Sunday, May 15, 2016

196. தோழி கூற்று

196.  தோழி கூற்று
பாடியவர்: மிளைக் கந்தனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்: தலைவி தலைவனோடு ஊடியிருக்கிறாள். ஊடலை நீக்கித் தலைவி தன்னை ஏற்றுக் கொள்வதற்குத் தோழியின் உதவியைத் தலைவன் வேண்டுகிறான். முன்பு, நீர் மிகுந்த அன்புடையவராக இருந்தீர். இப்பொழுது, நீர் அவ்வாறு அன்புடையவராக இல்லை. ஆகவே, தலைவி எவ்வாறு உம்மை ஏற்றுக் கொள்ளுவாள்?” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே. 

கொண்டு கூட்டு: ஐய! என் தோழி வேம்பின் பைங்காய் தரின் தேம்பூங் கட்டி என்றனிர்; இனியேபாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்! அன்பின் பால் அற்று

அருஞ்சொற்பொருள்: பைங்காய் = பசிய காய்; தேம் = இனிமை; தேம்பூங் கட்டி = இனிய மணமுள்ள வெல்லக்கட்டி; என்றனீர் = என்று கூறினீர்; பாரிபாரி ஒரு குறுநிலமன்னன்; அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; பறம்பு = பறம்பு மலை; தண்ணிய = குளிர்ந்த; வெய்ய = வெப்பமான; உவர்த்தல் = உவர்ப்புச் சுவையை உடையதாக இருத்தல்; அற்று = அத்தன்மையது; பால் = இயல்பு.


உரை: ஐயஎன் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம் வேம்பின் பச்சைக் காயைத் தந்தால், அதை இனிய மணமுள்ள  வெல்லக்கட்டி, என்று பாராட்டிக் கூறினீர்; இப்பொழுது, பாரியென்னும் வள்ளலுக்குரிய பறம்பு மலையிலுள்ள, சுனையில் ஊறிய தெளிந்த நீரை தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும், அதை வெப்பமுடையதாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் கூறுகின்றீர்.  உமது அன்பின் இயல்பு அத்தகையதாய் உள்ளது!

195. தலைவி கூற்று

195. தலைவி கூற்று

பாடியவர்: தேரதரனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: பிரிவிடைப் பருவவரவின்கட் கிழத்தி மெலிந்து கூறியது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில் திரும்பி வருவதாகத் தலைவன் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. காதலர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. ”தான் மேற்கொண்ட பணியை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராதவராக உள்ளார். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறாரோ?” என்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேரப்
படர்சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந்து உறுதரச்
செய்வுறு பாவை அன்னஎன்
மெய்பிறிது ஆகுதல் அறியா தோரே. 

கொண்டு கூட்டு: அன்னோ! அசைவளி தைவரல் மெய்பாய்ந்து உறுதரச் செய்வுறு பாவை அன்ன என் மெய்பிறிதாகுதல் அறியாதோர் வேண்டுவினை முடிநர்  சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப் படர்சுமந்து எழுதரு பையுள் மாலை இன்னாது இரங்கும் என்னார் யாண்டுளர் கொல்லோ?  

அருஞ்சொற்பொருள்: சுடர் = கதிரவன்; சினம் = வெம்மை; படர் = துன்பம்; பையுள் = துன்பம்; முடிநர் = முடிப்பவர்; இன்னாது = துன்பத்தைத் தருவது; இரங்கல் = வருந்துதல், உள்ளம் உருகுதல்; அன்னோ = அந்தோ; தைவரல் = தடவுதல்; வளி = காற்று; உறுதல் = தொடுதல்; பிறிதாகுதல் = வேறுபாடுடையதாகுதல்.


உரை: அந்தோ! அசைந்து வரும் காற்று, என் உடலைத் தழுவிச் செல்வதால்,  ஒப்பனை செய்யப்பட்ட பாவையைப் போன்ற எனது உடல்  மெலிவதை (வேறுபாடு அடைவதை) அறியாமல், தாம் விரும்பிச்சென்ற பணியை முடிப்பதற்காக என்னைப் பிரிந்து சென்ற தலைவர்கதிரவன் வெம்மை நீங்கி, மலையில் மறையும் துன்பத்தைச் சுமந்துவரும் மாலைக் காலம் துன்பத்தைத் தருவது என்பதை உணராமல், ”நான் வருந்துவேன்என்பதையும்  உணராமல் எங்கே இருக்கின்றாரோ

194. தலைவி கூற்று

194.  தலைவி கூற்று

பாடியவர்: கோவர்த்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 66 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற (வருந்தும்) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில் வருவதாகக் கூறித் தலைவன் பிரிந்து சென்றான். மேகங்களின் இடி முழக்கத்தாலும், மயில்களின் ஆரவாரத்தாலும் கார்காலம் வந்துவிட்டது என்பதைத் தலைவி உணர்கிறாள். கார்காலம் வந்தும் தலைவன் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள். தன் மனநிலையைத் தலைவி தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

என்எனப் படுங்கொல் தோழி மின்னுபு
வானேர் பிரங்கும் ஒன்றோ? அதன்எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்குஎன்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. 

கொண்டு கூட்டு: தோழி! மின்னுபு வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் ஏதில கலந்த இரண்டற்கு, என் பேதை நெஞ்சம் பெருமலக்குறும். என் எனப் படும்?

அருஞ்சொற்பொருள்: என் எனப்படும் = எத்தகையது என்று சொல்லப்படும்; மின்னுபு = மின்னி; வான் = மேகம்; ஏர்பு = எழுந்து; இரங்கும் = ஒலிக்கும்; கானம் = காடு ; மஞ்ஞை = மயில்; கடிய = விரைவாக; ஏங்கும் = அகவும் (ஆரவாரிக்கும், ஒலிக்கும், கூவும்); ஏதில = தொடர்பில்லாத; மலக்குறும் = கலக்கத்தை அடையும்.


உரை: தோழி! கடல் நீரைக் குடித்து மேலே எழுந்து மின்னலோடு ஒலிக்கின்ற மேகத்தின் செயல் ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அந்த மேகம் ஒலித்ததற்கு மறுமொழி கூறுவதுபோல்,  காட்டிலுள்ள மயில்கள், விரைவாக ஆரவாரிக்கின்றன. இவ்வாறு எனக்குத் தொடர்பில்லாத இவ்விரண்டினாலும்  எனது பேதைமை மிக்க நெஞ்சம், பெரிய கலக்கத்தை அடைகிறது. என் மனநிலையை என்னவென்று சொல்லுவது?

193. தலைவி கூற்று

193.  தலைவி கூற்று

பாடியவர்: அரிசில் கிழார். இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர்.  அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் என்பவர் குறிப்பிடுகிறார்.  வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அரசலாற்றின் கரையில் இருந்த ஊர் என்றும் கருதுவர்.  இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது.  இவர் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர்.  இவர் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தில் புகழ்ந்து பாடியுள்ளார்.  பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெருமகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான்.  ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

            வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற குறுநில மன்னன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  அவன் தன் மனைவியைத் துறந்து வேறொருத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தான்.  அரிசில் கிழார், பேகனை அவனுடைய மனைவியோடு சேர்ந்து வாழுமாறு புறநானூற்றுப் பாடல் 146-இல் அறிவுரை கூறுகிறார்.  தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதியமான் எழினி என்பவன் இறந்ததால் வருந்திய அரிசில் கிழார் தன் வருத்தத்தைப் பாடல் 230 - இல் கூறுகிறார்.  இவர் புறநானூற்றில் ஏழு பாடல்களையும் (146, 230, 281, 285, 300, 304, 342) குறுந்தொகையில் ஒருபாடலும் (193) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: தோழி கடிநகர் (மண வீடு) புக்கு, “நலந்தொலையாமே நன்கு ஆற்றினாய்என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு, தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நடத்துகிறார்கள். தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள். தலைவன் வெளியூருக்குச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்ட தோழி வியப்படைகிறாள். ”அவர் பிரிவை நினைத்து நீ வருந்தாமல் இருக்கிறாயே!” என்று கூறித் தன் வியப்பை வெளிப்படுத்துகிறாள். இப்பாடல், தோழியின் கேள்விக்குத் தலைவியின் மறுமொழியாக அமைந்துள்ளது.

மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்எம் தோளே
இன்று முல்லை முகைநா றும்மே. 

கொண்டு கூட்டு:
மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரைதட்டைப் பறையின் கறங்கு நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
நெடுந்தோளே மணந்தனன். இன்றும் முல்லை முகை நாறும்

அருஞ்சொற்பொருள்: மட்டம் (மட்டு) = கள்; மணி = நீலமணி, கலம் = பாத்திரம்; இட்டு = நுணுக்கம்; இட்டுவாய் = சிறிய வாய்; சுனை = நீரூற்று; பகுவாய் = பிளந்த வாய்; தட்டைப் பறை = தினைத்தட்டையை ஒடித்து, பலவாகப் பிளந்து ஒன்றோடு ஒன்று ஓசை உண்டாகும்படி தட்டப்படும்பறை க்குத் தட்டைப்பறை என்று பெயர்.
 கறங்கும் = ஒலிக்கும்; தொல்லைத் திங்கள் = முன்பு ஒரு முழுநிலா அன்று; மணந்தனன் = தழுவினான்; முகை = மொட்டு.

உரை: கள்ளைப் பெய்துவைத்த நீலநிறக்குப்பி போன்ற சிறிய வாயையுடைய சுனையில் உள்ள, பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகளை வெருட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தட்டைப்பறையைப் போல் ஒலிக்கும் நாட்டுக்குரியவன் நம் தலைவன். அவன் (வெளியூருக்குப் போகுமுன்) கடந்த மாதத்தில், முழுவெண்ணிலா ஒளி வீசியபொழுது, என் தோள்களைத் தழுவி என்னைக் கூடினான். அப்பொழுது, அவன் அணிந்திருந்த முல்லை மொட்டுக்களின் நறுமணம் இன்னும் என் தோள்களில் வீசுகிறது.


சிறப்புக் குறிப்பு: கடந்த மாதம் தலைவன் தழுவியபோது அவன் மேனியில் இருந்த முல்லை மொட்டுக்களின் நறுமணம் இன்றும் தன் தோள்களில் வீசுகிறது என்று தலைவி கூறுவது, தலைவன் மிகுந்த அன்புடையவன் என்பதையும், அவன் அன்பினால் அவள் வருத்தமின்றி அவன் வரவை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருக்கிறாள் என்பதையும் குறிக்கிறது.  

192. தலைவி கூற்று

192.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 30 – இல் காணலாம்.
திணை:
பாலை.
கூற்று: பிரிவிடை வற்புறுத்த (வலியுறுத்த) வன்புறை எதிரழிந்து (வன்புறை = தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துதல்; வன்புறை எதிரழிதல்  - தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதல்) கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் விரைவில் வந்துவிடுவார். நீ வருந்தாதேஎன்று தோழி தலைவிக்கு வலியுறுத்தி ஆறுதல் கூறுகிறாள். ”இளவேனிற் காலமும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லை. நான் எப்படி வருந்தாமல் இருப்பேன்?” என்று தலைவி தோழிக்கு மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொந்து உறைவி
மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரல் கூந்தல் தைவரு வேனே. 

கொண்டு கூட்டு: நோய்நொந்து உறைவி! ”அவர் ஈங்கே வருவர்; இனையல்எனஇனியே அழாற்கோ? மின்னின் தூவி இருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும் வறுங்குரல் கூந்தல் தைவருவேன். 

அருஞ்சொற்பொருள்: ஈங்கே = இங்கே; இனைதல் = வருந்துதல்; அழாஅற்கோ = அழாமல் இருப்பேனா; நொந்து = வருந்தி; உறைவி = உறையும் (வாழும், இருக்கும்); தூவி = இறகு; இரு = கரிய; உரைத்தல் = தேய்த்தல்; கட்டளை = உறசிப் பார்க்கும் உரைகல்; கடுப்ப = ஒப்ப (உவம உருபு); மா = மாமரம்; சினை = கிளை; கொழுதும் = கோதும்;  வறு = வறிய; குரல் = கொத்து; தைவருதல் = தடவுதல்.

உரை: துன்பத்தோடு வருந்தி வாழும் தோழி! தலைவர் இங்கே திரும்பி வருவார். வருந்தாதே!” என்று நீ சொல்வதனால், இப்பொழுது நான் அழாமல் இருப்பேனா? பொன்னிறமான பூந்த்தாதுக்கள் படிவதால் மின்னும் சிறகுகளையுடைய கருங்குயில், பொன்னை உரைத்துப் பார்க்கப் பயன்படும் கட்டளைக்கல் போல் தோன்றுகிறது. அத்தகைய குயில், மாமரத்தின் கிளையில், பூந்தாதைக் கோதுகின்ற இளவேனிற் காலத்திலும் (சித்திரை, வாகாசி மாதங்களிலும்) அவர் வராததால், அலங்கரிக்கப்படாமல் வறிய கொத்தாக இருக்கும் என் கூந்தலைத் தடவுவேன்.

சிறப்புக் குறிப்பு: “இன்றூவிஎன்றது இனிய இறகைக் குறிக்கிறது. குயிலின் இறகு, காண்பதற்கு இனிமையானதாகவும் தொடுவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் அதை இன்றூவிஎன்றாள், மாம்பூவின் தாதிற்குப் பொன்னின் பொடியும்,  குயிலுக்குக் கட்டளைக்கல்லும் உவமை.

 குயில் கோதும் தாதின் மணம் அவள் இருக்கும் இடத்தளவும் வந்து வீசுவதால். அத்தாதைத் தலைவி நறுந்தாதுஎன்றாள். ”குயில் மாம்பூவின் தாதைக் கொழுதும்என்றது இளவேனிற்காலம் வந்தது என்பதைக் குறிக்கிறது.  இளவேனிற் காலம் காமத்தை மிகுவிப்பதால் அக்காலத்திற் பிரிவுத் துன்பம் மிகுதியாகத் தோன்றும் என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளது.  கரிய குயிலின் மின்னுகின்ற இறகுகளில் பூந்தாது படிந்திருப்பது, கரிய உரைகல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல் உள்ளது என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

  ”வறுங்குரற் கூந்தல் என்றது மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில், மலரணிந்து கூந்தலை அலங்கரிப்பதில்லை என்பதைக் குறிக்கிறது.  இக் கருத்தும், புறநானூற்றுப் பாடல் 147 – இல், வையாவிக் கோப்பெரும் பேகனின் மனைவி, அவனைப் பிரிந்திருக்கும் பொழுது தன் கூந்தலில் மலர் அணியவில்லை என்று புலவர் பெருங்குன்றூர்க் கிழார் கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கது.

அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
 மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
 புதுமலர் கஞல, இன்று பெயரின்
 அதுமன், எம்பரிசில் ஆவியர் கோவே!                             (புறநானூறு 147; 5-9)


(பொருள்:அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்ணின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.)

191. தலைவி கூற்று

191. தலைவி கூற்று

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவாளே என்று தோழி கவலைப்படுகிறாள். “இது என்னைப் பிரிந்திருப்பதற்கு ஏற்ற காலம் அன்று என்றும், பிரிவினால் நான் துன்புறுவேன் என்றும் எண்ணிப் பார்க்காமல் தலைவர் என்னைப் பிரிந்து சென்றார். அவர் திரும்பி வந்தவுடன், என் கூந்தலை அலங்கரிக்க வேண்டாம் என்றும், என்னைத் தொட வேண்டாம் என்றும் கூறி ஊடுவேன்என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

உதுக்காண் அதுவே; இதுஎன் மொழிகோ?
நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம்புணர்ந் தமையின் பிரிந்தோர் உள்ளாத்
தீம்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதி லாளர் இவண்வரின் போதின்
பொம்மல் ஓதியும் புனையல்
எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே. 

கொண்டு கூட்டு: இது என் மொழிகோ நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம் தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளாத் தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய ஏதிலாளர் இவண்வரின் போதின் பொம்மல் ஓதியும் புனையல் எம்மும் தொடாஅல்  என்குவெம் மன்னே.   உதுக்காண் அதுவே!

அருஞ்சொற்பொருள்: உதுஅது என்பது தொலைவிலிருக்கும் பொருளைக் குறிக்கும் சொல். இது என்பது அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும் சொல். உது என்பது தொலைவிலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் இடைப்பட்ட இடத்தில் உள்ள பொருளைக் குறிக்கும் சொல். இங்கு உது என்பது அது என்னும் பொருளில் வந்துள்ளது. நோன் = வலிய; சினை = கிளை; இரு = பெரிய; தோடு = தொகுதி (கூட்டம்); புள் = பறவை; புணர்தல் = கூடுதல்; உள்ளாது = எண்ணாது; தீ = இனிமை; அகவுதல் = கூவுதல்; ஏதிலாளர் = அயலார் ( தொடர்பில்லாதவர்); இவண் = இங்கு; வரின் = வந்தால்; போது = மலரும் பருவத்தரும்பு; பொம்மல் = மிகுதி; ஓதி = கூந்தல்; புனையல் = அலங்கரித்தல்; தொடாஅல் = தொட வேண்டாம்; மன்அசைச்சொல்.

உரை: நான் இதை என்னவென்று சொல்லுவேன்? வலியமரக்கிளையில் பெரிய கூட்டமாக இருந்த பறவைகள், தாம் துணைகளோடு சேர்ந்திருப்பதால், துணைவரைப் பிரிந்தவர்களுடைய துன்பத்தைக் கருதாமல், தம் இனிய குரலால் கூவக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, தொடர்பற்றவரைப் போன்ற தலைவர், இங்கே திரும்பி வந்தால்,  மிகுந்த மலர்களால் என் கூந்தலை அலங்கரிக்க வேண்டாம் என்றும், என்னைத் தொட வேண்டாம் என்றும் கூறப்போகிறேன்., அதை (நான் அவ்வாறு ஊடுவதை) நீ காண்பாயாக!

சிறப்புக் குறிப்பு: நான் தலைவரைப் பிரிந்திருக்கும்பொழுது அவர் மீது சினங்கொண்டாலும்அவரைக் கண்டவுடன் நான் என் சினத்தை மறந்து, ஊடுதலைத் தவிர்த்து அவரை  ஏற்றுக்கொள்வேன்”  என்று தோழி எண்ணக்கூடும் என்று தலைவி கருதியதால், தலைவி, “ உதுக்காண் அதுவேஎன்று கூறித் தான் ஊடப்போவதை உறுதிசெய்வதாகவும் பொருள்கொள்ளலாம்.

கணவன் பிரிந்திருக்கும் பொழுது அவன்மீது சினங்கொள்வதும் ஊடவேண்டும் என்று எண்ணுவதும், அவன் வந்தவுடன் சினத்தையும் ஊடலையும் மறந்து அவனோடு மகிழ்ச்சியோடு இருப்பதும் மகளிர்க்கு இயல்பு என்பதை இலக்கியத்தில் காண்கிறோம். இந்தக் கருத்தை திருக்குறளிலும் காணலாம்.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.                                                         (குறள் – 1285)
(பொருள்: மை தீட்டும் நேரத்தில் தீட்டு்ம கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.)

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.                                                   (குறள் – 1284)
(பொருள்: தோழி! நான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது)


இந்த இரண்டு குறட்பாக்களும் இப்பாடலின் மையக்கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவை.

Sunday, May 1, 2016

190. தலைவி கூற்று

190.  தலைவி கூற்று

பாடியவர்: பூதம் புலவனார். இவர் பெயர் பூதம் புலவர்என்றும்பூதம் புல்லனார்என்றும்  பிரதிகளில் காணப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.  
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகக் கணவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் அவள் வளையல்கள் நெகிழுமாறு மெலிந்தாள். ஒருநாள், நள்ளிரவில் இடியுடன் கூடிய பெரிய மழை பெய்கிறது. அவள் தூக்கமில்லாமல் கணவன் நினைவாகவே இருக்கிறாள். ”நடு இரவில் நான் இவ்வாறு உறக்கமின்றி துன்பப்படுவதை என் கணவர் அறிவாரோ?”  என்று தோழியிடம் தன் துன்பத்தைப் பகிர்ந்துகொள்கிறாள்.


நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி ! பொறிவரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரம்உரும் உரறும் அரைஇருள் நடுநாள்
நல்லேறு இயங்குதோறு இயம்பும்
பல்ஆன் தொழுவத்து ஒருமணிக் குரலே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நெறி இரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச் செறிவளை நெகிழ , செய்பொருட்கு அகன்றோர்பொறிவரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரம்உரும் உரறும் அரை இருள் நடுநாள் பல் ஆன் தொழுவத்து நல்லேறு இயங்குதோறு  இயம்பும் ஒருமணிக் குரலே அறிவர்கொல்?

அருஞ்சொற்பொருள்: நெறி = நெளி; இரு = கரிய; கதுப்பு = கூந்தல்; நீவி = தடவி; செறிவு = அடர்த்தி; பொறி = புள்ளி; பைந்தலை =  படமுள்ள தலை; துமித்தல்  = துண்டித்தல்; உரம் = வலி; உரும் = இடி; உரறும் = முழங்கும்; அரைஇருள் = ; நடுநாள் = நள்ளிரவு; ஏறு = காளை; இயங்குதல் = அசைதல், செல்லுதல்; இயம்புதல் = ஒலித்தல்; பல்லான் = பல்+ஆன் = பல பசுக்கள்; தொழுவம் = மாட்டுக் கொட்டில்.

உரை: தோழி, நெளிந்த கரிய கூந்தலையும், பெரிய தோள்களையும் தடவி,  என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளையல்கள் நெகிழும்படி, தாம் பொருள் ஈட்டும் பொருட்டு, என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், வரிகளையும் உடைய, மிகுந்த சினமுள்ள பாம்புகளின் படமுள்ள தலைகள் துண்டிக்கும்படி, வலிமை உடைய இடியேறு முழங்குகின்ற நடு இரவில், பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல்ல காளை ஒன்று அசையுந்தோறும் ஒலிக்கின்ற, ஒற்றை மணியின் ஒலியை அறிவாரோ?

சிறப்புக் குறிப்பு:  தன்  வீட்டுக்கு அருகே, தொழுவத்தில் உள்ள காளையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றை மணியிலிருந்து எழும் ஒலியைத் தலைவி கேட்கிறாள். அந்த ஒலி, காளை பசுக்களோடு இன்பமாக இருக்கும் பொழுது. காளையின் அசைவினால் தோன்றியது என்பதை அவள் உணர்கிறாள். அச்சத்தைத் தரும் நள்ளிரவில் பசுக்கள் இன்பமாக இருப்பதை உணர்ந்த தலைவி, ”நான் கேட்பதைப்போல் மணியொலியைத் தலைவர் கேட்பாரோ? அவ்வாறு அவர் அந்த ஒலியைக் கேட்டால், நான் படும் துன்பத்தை உணர்ந்து விரைவில் திரும்பிவருவார்என்று நினைக்கிறாள்.  


அரைஇருள் நடுநாள்என்பதை, “அரைநாள் நடுஇருள்என்று கொண்டுகூட்டி, “ஒருநாளின் பாதியாகிய இரவில், இருள் நடுவில்என்று பொருள் கொள்க

189. தலைவன் கூற்று

189. தலைவன் கூற்று

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்தேவனார். இவர் அகநானூற்றில் மூன்று பாடல்களும் (88, 231, 307), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (189, 343, 360), நற்றிணையில் ஒருபாடலும் ( 366) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: வினை தலைவைக்கப்பட்ட விடத்து தலைமகன் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவைக்கப்பட்ட விடத்துஎன்பதற்குஒருபணியைச் செய்ய வேண்டுமென்று ஏவப்பட்ட காலத்தில்என்று பொருள். ஒருவேலையை செய்து முடித்து வரவேண்டுமென்று அரசன் தலைவனுக்குக் கட்டளையிட்டான்.  தலைவனுக்குத் தலைவியைவிட்டுப் பிரிய மனமில்லை. அதே சமயம், அரசன் கட்டளையை நிறைவேற்றாமலும் இருக்க முடியவில்லை. ஆகவே, தலைவன், “ இன்றே சென்று அரசன் இட்ட பணியை முடித்து, நாளை மாலைக்குள் திரும்பவேண்டும்என்று கூறுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது என்று கருதாமல் தலைவன் தனக்குத் தானே கூறிக்கொள்கிறான் என்று எண்ணிப்பார்ப்பது சிறந்ததாகத் தோன்றுகிறது.

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
கால்இயல் செலவின் மாலை எய்திச்
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் மணந்துஉவக் குவமே. 

கொண்டு கூட்டு: இன்றே சென்று நாளை வருவது. குன்று இழி அருவியின் வெண்தேர் முடுகஇளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமிவிசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பகால் இயல் செலவின் மாலை எய்தி, சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம்  மணந்து உவக்குவமே. 

அருஞ்சொற்பொருள்: முடுக்குதல் = விரைவாகச் செலுத்துதல்; சுடர் = ஓலி; நேமி = சக்கரம்; விசும்பு = ஆகாயம்; கொள்ளி = ; பைம்பயிர் = பசுமையான பயிர்; துமிப்ப = அழியகால் = காற்று; செலவு = ; எய்தி = அடைந்து; நிரை = வரிசை; வால் = வெண்மையான; ஆகம் = உடல்; மணத்தல் = கலத்தல் (கூடுதல்).

உரை:  இன்றே சென்று, அரசன் இட்ட பணியை முடித்துவிட்டு  நாளை மீண்டு வருவோமாக. குன்றிலிருந்து விழும் அருவியைப் போன்ற வெண்மையான  யானைத் தந்தத்தாற் செய்த வெண்ணிறமான தேரில் விரைந்துசென்று, இளம்பிறையைப் போல், விளங்குகின்ற ஒளியையுடைய அத்தேரினது சக்கரம், வானத்திலிருந்து விழுகின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களை அழித்துக்  காற்றைப் போன்ற வேகத்தோடு, நாளை மாலைக்காலத்தில் தலைவியிருக்கும் இடத்தையடைந்து, வரிசையாக வெண்மையான சில வலையல்களை அணிந்த அவளுடைய பலவகையிலும் சிறந்த அழகான உடலைத் தழுவி மகிழ்வோம்.


சிறப்புக் குறிப்பு:   சக்கரம் நிலத்தில் செல்லும்பொழுது, மண்ணிற் புதைந்த பகுதி போக எஞ்சியபகுதியே வெளியில் தெரியுமாதலின் அப்பகுதிக்குப் பிறை உவமை ஆகியது. ஆகாயத்திலிருந்து விழும் கொள்ளி என்றது எரிநட்சத்திரத்தைக் குறிக்கிறது. ஆகாயத்திலிருந்து எரிநட்சத்திரம் விழுந்தால் பயிர்கள் அழிவதைப்போல் தேர் விரைந்து செல்லுவதால் பயிர்கள் அழிந்தன என்று பொருள் கொள்ளலாம்.    ”சில்நிரை வளைஎன்ற அடைமொழி தலைவி இளம்பெண் என்பதைக் குறிக்கிறது.  வால்வளைஎன்பது சங்கினாற் செய்த வளையல்களைக் குறிக்கிறது.  பன்மாண் ஆகம் என்றது தலைவியின் உடல் காண்பதற்கு இனிமையாகவும், தழுவுவதற்கு இனிமையாகவும், மணமுள்ளதாகவும் பலவகையிலும் சிறப்பானதாக இருப்பதாகத் தலைவன் கருதுவதைக் குறிக்கிறது.

188. தலைவி கூற்று

188. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார். இவர் பெயர் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்றும் சிலநூல்களில் காணப்படுகிறது. அளக்கர் ஞாழல் என்பது ஓர் ஊர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல் . இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் பாடியனவாக அகநானூற்றில் ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (188, 215), நற்றிணையில் மூன்று பாடல்களும் (82, 297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் காணப்படுகின்றன. அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில் உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார் என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலதில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் வந்த பின்னரும் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவர் இன்னும் வரவில்லையேஎன்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றுஎன் மாண்நலம் குறித்தே. 

கொண்டு கூட்டு: முல்லை முகை முற்றின; தண்கார் வியன் புனம் முல்லையொடு தகை முற்றின; என் மாண் நலம் குறித்து  மாலை வந்தன்று. வால் இழை நெகிழ்த்தோர் வாரார்

அருஞ்சொற்பொருள்: முகை = மலரும் பருவத்தரும்பு; தகை = தகுதி (மலர்தல் முல்லைக்குரிய தகுதி); வியன்புனம் = முல்லை நிலத்தின் அகன்ற நிலப்பரப்பு; வால் = தூய; இழை = அணிகலன்; வந்தன்று = வந்த்து; மாண் = அழகு, பெருமை.


உரை: தோழி! முல்லைக்கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன; குளிர்ந்த கார்காலத்தில்  அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடு அழகு நிரம்பப் பெற்றன. எனது சிறப்பான அழகைக் கெடுப்பதற்காகவே மாலைக் காலம் வந்தது;  என்னைப் பிரிந்து,  என் தூய அணிகலன்கள் கழலுமாறு செய்த  என் தலைவர் இன்னும் வரவில்லை.

187. தலைவி கூற்று

187. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கவேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல் - தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறுதல்; யற்பட மொழிதல் - தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறுதல்)

கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலத்தில் வரவில்லை. அவன் வருவதற்குக் காலம் தாழ்த்துவதால், தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழி, “ தலைவர் பொருள் தேடுவதில் வெற்றி அடையவில்லை போலும்அதனால்தான் அவர் இன்னும் திரும்பிவரவில்லைஎன்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் வலிமை மிகுந்தவர். அவர் பொருளோடு திரும்பிவருவார். அவரைப் பற்றித் தவறாகக் கூற வேண்டாம்என்று தோழியிடம் கூறுகிறாள்.

செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி !
வலியன் என்னாது மெலியும்என் னெஞ்சே. 

கொண்டு கூட்டு: தோழி செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் பெருவரை நீழல் உகளும் நாடன் கல்லினும் வலியன். வலியன் என்னாது என் நெஞ்சு மெலியும்.

அருஞ்சொற்பொருள்: செவ்வரை = செங்குத்தான மலை; சேக்கை = தங்குமிடம்; வருடை மான் = மலையில் வாழும் ஒருவகையான விலங்கு;  மறி = குட்டி; ஆர்தல் = நிறைதல்; மாந்துதல் = உண்ணுதல்; பெருவரை = பெரிய மலை; உகளும் = துள்ளும்; வலியன் = வலிமையானவன்; மெலிவு = வருத்தம்.

உரை: தோழி! செங்குத்தான மலைப்பக்கத்தில் தங்கியிருக்கும் வருடைமானின் குட்டி, அதன் தாயின் மடியில் சுரக்கின்ற இனிய பாலை, வயிறு நிறைய உண்டு, பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில் துள்ளும் இடமாகிய நாட்டையுடைய தலைவன் கல்லைக் காட்டிலும் வலிமை உடையவன். அவன் வலிமையானவன் என்று கருதாமல் என் நெஞ்சு, அவனை நினைத்து வருந்துகிறது.


சிறப்புக் குறிப்பு:    ”வருடையின் மறி பாலை ஆர மாந்தி வரை நீழலில் உகளும் நாடன்என்றதுதலைவன் திருமணத்திற்கு வேண்டிய பொருள் நிரம்பப் பெற்று இங்கு வந்து தன்னைத் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவான் என்று தலைவி எண்ணுகிறாள் என்பதைக் குறிக்கிறது.

186. தலைவி கூற்று

186.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச்சென்றான். கார்காலம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் தலைவி வருந்துவாளே என்று கவலைப்பட்ட தோழியிடம், தலைவி, “ தலைவனை நினைத்தேன். உறக்கம் வரவில்லைஎன்று கூறுகிறாள்.  

ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறுஎன முகைக்கும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழிஎன் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி!, ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்தகொல்லைப் புனத்த முல்லை மென்கொடி எயிறு என முகைக்கும் நாடற்கு என் கண் துயில் துறந்தன.  

அருஞ்சொற்பொருள்: ஆர்கலி = ஆரவாரம், மிகுந்த ஒலி; ஏறு = பெரிய ஒலியுடன் கூடிய இடி;  கார் = மழை; தலைஅசைசொல்; மணந்த = கலந்த; கொல்லை = முல்லைநிலம்; எயிறு = பற்கள்; முகைக்கும் = அரும்பும்; துயில் = உறக்கம்; துறத்தல் = நீக்குதல் (இழத்தல்). ஆல்அசைச்சொல்.


உரை: தோழி! பேரொலி எழுப்பும் இடியுடன் முழங்கிப் பெய்த மழைநீரோடு கலந்த முல்லை நிலத்திலுள்ள, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாட்டையுடைய தலைவனை நினத்து என் கண்கள் உறக்கத்தை இழந்தன.