போல, என் தோழியாகிய தலைவி, நீ அவளுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தாலும், இனிதாக அவளிடம் கருணை காட்டினாலும், அவள் உன்னால்  பாதுக்காக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; அவள் உன்னையன்றித் தனது  துன்பத்தைக் களைபவர்கள் எவரும் இல்லாதவள்.


சிறப்புக் குறிப்புஞாழலின் மலர்கள் கரிய நெய்தல் மலர்களின்மேல் விழுவது, குளிர்காற்று நீர்த்துளிகளை கடலின்மீது தூவுவதுபோல் உள்ளது. தலைவிக்கு குழந்தையும், தலைவனுக்குத் தாயும் உவமைகள்

396. செவிலி கூற்று

396. செவிலி கூற்று

பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட்போக்கிய தாய் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு உடன்சென்றாள். தலைவியின் இளமையையும் பாலைநிலத்தின் வெம்மையையும் நினைத்து, தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைத் தலைவியினுடைய தாயின் கூற்றாகவும் கருதலாம்.

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.

கொண்டு கூட்டு: பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள், இனிமுளிசினை ஓமை குத்திய, உயர்கோட்டு ஒருத்தல்வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்கழைதிரங்கு ஆரிடை அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: மேவுதல் = விரும்புதல்; அயர்தல் = விளையாடுதல்; முளிதல் = உலர்தல்; சினை = கிளை; ஓமை = ஒருவகை மரம்; கோடு = கொம்பு; ஒருத்தல் = விலங்கேற்றின் பொதுப் பெயர் (இங்கு, ஆண்யானையைக் குறிக்கிறது.); வேனில் = கோடைக்காலம்; வரை = மலை; கவாஅன் = மலையின் அடிவாரம்; மழை = மேகம்; ஓர்க்கும் = கேட்கும்; கழை = மூங்கில்; திரங்குதல் = உலர்தல்; ஆரிடை = கடத்தற்கரிய வழி.

உரை: பாலையும் உண்ணாமல்,  பந்து விளையடுவதையும் விரும்பாமல், முன்னர் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இப்பொழுது, கொடிய பாலை நிலவழியில் சென்றாள். அங்கு, உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தைக் குத்திய, உயர்ந்த கொம்பையுடைய ஆண்யானை, கோடை வெப்பம் மிகுந்த மலையின் அடிவாரத்தில் நின்றுகொண்டு, மேகம் முழங்குகின்ற கடுமையான ஒலியைக்  கூர்ந்து கேட்கும், மூங்கில்கள் வெப்பத்தால் உலர்ந்த, கடத்தற்கரிய இடத்தில்,  தன் காதலனோடு செல்லுதல், எளிமையானது என்று உணர்ந்தாளோ?
சிறப்புக் குறிப்பு: பாலையும் உண்ணாமல், தனக்கு இனிய பந்தையும் விரும்பாமல், மகளிர்க் கூட்டத்தோடு விளையாடும் இயல்புடைய இந்த இளம்பெண் எப்படித் தன் தோழிகளைப் பிரியத் துணிந்தாள்!” என்று தலைவியின் செவிலித்தாய் வருந்துகிறாள்.

ஓமைமரத்தின் பட்டையைக் குத்தி அதிலுள்ள நீரையுண்ண விரும்பிய யானை, அது  உலர்ந்திருந்ததால் வருந்தி, இடியின் ஒலியைக்கேட்டு, மழை பெய்யப் போகிறது போலும்  என்று எண்ணி நின்றது. உலர்ந்த கிளையையுடைய ஓமைமரத்தைக் குத்தி வருந்திய  யானையின் நிலை, மூங்கில் உலர்ந்து இருப்பது ஆகியவை கோடைக்காலத்தின் வெம்மையைக் குறிக்கின்றன.