Sunday, August 20, 2017

391. தலைவி கூற்று

391. தலைவி கூற்று

பாடியவர்: பொன்மணியார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளெனக் கவன்றதோழிக்குக் கிழத்தி அழிந்து (வருந்தி) சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது.  ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வராததால், தலைவி வருந்துவாள் என்று கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் குறித்த காலத்தில் வரவில்லை. கார்காலமும், மாலைப் பொழுதும், மயிகள் கூவுவதும் என் துயரத்தை மிகுதிப்படுத்துகின்றன. நான் எப்படிப் பொறுத்துக்கொள்வேன்?” என்று கூறுகிறாள்.

உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையவே.

கொண்டு கூட்டு: தோழி! உவரி ஒருத்தல் உழாது மடியப் புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்கடிது இடி உருமின் பாம்பு பை அவியஇடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றுவீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலைபூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம் நீர் நனந்தலை புலம்பக் கூஉம். பெரும் பேதைய.

அருஞ்சொற்பொருள்: உவரி = வெறுப்பு; ஒருத்தல் = விலங்கேற்றின் பொது (இங்கு எருதைக் குறிக்கிறது.); புகர் = புள்ளி; புகரி = புள்ளி மான்; புறவு = முல்லை நிலம்; பை = பாம்பின் படம்; தழீஇ = தழுவி; பையுள் = துன்பம்; போழ்தல் = பிளத்தல்; போழ்கண் = பிளவுபட்டதைப் போல் தோன்றும் கண்; மஞ்ஞை = மயில்; தாஅம் = தாவும், பரவும்; நனந்தலை = அகன்ற இடம்; புலம்ப = தனிமையில் வருந்த; பேதைமை = அறியாமை.

உரை: தோழி! எருதுகள் வெப்பத்தை வெறுத்து உழாமல் சோம்பிக்கிடந்தன; மான்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்தியிருந்தன.  மழை இல்லாத முல்லைநிலத்தில், விரைவாக இடிக்கும் இடியோசையால், பாம்புகளின் படம் அழியஇடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையால், தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், மலரையுடைய கொம்பிலிருந்த, பிளவுபட்டதைப் போல் தோன்றும்  கண்களையுடைய மயில்கள், பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடங்களில் தனிமைத் துயரம் வருத்துமாறு கூவுகின்றன. அவை மிகுந்த அறியாமையுடையவை.


சிறப்புக் குறிப்பு: குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்தும் 4 அடி முதல் 8 அடிகளைக் கொண்டவை. ஆனால், அதற்கு விதிவிலக்காக 307 - ஆவது பாடலும் இப்பாடலும் ஒன்பது அடிகளைக் கொண்டவையாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment