249.
தலைவி கூற்று
பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 –இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை
வைப்ப,
ஆற்றகிற்றியோ வென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவியைப் பிரிந்து சென்றான். தலைவன் பிரிந்து சென்ற உடனே, தலைவியின் நெற்றியில் பசலை
படர்ந்தது. அதைக் கண்ட தோழி, “உன் தலைவன்
இப்பொழுதான் சென்றான். உடனே உன் நெற்றியில் பச்லை படர்ந்துவிட்டதே!
நீ எப்படித்தான் அவன் பிரிவைப் பொறுத்துகொள்ளப் போகிறாயோ?” என்று கவலையோடு தலைவியைக் கேட்டாள். தோழியின் கேள்விக்குத் தலைவியின்
மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.
இனமயில் அகவு மரம்பயில் கானத்து
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி
பண்டை யற்றோ கண்டிசின் நுதலே.
கொண்டு
கூட்டு:
தோழி! இனமயில் அகவு மரம்பயில் கானத்து, நரைமுக ஊகம்
பார்ப்பொடு பனிப்பப் படுமழை பொழிந்த சாரல் அவர்
நாட்டுக் குன்றம் நோக்கினென்.
நுதலே பண்டையற்றோ! கண்டிசின்!
அருஞ்சொற்பொருள்: இனம் = கூட்டம்; அகவுதல் = ஆரவாரித்தல்;
கானம் = காடு; நரை முகம்
= வெளுத்த முகம்; ஊகம் = கருங்குரங்கு; பார்ப்பு = குட்டி;
பனிப்ப = குளிரில் நடுங்கும்படி; படுமழை = மிகுடியாகப் பெய்த மழை; சாரல் = பக்கம்.
உரை: தோழி! கூட்டமாக மயில்கள் ஆரவாரித்துக் கொண்டிருக்கின்ற
மரங்கள் அடர்ந்த காட்டில், வெளுத்த முகத்தையுடைய கருங்குரங்கு,
தம் குட்டிகளோடு குளிரால் நடுங்கும்படி, ஒலியுடன் மழை பொழிந்த மலைச்சாரலை உடைய, அத் தலைவரது நாட்டில் உள்ள குன்றத்தைப் பார்த்தேன். அதனால்,
ஒளி இழந்து பசலை படர்ந்திருந்த என் நெற்றி, பசலை
படராத பழைய நிலையை அடைந்ததைக் காண்பாயக!
No comments:
Post a Comment