Sunday, August 13, 2017

379. தோழி கூற்று

379. தோழி கூற்று 

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தொடு நின்றது. (நொதுமலர் = காதலனல்லாத பிறர்)
கூற்று விளக்கம்: தலைவனல்லாத வேறு ஒருவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தலைவியின் வீட்டுக்கு வந்தான். அப்பொழுது, தோழி தலைவியை நோக்கி, “முன்பு உன்னிடம் அன்போடு இருந்த தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ?” என்று கேட்டுத் தலைவியின் களவொழுக்கத்தைத் தலைவியின் தாய் முதலியோருக்கு வெளிப்படுத்துகிறாள்.

இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்
பொம்மல் ஓதி நீவி யோனே. 


கொண்டு கூட்டு: தோழி! குன்றத்துப்  பழங்குழி அகழ்ந்த கானவன், கிழங்கினொடு, கண்அகன் தூமணி பெறூஉம் நாடன் செறிதொடிஅறிவு காழ்க்கொள்ளும் அளவை,  நீ எம் இல் வருகுவைஎனப் பொம்மல் ஓதி நீவியோன் இன்று யாண்டையனோ?

அருஞ்சொற்பொருள்: கண் அகன் = அகன்ற இடம்; காழ்க்கொள்ளுதல் = முதிர்தல்; அளவை = காலம்; பொம்மல் = அடர்த்தி; ஓதி = கூந்தல் ( பெண்களின் தலைமயிர்) நீவுதல் = தடவுதல்.

உரை: தோழி! குன்றத்தில், பழைய குழியைத் தோண்டிய வேட்டுவன், கிழங்கோடு,  பெரிய அளவுள்ள, தூய மாணிக்கத்தையும் பெறும் நாட்டை உடைய தலைவன், ”செறிந்த வளையல்களை அணிந்தவளே! உன் அறிவு முதிர்கின்ற காலத்தில்,  நீ எம்முடைய வீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாய்என்று கூறி, உன்னுடைய அடர்த்தியான கூந்தலைத் தடவிய தலைவன்,  இன்று எங்குள்ளானோ?


சிறப்புக் குறிப்பு: நிலத்தைத் தோண்டும் பொழுது, கிழங்கோடு, விலைமதிப்பிற்கரிய மாணிக்கத்தையும் வேட்டுவன் பெற்றதைப் போல், வேட்டையாட வந்த தலைவன் மிகச் சிறந்த தலைவியையும் கண்டு காதல் கொண்டான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்

No comments:

Post a Comment