Monday, September 12, 2016

252. தலைவி கூற்று

252. தலைவி கூற்று

பாடியவர்: கிடங்கிற் குலபதி நக்கண்ணனார். கிடங்கில் என்பது ஓர் ஊர். இவர் இவ்வூரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். இவரது இயற்பெயர் கண்ணன். மற்றும் ஆர்விகுதி பெற்று இவர் நக்கண்ணனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுவோர் குலபதியாவர் என்றும் இப்பட்டத்தை உடையவராதல் பற்றி இவர் சிறந்த ஆசிரியர் என்றும் உ.வே. சாமிநாத ஐயர்  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் வரவு அறிந்த தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து ‘‘நன்காற்றினாய்" என்றாட்குக் கிழத்தி உரைத்தது.   (வலிந்து மாறுபட்டு)
கூற்று விளக்கம்: தலைவியைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவன், பலநாட்களுக்குப் பிறகு தன் இல்லத்திற்குத் திரும்பிவந்தான்.  தலைவன் வருவதற்குமுன், தலைவனின் பிரிவால், தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருந்தாள். அவள் அவன்மீது மிகுந்த கோபமாக இருந்தாள். அவன் வந்தவுடன், அவனோடு ஊட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். ஆனால், அவனைக் கண்டவுடன், இன்முகத்தோடு அவனை வரவேற்றாள்; உபசரித்தாள். தலைவியின் செயல் அவளுடைய தோழிக்கு மிகுந்த வியப்பாக இருந்த்து. ”நீ ஏன் சிறிதும் வருத்தமின்றித் தலைவனை ஏற்றுக்கொண்டாய்?” என்ற தோழிக்கு, ”அவரை யாராவது புகழ்ந்தால்கூட அவர் நாணுவார். அவரை இகழ்ந்தால் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று கருதி நான் அவரை ஏற்றுக்கொண்டேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை யின்முகந் திரியாது
கடவுட் கற்பி னவனெதிர் பேணி
மடவை மன்ற நீயெனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த கொடியனாகிய குன்றுகெழு நாடன்வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுட் கற்பின்  அவன் எதிர் பேணிநீ மன்ற மடவை எனக் கடவுபு துனியல்!  சான்றோர் புகழும் முன்னர் நாணுப;
காணுங்கால் பழி யாங்கு  ஒல்பவோ. 

அருஞ்சொற்பொருள்: ஞெகிழ்த்த = நெகிழச் செய்த; கடவுட் கற்பு = கடவுட் தன்மை வாய்ந்த கற்பு; பேணி = உபசரித்து; மடவை = அறிவில்லாதவள்; கடவுபு = கேள்வி கேட்டு; துனியல் = வருந்தாதே; காணுங்கால் = ஆராயுந்து பார்த்தால்; ஒல்பவோ = தாங்குவாரோ.
உரை: தோழி!  ”நீண்டு திரண்ட தோள்களில் உள்ள வளையல்களை நெகிழச் செய்த, கொடியவனாகிய, குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன், பல நாட்களுக்குப் பிறகு திரும்பிவந்தபொழுது, இனிய முகத்தோடு, தெய்வத் தன்மையை உடைய உன்னுடைய கற்பினால், அவனை எதிர்சென்று உபசரித்த நீ நிச்சயமாக அறிவில்லாதவள்என்று என்னைக் கேட்டு, நீ வருத்தமடையாதே. எவராவது தம்மைப் புகழ்ந்தால் அறிவுடைய சான்றோர் தம்மைப் புகழ்ந்தவர் முன்னிலையில் நாணுவர். ஆராய்ந்து பார்த்தால், அத்தகைய சான்றோராகிய என் கணவர், பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்வாரா?

சிறப்புக் குறிப்பு: தலைவனோடு கோபமாக இருந்த தலைவி, அவனைக் கண்டவுடன் அவனை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தது,

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து.                                 (குறள் – 1285)

(பொருள்: கண்ணுக்கு மை எழுதும்பொழுது, எழுதுங்கோல் கண்ணின் இமையருகே இருப்பதால், அக்கோல் காண்ணுக்குத் தெரியாது. அது போலக் கணவனைக் காணாதபொழுது அவனது குறைகளையே எண்ணும் நான், அவன் அருகில் வந்தவுடன், அக்குறைகளைக் காணவில்லை.)

என்ற குறளின் கருத்துக்கும், மற்றும்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
 கலத்தல் உறுவது கண்டு.                                       (குறள் – 1259)

(பொருள்: பிரிந்த காதலர் திரும்பிவந்தபொழுது, அவருடன் ஊட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்ற நான், அவரைக் கண்டதும் என் நெஞ்சம் அவரிடம் சென்று சேர்வதைக் கண்டு, அவரைத் தழுவிக்கொண்டேன். )

என்ற குறளின் கருத்துக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது  குறிப்பிடத் தக்கது.

251. தோழி கூற்று

251. தோழி கூற்று

பாடியவர்: இடைக்காடனார். இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரைப் பெற்றார் என்று சிலர் கூறுவர்வேறு சிலர், இடைக்காடன் என்பது இவர் இயற்பெயர் என்றும் கூறுவர்இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களையும் (139, 194, 274, 284, 304, 474), நற்றிணையில் மூன்று செய்யுட்களையும் (142, 221, 316) குறுந்தொகையில் ஒருசெய்யுளையும் ( 251), புறநானூற்றில் ஒரு செய்யுளையும் (42)  இயற்றியுள்ளார்இவர் பாடல்கள் இலக்கிய வளமும் உவமை நயமும் மிகுந்தவை.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைத் தோழி, "பருவமன்று; பட்டது (தோன்றியது) வம்பு" என்று வற்புறுத்தியது.    (வம்பு புதுமை. இங்கு, காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழையைக் குறிக்கிறது.)
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறித் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றான். கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள். “இது கார்காலம் அன்று. இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று உறுதியாகக் கூறித் தோழி தலைவிக்குஆறுதல் அளிக்கிறாள்.

மடவ வாழி மஞ்ஞை மாயினம்
கால மாரி பெய்தென அதனெதிர்
ஆலலு மாலின பிடவும் பூத்தன
காரன் றிகுளை தீர்கநின் படரே
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய வுகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. 

 கொண்டு கூட்டு: இகுளை! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்புதுநீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டு, மஞ்ஞை மாயினம் காலம் மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தனமடவகார் அன்று; தீர்க நின் படர்வாழி!
அருஞ்சொற்பொருள்: மடவ = அறிவில்லாதவை; மஞ்ஞை = மயில்; மா = பெரிய; இனம் = கூட்டம்; மாரி = மழை; ஆலுதல் = ஆடுதல்; ஆலின = ஆடின; பிடவு = ஒரு வகைப் பூ ; கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி); இகுளை = தோழி; படர் = துன்பம்; கொளீஇய = கொள்ளும் பொருட்டு; உகுத்தல் = பெய்தல்; நொதுமல்  = தொடர்பில்லாத; வானம் = மேகம்நொதுமல் வானம் = பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் தொடர்பில்லாத காலத்தில் மழை பெய்யும் மேகம்.
உரை: தோழி! சென்ற கார்காலத்தில் பெய்ய வேண்டிய மழையில், பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரைக் கொட்டிவிட்டுப், புதிய நீரைக் கடலிலிருந்து முகந்து கொள்வதற்காக, இப்பொழுது, தொடர்பில்லாத காலத்தில் மேகங்கள் செய்யும் முழக்கத்தைக் கேட்டு, மயில்களின் பெரிய கூட்டம், பருவத்துக்குரிய மழை பெய்யப் போகிறது என்று தவறாக எண்ணி, அம் மழையைக் குறித்து ஆடுகின்றன; பிடவும் மலர்ந்தன; அவை அறியாமையை உடையன; இது கார்காலம் அன்று; ஆதலின்; உன் துன்பத்தை விடுவாயாக.
.
சிறப்புக் குறிப்பு: இது கார்காலம் என்று தோழிக்கு நன்கு தெரிந்திருந்தாலும், தலைவியை ஆற்றுவிப்பதற்காக, அவள்இது கார்காலம் அன்று.” என்று பொய் சொல்லுகிறாள். தோழியின் செயல்,

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.                             (குறள் – 292)

(பொருள்: குற்றமற்ற நன்மை பயக்குமானால், பொய்ம்மையான பேச்சும் வாய்மையைப் போன்றதாகவே கருதப்படும்.)


என்ற குறளை ஒத்திருக்கிறது

250. தலைவன் கூற்று

250. தலைவன் கூற்று

பாடியவர்: நாமலார் மகனார் இளங்கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: தலைமகன் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தலைவியைக் காண்பதற்கு மிகுந்த ஆவலோடு திரும்பி வருகிறான். "மாலை நேரம் வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்குத் தேரை விரைவாக செலுத்துவாயாகஎன்று தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

பரலவல் படுநீர் மாந்தித் துணையோ
டிரலை நன்மா னெறிமுத லுகளும்
மாலை வாரா வளவைக் காலியற்
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்
பொருகயன் முரணிய உண்கண்
தெரிதீங் கிளவி தெருமர லுயவே. 

கொண்டு கூட்டு: பாக! பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு இரலை நன்மான் நெறிமுதல் உகளும் மாலை வாரா அளவை, நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண்  தெரிதீம் கிளவி தெருமரல் உய கால்இயல் கடுமாக் கடவுமதி!

அருஞ்சொற்பொருள்: பரல் = பரற்கற்கள் (சிறு கற்கள்) ; அவல் = பள்ளம்; மாந்தி = அருந்தி; இரலை = ஆண்மான்; உகளும் = ஓடித் திரிதல்; கால் = காற்று; கடு மா = விரைந்து செல்லும் குதிரை; கடவுமதி = செலுத்துக; பொருகயல் = போரிடும் கயல் மீன்கள்; உண்கண் = மை தீட்டிய கண்கள்; தெரி தீம் கிளவி = தேர்த்தெடுத்த இனிய சொற்களைப் பேசும் தலைவி; தெருமரல் = மனச்சுழற்சி; உய = தப்பிக்க ( நீங்க).


உரை: தேர்ப்பாகனே!  பருக்கைக் கற்களை உடைய பள்ளத்திலே தேங்கியுள்ள நீரை  உண்டு,  ஆண்மான்  தன் துணையாகிய பெண்மானோடு துள்ளி விளையாடுகின்ற மாலைக் காலம் வருவதற்கு முன்பே, ஆழ்ந்த நீரில் உள்ள, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போர் புரியும் இரண்டு கயல்மீன்களைப் போன்ற, மைதீட்டிய கண்களையும், தேர்ந்தெடுத்த இனிய சொற்களையும் உடைய தலைவி,  துன்பத்தால் சுழல்வதிலிருந்து நீங்க, காற்றைபோல் செல்லும் இயல்புடைய  குதிரையை விரைவாகச் செலுத்துவாயாக.

249. தலைவி கூற்று

249. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 –இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைப்ப, ஆற்றகிற்றியோ வென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவியைப் பிரிந்து சென்றான். தலைவன் பிரிந்து சென்ற உடனே, தலைவியின் நெற்றியில் பசலை படர்ந்தது. அதைக் கண்ட தோழி, “உன் தலைவன் இப்பொழுதான் சென்றான். உடனே உன் நெற்றியில் பச்லை படர்ந்துவிட்டதே! நீ எப்படித்தான் அவன் பிரிவைப் பொறுத்துகொள்ளப் போகிறாயோ?” என்று கவலையோடு தலைவியைக் கேட்டாள்தோழியின் கேள்விக்குத் தலைவியின்  மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

இனமயில் அகவு மரம்பயில் கானத்து
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி
பண்டை யற்றோ கண்டிசின் நுதலே. 

கொண்டு கூட்டு: தோழி! இனமயில் அகவு மரம்பயில் கானத்துநரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப் படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் குன்றம் நோக்கினென். நுதலே பண்டையற்றோ! கண்டிசின்!

அருஞ்சொற்பொருள்: இனம் = கூட்டம்; அகவுதல் = ஆரவாரித்தல்; கானம் = காடு; நரை முகம் = வெளுத்த முகம்; ஊகம் = கருங்குரங்கு; பார்ப்பு = குட்டி; பனிப்ப = குளிரில் நடுங்கும்படி; படுமழை = மிகுடியாகப் பெய்த மழை; சாரல் = பக்கம்.


உரை: தோழி!  கூட்டமாக மயில்கள் ஆரவாரித்துக் கொண்டிருக்கின்ற மரங்கள் அடர்ந்த காட்டில், வெளுத்த முகத்தையுடைய கருங்குரங்கு, தம் குட்டிகளோடு குளிரால் நடுங்கும்படி,  ஒலியுடன் மழை பொழிந்த மலைச்சாரலை உடைய, அத் தலைவரது நாட்டில் உள்ள குன்றத்தைப் பார்த்தேன். அதனால், ஒளி இழந்து பசலை படர்ந்திருந்த என் நெற்றி, பசலை படராத பழைய நிலையை அடைந்ததைக் காண்பாயக!

248. தோழி கூற்று

248. தோழி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்
கூற்று: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தமாக இருக்கிறாள். தோழி, “உன் தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தியபொழுது, உனக்கும் தலைவனுக்கும் உள்ள காதலைப் பற்றித் தெரிந்துகொண்டாள். ஆகவே, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். நீ வருந்தாதே.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  

அதுவர லன்மையோ அரிதே அவன்மார்
புறுக வென்ற நாளே குறுகி
ஈங்கா கின்றே தோழி கானல்
ஆடரை புதையக் கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந் துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே. 

கொண்டு கூட்டு: தோழி! கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர, நெடும்பனைக் குறியவாகும் துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனள். அதுவரல் அன்மையோ அரிதே அவன் மார்பு உறுக என்ற நாள் குறுகி  ஈங்கு ஆகின்று.

அருஞ்சொற்பொருள்: அதுவரல் அன்மையோ அரிது = அது வராமல் இருப்பது அரிது; உறுதல் = அடைதல்; அரை = அடிப்பாகம்; கோடை = மேல் காற்று; அடும்பு = அடும்புக்கொடி; இவர்தல் = படர்தல்; கோடு = குவியல்; ஊர = பரவ; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; பெரிய கூறுதல் =. இது தெய்வத்தான் வந்ததெனக் கூறுதல்.

உரை: தோழி!, கடற்கரைச் சோலையில் உள்ள, அசையும் அடிமரம் புதையும்படி, மேல்காற்றுக் கொண்டுவந்து குவித்த அடும்பங்கொடியுடன் கூடிய மணல் பரவியதால் நெடிய பனைமரங்கள் குட்டையாகத் தோன்றுகின்றன. அத்தகைய கடற்கரைக்குரிய தலைவனைப் பற்றி, தெய்வத்தால் நேர்ந்தது என்று வெறியாட்டு நடத்தியபொழுது உன் தாய் அறிந்துகொண்டாள். அதனால், திருமணத்திற்குரிய நாள் வராமல் இருப்பது அரிது. நீ அவனது மார்பை அடையும் நாள் விரைவில் வரும்.  

சிறப்புக் குறிப்பு: மேல்காகாற்றினால் பனைமரத்தின் அடிப்பாகம் மறைந்து, பனைமரம் கைக்கு எட்டும் அளவு குட்டையானது என்பது, நாட்கள் செல்லச் செல்லத் திருமணத்திற்கான நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.


247. தோழி கூற்று

247. தோழி கூற்று

பாடியவர்: சேந்தம் பூதனார். இவர் இயற்பெயர் பூதன். இவர் சேந்தன் என்பவருடைய மகனாகையால் சேந்தம் பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறதுஇவர் குறுந்தொகையில் ஒருபாடலும் (247) நற்றிணையில் ஒருபாடலும் (261) இயற்றியுள்ளார்.
திணை:
குறிஞ்சி.
கூற்று - 1: கடிநகர்த் தெளிவு விலங்கினமை யறிய, தோழி கூறியது.    (கடிநகர் – காவல் உள்ள வீடு; தெளிவு விலங்கினமை - தலைவன் தான் கூறித் தெளிவித்த சூளுரையிலிருந்து மாறுபட்டமை)
கூற்று – 2:  வரைவுடன் பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம் - 1: தலைவி தன் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தாள். தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாக உரைத்த சூளுரையிலிருந்து மாறுபட்டானா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத் தோழி, “ தலைவன் உன்னை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான்’” என்று தலைவியிடம் கூறுகிறாள்.
கூற்று விளக்கம் 2: தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைத் தலைவியிடம் கூறுகிறாள். இக் கருத்து, முதற் கூற்றில் உள்ள கருத்தைவிட ப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம்
திறவோர் செய்வினை அறவ தாகும்
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா ரிவ்வென
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீயுக யானை
ஆர்துயில் இயம்பு நாடன்
மார்புரித் தாகிய மறுவில் நட்பே.

கொண்டு கூட்டு: தோழி! வேங்கை வீயா மென்சினை வீ உக,  யானை ஆர்துயில் இயம்பும் நாடன்  மார்பு உரித்தாகிய மறுஇல் நட்பு எழில் மிக உடையது. ஈங்கு அணிப் படூஉம்;  திறவோர் செய்வினை அறவது ஆகும்கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ்வென ஆங்கு அறிந்திசின்.

அருஞ்சொற்பொருள்: எழில் = அழகு; அணிப்படூஉம் = விரைவில் கைகூடும்; திறவோர் = திறமை உள்ளவர்; புணை = தெப்பம் (ஆதரவு); மார்அசைச் சொல்; அறிந்திசின் = அறிந்தேன்; வீயா = கெடாத; சினை = கிளை; ஆர் = அரிய; உகுதல் = உதிர்தல்; மறு = குற்றம்.

உரை: தோழி! வேங்கை மரத்தின், கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிரும் இடத்தில் யானை ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சு விடுவதால் ஒலி உண்டாக்கும் நாட்டை உடைய தலைவனது, மார்பை உரியதாகப் பெற்ற உன்னுடைய குற்றமற்ற நட்பு மிக அழகுடையது. இவ்விடத்தில், அந்த நட்பின் பயன் விரைவில் கைகூடும் ( அதாவது, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்). திறமை உள்ளவர் செய்யும் செயல்கள் அறத்தொடு பொருந்தியவையாகும்.  சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை ஆதரவாக இருக்கும் என்பதை அறிந்தேன்.

சிறப்புக் குறிப்பு:     வேங்கை மலர் தன் மேல் உதிரும் பொழுது, ஒலியோடு யானை தூங்கும் நாடன் என்றது, தலைவனின் சுற்றத்தார் பாராட்ட, தலைவியை மணந்து கொண்டு வெளிப்படையாகத் தலைவியோடு அவன் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


246. தலைவி கூற்று

246. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: ”நேற்று இரவு ஒருதேர் இங்கு வந்து திரும்பிச் சென்றது என்று ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள்அது, என் தாய்க்குத் தெரிய வந்தது. அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கிறாள்; என்னைத் துன்புறுத்துகிறாள். இனி, நான் இரவு நேரத்தில் தலைவனைச் சந்திக்க முடியாது போலிருக்கிறது.” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். தன் நிலையைத் தலைவன் புரிந்து கொண்டால், திருமணத்திற்குத் தேவையான ஏற்படுகளை விரைவில் செய்வான் என்று அவள் எண்னுகிறாள்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப்
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 

கொண்டு கூட்டு: பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை களிற்றுச்செவி அன்ன பாசடை மயக்கிப்பனிக்கழி துழவும் பால்நாள், தனித்தோர் தேர்வந்து பெயர்ந்தது என்ப. அதற்கொண்டு அன்னை ஓரும்; அலைக்கும். பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்  பிறரும்,  இளையரும் மடவரும் உளர்அலையாத் தாயரொடு நற்பாலோர்

அருஞ்சொற்பொருள்: பாசடை = பாசு அடை = பசுமையான இலை; மயக்கி = கலக்கி; கழி = உப்பங்கழி; பால்நாள் = நடு இரவுஓர்தல் = ஆராய்தல்; அலைக்கும் = துன்புறுத்தும்; கதுப்பு = பெண்ணின் தலைமுடி; மடவர் = மடப்பம் உடையவர் (அதிகம் பேசாது, தெரிந்தவற்றையும் தெரியாதவை போல் காட்டிக் கொள்ளும் இயல்பு); பால் = ஊழ்வினை.

உரை: (தோழி!)  பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்காக்கை,  யானையின் காதைப்போல் அகன்று இருக்கும் பசுமையான இலைகளைக் கலக்கி,  குளிர்ச்சியை உடைய உப்பங்கழியில் இரைதேடும் பொருட்டுத் துழாவுகின்ற நடு இரவில்,  தனியாக ஒருதேர் இங்கே வந்து திரும்பிச் சென்றது என்று ஊரார் பேசிக்கொண்டார்கள். அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கின்றாள். என்னைத் துன்புறுத்துகின்றாள். பின்னித் தொங்கவிடப்பட்ட கூந்தலை உடைய, மின்னும் அணிகலன்களை அணிந்த மகளிர்,  இளமையும், மடப்பமும்  உடையவர்களாகப்  பலர் இவ்வூரில் உள்ளனர். அவர்கள் எல்லாம், தம்மை வருத்தாத தாயார்களுடன் வாழும் நற்பேற்றைப் பெற்றனர்.


சிறப்புக் குறிப்பு: ஊரில் உள்ள மற்ற பெண்களின் தாயார் அவர்களைத் துன்புறுத்தாமல் இருக்கும் பொழுது, தன் தாய் மட்டும் தன்னைத் துன்புறுத்துவதை எண்ணித் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.