398. தலைவி கூற்று
பாடியவர்: பாலைபாடிய
பெருங்கடுங்கோ.
திணை: பாலை.
கூற்று : பிரிவுணர்த்திய
தோழி,
தலைமகன் பிரிந்து வினைமுடித்து வருந் துணையும் ஆற்றியுளராவர் என்று
உலகியல்மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
கூற்று
விளக்கம்: பொருள்
தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி,
“ உலகில் ஆண்கள் பொருள் தேடுவதற்காகத் தங்கள் துணைவியரைவிட்டுப்
பிரிந்து செல்வது இயற்கை. அவர்கள் தம் பணியை முடித்துத்
திரும்பிவரும் வரை, தம் தலைவரின் பிரிவை மகளிர்
பொறுத்துக்கொண்டு இருப்பதுவும் உலக இயற்கைதான். நீயும் மற்றவர்களைப் போல் உன்
துணைவரின் பிரிவைப் பொறுத்துகொள்ள வேண்டும்” என்று அறிவுரை
கூறினாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “நமக்கு அறிவுரை கூறுவாரையன்றி நம் துயரைப் போக்குவாரைக் காணவில்லை”
என்று கூறுகிறாள்.
தேற்றா
மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.
கொண்டு கூட்டு: தோழி! தண்ணெனத் தூற்றும் துவலைத் துயர்கூர் காலை, கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர் கை புணையாக, நெய்பெய்து மாட்டிய சுடர், துயர் எடுப்பும் புன்கண் மாலை அரும்பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, மெய்ம்மலி உவகையின் எழுதரு கண்கலிழ் உகுபனி அரக்குவோர் தேற்றாம்.
அருஞ்சொற்பொருள்: தேற்றாம் = தெளிவாக அறிந்திலோம்; அன்று – அசைச்சொல்;
தண் = குளிர்ச்சி; துவலை
= நீர்த்துளி; கயல் = கயல்
மீன்; ஏர் -
உவம உருபு; குழை = காதணி; புணை = உதவி (கருவி); மாட்டிய = கொளுத்திய;
சுடர் = விளக்கு; எடுப்புதல்
= எழுப்புதல்; புன்கண் = துன்பம்; அயர்தல் = செய்தல்;
மலிதல் = மிகுதல்; உவகை
= மகிழ்ச்சி; கலிழ் = கலங்கி;
அரக்குதல் = துடைத்தல்.
உரை: தோழி! குளிர்ச்சி உண்டாகும்படித் தூற்றுகின்ற மழைத்துளியையுடைய, துயரம் மிகுந்த குளிர்காலத்தில், கயல்மீனைப் போன்ற, அழகிய,
மைதீட்டிய கண்களையும், கனத்த காதணியையுமுடைய மகளிர், தம் கையால், நெய்யை ஊற்றி ஏற்றிய விளக்கு, துயரத்தை எழுப்புகின்ற, மாலைக்காலத்தில், பெறுதற்கரிய தலைவர் வந்ததால், விருந்து செய்து,
மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நேரத்தில், என்
கண்கள் கலங்கியதால் உண்டாகி வீழ்கின்ற நீர்த்துளிகளைத் துடைப்போரைக் காணோம்.
சிறப்புக்
குறிப்பு: கயலேர் உண்கண்ணும் கனங்குழையும் என்றது தலைவி
இயற்கை அழகும் செயற்கை அழகும் பொருந்தியவள் என்பதைக் குறிக்கிறது. சுடர் துயர் எடுப்பும் மாலை
என்றது மாலையில் மகளிர் விளக்கேற்றுவது மரபு என்பதையும், மாலைக்காலத்தில்
காமநோய் மிகுவதையும் குறிக்கிறது.
No comments:
Post a Comment