191.
தலைவி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை
ஆற்றாளெனக் கவன்ற
(கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவாளே
என்று தோழி கவலைப்படுகிறாள். “இது என்னைப் பிரிந்திருப்பதற்கு
ஏற்ற காலம் அன்று என்றும், பிரிவினால் நான் துன்புறுவேன் என்றும்
எண்ணிப் பார்க்காமல் தலைவர் என்னைப் பிரிந்து சென்றார். அவர்
திரும்பி வந்தவுடன், என் கூந்தலை அலங்கரிக்க வேண்டாம் என்றும்,
என்னைத் தொட வேண்டாம் என்றும் கூறி ஊடுவேன்” என்று
தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
உதுக்காண் அதுவே; இதுஎன் மொழிகோ?
நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம்புணர்ந் தமையின் பிரிந்தோர் உள்ளாத்
தீம்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதி லாளர் இவண்வரின் போதின்
பொம்மல் ஓதியும் புனையல்
எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே.
கொண்டு
கூட்டு:
இது
என் மொழிகோ? நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம் தாம்
புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளாத் தீங்குரல் அகவக்
கேட்டு நீங்கிய ஏதிலாளர் இவண்வரின் போதின் பொம்மல் ஓதியும் புனையல் எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே. உதுக்காண்
அதுவே!
அருஞ்சொற்பொருள்: உது – அது என்பது தொலைவிலிருக்கும் பொருளைக் குறிக்கும் சொல். இது என்பது அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும் சொல். உது என்பது தொலைவிலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் இடைப்பட்ட இடத்தில் உள்ள
பொருளைக் குறிக்கும் சொல். இங்கு உது என்பது அது என்னும் பொருளில்
வந்துள்ளது. நோன் = வலிய; சினை = கிளை; இரு = பெரிய; தோடு = தொகுதி (கூட்டம்); புள் = பறவை;
புணர்தல் = கூடுதல்; உள்ளாது
= எண்ணாது; தீ = இனிமை;
அகவுதல் = கூவுதல்; ஏதிலாளர்
= அயலார் ( தொடர்பில்லாதவர்); இவண் = இங்கு; வரின் = வந்தால்; போது = மலரும் பருவத்தரும்பு;
பொம்மல் = மிகுதி; ஓதி
= கூந்தல்; புனையல் = அலங்கரித்தல்;
தொடாஅல் = தொட வேண்டாம்; மன் – அசைச்சொல்.
உரை: நான்
இதை என்னவென்று சொல்லுவேன்?
வலியமரக்கிளையில் பெரிய கூட்டமாக இருந்த பறவைகள், தாம் துணைகளோடு சேர்ந்திருப்பதால், துணைவரைப்
பிரிந்தவர்களுடைய துன்பத்தைக் கருதாமல், தம் இனிய குரலால்
கூவக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, தொடர்பற்றவரைப் போன்ற தலைவர், இங்கே திரும்பி வந்தால்,
மிகுந்த மலர்களால் என் கூந்தலை
அலங்கரிக்க வேண்டாம் என்றும், என்னைத் தொட வேண்டாம் என்றும் கூறப்போகிறேன்.,
அதை (நான் அவ்வாறு ஊடுவதை) நீ காண்பாயாக!
சிறப்புக் குறிப்பு: ”நான் தலைவரைப் பிரிந்திருக்கும்பொழுது அவர் மீது சினங்கொண்டாலும், அவரைக் கண்டவுடன் நான் என் சினத்தை
மறந்து, ஊடுதலைத் தவிர்த்து அவரை ஏற்றுக்கொள்வேன்” என்று தோழி எண்ணக்கூடும் என்று தலைவி
கருதியதால், தலைவி, “ உதுக்காண் அதுவே”
என்று கூறித் தான் ஊடப்போவதை உறுதிசெய்வதாகவும் பொருள்கொள்ளலாம்.
கணவன் பிரிந்திருக்கும்
பொழுது அவன்மீது சினங்கொள்வதும் ஊடவேண்டும் என்று எண்ணுவதும், அவன் வந்தவுடன் சினத்தையும் ஊடலையும் மறந்து அவனோடு மகிழ்ச்சியோடு இருப்பதும்
மகளிர்க்கு இயல்பு என்பதை இலக்கியத்தில் காண்கிறோம். இந்தக் கருத்தை
திருக்குறளிலும் காணலாம்.
எழுதுங்கால்
கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன்
கண்ட இடத்து. (குறள் – 1285)
(பொருள்:
மை தீட்டும் நேரத்தில்
தீட்டு்ம கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து
விடுகின்றேன்.)
ஊடற்கண்
சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண்
சென்றதுஎன் நெஞ்சு.
(குறள் – 1284)
(பொருள்: தோழி! நான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்;
ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை
மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது)
இந்த இரண்டு குறட்பாக்களும் இப்பாடலின் மையக்கருத்தோடு ஒப்பு நோக்கத்
தக்கவை.
No comments:
Post a Comment