Sunday, August 13, 2017

388. தோழி கூற்று

388. தோழி கூற்று

பாடியவர்: ஔவையார்.
திணை: பாலை.
கூற்று : தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன்,சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்துச் செலவு அழுங்கலுறுவானைத் தோழிஅழுங்காமற் கூறியது. (நேர்தல் = உடன்படல்; சுரம் = பாலைநில வழி; செலவழுங்கல் = பிரிதலைத் தவிர்த்தல்)
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு உடன்போவதற்குச் சம்மதித்தாள் என்ற செய்தியைத் தோழி தலைவனிடம் கூறினாள். பாலைநிலத்தின் கொடுமையையும் தலைவியின் மென்மையையும் எண்ணிப்பார்த்த தலைவன், தலைவியோடு உடன்போவதைத் தவிர்க்க விரும்புகிறான். தோழி, “ உம்மோடு சென்றால் தலைவிக்கு பாலைநிலமும் இனியதாகும்என்று கூறித் தலைவனை உடன்போக ஊக்குவிக்கிறாள்.

நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைமடித் துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே. 
கொண்டு கூட்டு: நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளைகோடை ஒற்றினும் வாடாதாகும்.
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து  ஒழுகைத் தோடு நிரைத்தன்ன,
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்யானை கை மடித்து உயவும் கானமும் இனியவாம் நும்மொடு வரின்

அருஞ்சொற்பொருள்: கால் = அடி; யாத்த = கட்டிய; ஒற்றுதல் = காற்று வீசுதல்; கவண் = கல்லை எறிவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி; பொருதல் = எருதின் கழுத்தைக் கயிறு அழுத்துதல்; அசாஅ = வருத்தும்; எருத்து = கழுத்து; உமண் = உமணர் (உப்பு வணிகர்); ஒழுகை = வண்டிகளின் வரிசை (இங்கு, உப்பு வண்டிகளின் வரிசையைக் குறிக்கிறது.); முளி = உலர்ந்த; சினை = கிளை; முன்பு = வலிமை; உயவும் = வருந்தும்.

உரை:  நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற,  வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலர்கள், மேல்காற்று வீசினாலும்,  வாடாமல் இருக்கும். கவணைப் போன்ற நுகத்தடி பூட்டப்பட்டாதால் வருந்தும், உப்புவணிகர்களின் எருதுகள்  இழுத்துச் செல்லும்  வண்டிகளை வரிசையைத் தொகுத்து  நிறுத்தினாற் போல், வழியிலுள்ள உலர்ந்த மரக்கிளைகளை, பிளத்தற்கு ஏற்ற  வலிமை இல்லாததால், யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற காடுகளும், உம்மோடு வந்தால், தலைவிக்கு இனியவையாகும்.


சிறப்புக் குறிப்பு: பலை நிலத்தில் இருந்த உலர்ந்த மரக்கிளைகளுக்கு உமணரது உப்பு வண்டிகள் உவமை. நீரில் இருக்கும் குவளை மலர்கள் கோடைக்காற்றிலும் வாடாமல் இருப்பது போல், தலைவனோடு இருந்தால் பாலைநிலத்திலும் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாள் என்று தோழி கூறுகிறாள். தலைவனோடு செல்லவில்லை என்றால், உலர்ந்த மரக்கிளைகளைப் பிளக்கும் வலிமை இல்லாமல் வருந்துகின்ற யானையைப் போல், தலைவனின் பிரிவைத் தாங்கும் வலிமை இல்லாமல்  தலைவி வருந்துவாள் என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

No comments:

Post a Comment