Sunday, April 16, 2017

338. தோழி கூற்று

338. தோழி கூற்று

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்து தலைவி வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தைப் போக்குவதற்காகத் தோழி எவ்வளவோ இனியமொழிகளைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயற்சி செய்கிறாள். ஆனால், அவள் முயற்சி பலனளிக்கவில்லை. தலைவன் பின்பனிக் காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அவன் சொன்ன சொல் தவறாதவன். ஆகவே, அவன் கண்டிப்பாக விரைவில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு, “தலைவன் வந்துவிட்டான்.” என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு
அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப்
பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம்
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே. 

கொண்டு கூட்டு: பணைத்தோள் விளங்குநகர் அடங்கிய கற்பின் நலங்கேழ் அரிவை புலம்பு அசாவிட திரிமருப்பு இரலை அண்ணல் நல்ஏறு
அரிமடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇவீ ததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செல, செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் பெருவிறல் தேர் வந்தன்று.

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கினது; மருப்பு = கொம்பு; திரிமருப்பு = முறுக்கிய கொம்பு; இரலை = ஆண்மான்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; மடம் = இளமை; பிணை = பெண்மான்; அரி = அழகு; அல்குதல் = தங்குதல்; அசைஇ = அசைந்து; வீ = மலர்; ததை = நெருங்கிய; வியல் =அகன்ற; அரில் = பிணங்கிய தூறு (கொடிகள் பின்னிக் கிடக்கும் புதர்); துஞ்சுதல் = தூங்குதல்; கறித்தல் = கடித்துத் தின்னுதல்; புன்கண் = துன்பம்; கடைநாள் = கடையாமம்; தண் = குளிர்ச்சி; அச்சிரம் = முன்பனிக் காலம் (இங்கு பின்பனிக் காலத்தைக் குறிக்கிறது); விறல் = வெற்றி; பணை = மூங்கில்; நகர் = வீடு; நலம் = அழகு; கேழ் = பொருந்திய (கெழு என்பது நீண்டு கேழ் என்று வந்தது); அரிவை = 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண் ( இங்கு, தலைவியைக் குறிக்கிறது); புலம்பு = தனிமை; அசாவுதல் = தளர்தல்.
உரை:  மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய தலைவியே! விளங்கும் இல்லத்தில், அடங்கிக் கிடக்கும் கற்புடையவளே! அழகு பொருந்திய தலைவியே! உன் தனிமைத் துன்பம் நீங்குமாறு,  முறுக்கிய  கொம்புகளை உடைய, தலைமைத் தன்மை பொருந்திய நல்ல ஆண்மான், அழகும் இளமையும் உடைய  பெண்மானோடு, தாம் தங்குதற்குரிய நிழலுள்ள இடத்தில் தங்கி,  மலர்கள் நெருங்கிய,  கொடிகள் பின்னிக் கிடக்கும் அகன்ற புதரில் படுத்து உறங்கி, பொழுது கழிந்ததைக் கண்டு,செழுமையான பயற்றம் பயிரைக் கடித்துத் தின்னுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தையும்,  பின்பனி பெய்யும் கடைச்சாமத்தையும், குளிர்ந்த பனியையும் உடைய பின்பனிக் காலத்தில், மிகுந்த  வெற்றியையுடைய தலைவனது தேர் வந்தது.

சிறப்புக் குறிப்பு: ”இரலையும் பிணையும் துஞ்சிப் பயறு கறிக்கும்என்றது, தலைவியும் தலைவனும் இனிமேல் பிரிவின்றி இன்பமாக வாழ்வார்கள் என்பதைக் குறிக்கிறது.     தலைவனின் தேர் வராவிட்டாலும், விரைவில் வந்துவிடும் என்ற துணிவினால், தோழி வந்ததுஎன்று இறந்த காலத்தில் கூறினாள்.

337. தலைவன் கூற்று

337. தலைவன் கூற்று
பாடியவர்: பொதுக்கயத்துக் கீரந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழியை இரந்து பின்னின்ற கிழவன், தனது குறையறியக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவியைக் கண்டு தலைவன் காதலுற்றான். அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான்.  ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும் இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.” என்று கூறுகிறான்.

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே. 

கொண்டு கூட்டு: முலை முகிழ் முகிழ்த்தன; தலை கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந்தனசெறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பினசுணங்கும் சில தோன்றின. அணங்குதற்கு யான் தன் அறிவல்; தான் அறியலள்பெருமுது செல்வர் ஒருமட மகள் தான் யாங்கு ஆகுவள் கொல்?

அருஞ்சொற்பொருள்: முகிழ் = அரும்பு; கிளைஇய = கிளைத்த, நிறைந்த; குரல் = மயிர்க்கொத்துக்கள்; கிழக்கு வீழ்தல் = கீழே தொங்குதல்; செறிதல் = நெருங்குதல்; நிரை = வரிசை; பறிதல் = வெளிப்படுதல்; பறிமுறை = பல் விழுந்து முளைத்தல்; சுணங்கு = தேமல்; அணங்கு = வருத்தும் அழகு; அணங்குதற்கு = அவளால் வருத்தும் பொருட்டு; மடமகள் = இளமை பொருந்திய பெண் (தலைவி).

உரை:  தலைவியின் முலைகள் அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள  மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன; நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில தோன்றின.  அவள் என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள் அதனை அறியாள்.  பெரிய பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய  தலைவியாகிய ஒரே மகள்,  எத்தன்மையை உடை யவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?)

336. தோழி கூற்று

336. தோழி கூற்று
பாடியவர்: குன்றியனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துப் பழகி வந்தார்கள். பகலில் சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. தலைவன் தோழியை அணுகி, “நான் இனிமேல் இரவில் வந்து தலைவியைச் சந்திப்பேன் என்று நீ அவளிடம் சொல்லுவாயாக.” என்று வேண்டுகிறான். அதற்குத் தோழி, “ நீ இரவில் வர வேண்டாம்.” என்று கூறி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள்.

செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. 

கொண்டு கூட்டு: தேம்பாய் துறைவ செறுவர்க்கு உவகையாகத் தெறுவர,
ஈங்கனம் வருபவோ? நீ பிரிந்திசினோள், சிறு நா ஓள் மணி விளரி ஆர்ப்ப,
கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போலவருந்தினள்; அளியள்

 அருஞ்சொற்பொருள்: செறுவர் = பகைவர் (இங்கு, அலர் கூறுவோரைக் குறிக்கிறது); உவகை = மகிழ்ச்சி; தெறுவருதல் = மனம் சுழன்று வருந்துதல்; ஈங்கனம் = இங்கே; விளரி = நெய்தல் நிலத்திற்குரிய இரங்கற் பண்; ஆர்ப்பமுழங்க; கடுமா = விரைவாகச் செல்லும் குதிரை; நேமி = சக்கரம்; கழி = கடல் சார்ந்த நீர்நிலை; அளியள் = இரங்கத் தக்கவள்.
உரை: பூக்களிலிருந்து தேன் சிந்திப் பரவும் நெய்தல் நிலத்தலைவனே! எம்மை வருத்தும் அலர் கூறுவோர் மகிழுமாறு, நாங்கள் துன்புற, இரவில் நீ இங்கே வரலாமா? நீ பிரிந்த தலைவி,  சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் விளரிப்பண் போல ஒலிக்க, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரின் சக்கரம் மேலே ஏறிப்போனதால் நலிந்த, கரிய கழியில் உள்ள நெய்தல் மலரைப் போல, வருத்தம் அடைந்தாள். அவள் இரங்கத் தக்கவள்!
சிறப்புக் குறிப்பு: தலைவனும் தலைவியும் பகலில் சந்திக்க முடியவில்லை. தலைவனைக் காணாமல் தலைவி வருந்துகிறாள். தலைவனும் அவளை காண விழைகிறான். அதனால், அவன் ஆர்வத்தோடு, இரவில் வருவதாகக் கூறுகிறான்.  ”நீ இரவில் வந்தால் அலர் பேசுவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும், இரவில் வருவதால் உனக்குப் பல இன்னல்கள் நேரிடலாம். அவற்றை நினைத்துத் தலைவி வருந்துவாள்.” என்று தோழி கூறுகிறாள். இரவில் வருவது சிறந்த செயலன்று என்று தலைவன் உணர்ந்தால், அவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி இவ்வாறு கூறுகிறாள்.

இப்பாடலில், தலைவனைத் துறைவன் என்று குறிப்பிட்டிருப்பதாலும், நெய்தல் நிலத்திற்குரிய விளரிப் பண்ணைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், கழியில் உள்ள நெய்தல் மலரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்பட வேண்டும்.

335. தோழி கூற்று

335. தோழி கூற்று
பாடியவர்: இருந்தையூர்க் கொற்றன் புலவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. (நயவாமை = விரும்பாதபடி; அறிவுறீஇயது = அறிவுறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் அடிக்கடி பகலில் சந்தித்துப் பழகிவந்தார்கள். தலைவியை வீட்டில் காவலில் வைப்பதாகத் தலைவியின் தாய் முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “தலைவியை அவள் தாய் காவலில் வைக்கப் போகிறாள். இனி நீ அவளைச் சந்திக்க முடியாது.” என்று தலைவனிடம் கூறுகிறாள். தலைவன், “ நான் இரவிலே, அவள் இருக்கும் ஊருக்கு வந்து அவளைச் சந்திப்பேன்.” என்று கூறுகிறான். அதற்குத் தோழி, “அவள் இருக்கும் ஊர் மலைகளின் நடுவே உள்ளது. அங்கு இரவில் வந்தால் பல இன்னல்கள் நேரிடலாம். மற்றும், அவளுடைய தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, இரவிலே சந்திப்பதும் இயலாத செயல்.” என்று கூறுகிறாள்.

நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. 

கொண்டு கூட்டு: வார்கோல்  வல்வில் கானவர் தங்கைபெருந்தோள் கொடிச்சி இருந்த ஊர்நிரைவளை முன்கை நேரிழை மகளிர்,  இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி,
சுனைபாய் சோர்வு இடைநோக்கிச் சினை இழிந்துபைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்புஇடை நண்ணியது.

அருஞ்சொற்பொருள்: நிரை = வரிசை; நேரிழை = தகுதியான அணிகலன்களை அணிந்த பெண்; இரும் = கரிய; கல் = மலை; வியல் = அகன்ற; அறை = பாறை; சுனை = நீர்நிலை; சோர்வு இடை = சோர்ந்திருக்கும் சமயம்; சினை = கிளை; பைங்கண் = பசுமையான கண்; மந்தி = பெண்குரங்கு; பார்ப்பு = குட்டி; வெற்பு = மலை; நண்ணியது = பொருந்தியது; வார் = நீண்ட; கோல் = அம்பு; கானவர் = வேடர்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப்பெண்.

உரை: நீண்ட அம்புகளையும், வலிய வில்லையும் உடைய வேடர்களின் தங்கையாகிய, பெரிய தோளையுடைய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய தலைவி வாழும் ஊர், வரிசையாக  முன்கையில் வளையல்களையும், பொருத்தமான (அழகான) அணிகலன்களையும் அணிந்த மகளிர், கருமையான மலையிலுள்ள அகன்ற பாறையில், சிவந்த தினையைப் பரப்பி, நீர்நிலையில் இறங்கி நீராடுகின்ற, காவல் இல்லாத சமயத்தைப் பார்த்து, மரக்கிளையிலிருந்து  இறங்கி, பசுமையான கண்களையுடைய பெண் குரங்குகள், தம் குட்டிகளோடு அத்தினையைக் கவர்ந்து செல்லுகின்ற மலையிடத்தே அமைந்திருக்கிறது.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் ஊர் மலைகளின் இடையே உள்ளதால், தலைவன் இரவில் வருவது எளிதான செயலன்று. தலைவியின் தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, தலைவன் தலைவியை இரவில் சந்திப்பது இயலாத செயல் என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று அவள் மறைமுகமாக அவனுக்குக் உணர்த்துவதைக் குறிக்கிறது. பாறையில் உலர்த்தப்பட்டிருக்கும் தினையைக் காவல் இல்லாத சமயத்தில் குரங்குகளும் குட்டிகளும் கவர்ந்து செல்லும் என்றது, தலைவியை வேறு எவராவது திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

334. தலைவி கூற்று

334. தலைவி கூற்று

பாடியவர்: இளம்பூதனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை ஆற்றகிற்றியோ?” என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றால், உன்னால் அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்ட தோழிக்கு, “அவன் பிரிந்தால் என் உயிர் போகும். அதைத் தவிர இழப்பதற்கு என்னிடம் வேறு என்ன உள்ளது?” என்று தலைவி கூறுகிறாள்.

சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே.

கொண்டு கூட்டு: தோழி! சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்பபனி புலந்து உறையும் பல்பூங்கானல்விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின், நாம் இழப்பது, ஒரு நம் இன்னுயிர் அல்லது பிறிது ஒன்று  எவன்?
அருஞ்சொற்பொருள்: தோடு = தொகுதி (கூட்டம்); எறிதல் = வீசுதல்; திரை = அலை; திவலை = நீர்த்துளி; புறம் = முதுகு; புலந்து = வெறுத்து; பனி = குளிர்; புலந்து = வெறுத்து; உறையும் = தங்கும்; கானல் = கடற்கரைச் சோலை; விரி நீர் = அகன்ற நீருள்ள இடம் ( கடற்கரை); சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்; நீப்பின் = பிரிந்தால்.

உரை: தோழி! சிறிய, வெண்ணிறமான, சிவந்த வயையுடைய காக்கைகளின் பெரிய கூட்டம்,  வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமான முதுகை நனைப்பதால், குளிரை வெறுத்து, அவை தங்கும் இடமாகிய, பலமலர்கள் உள்ள சோலையையுடைய, அகன்ற கடற்கரைத் தலைவன் நம்மைப் பிரிந்தால், நாம் இழக்கப் போவது நமது ஒரே ஒரு இனிய உயிர் மட்டுமே; அதைத் தவிர நம்மிடம் வேறு என்ன உள்ளது?

Sunday, April 2, 2017

333. தோழி கூற்று

333. தோழி கூற்று
பாடியவர்: உழுந்தினைம் புலவன்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அறத்தொடு நிற்பல்எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்துவந்தார்கள். சில நாட்களுக்குமுன், தலைவி, வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். அதனால்தலைவன் அவளைக் காணமுடியவில்லை. தலைவன் தன்னை மணந்துகொள்வதற்காக, தன் வீட்டுக்குப் பெண்கேட்க வருவான் என்று தலைவி எதிர்பார்க்கிறாள். ஆனால், தலைவியின் வீட்டார் தன்னை ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற மனக் குழப்பத்தினால், தலவன் தலைவியைப் பெண்கேட்க வரவில்லை. தலைவன் தான் செய்ய வேண்டிய செயலைச் செய்யாததால், தலைவி மிகுந்த வருத்தமுற்றாள். தலைவியின் வருத்தத்தை அறிந்த தோழி, “ நமது களவொழுக்கத்தை நாம் நம் தாய்மாரிடம் துணிந்து  வெளிப்படுத்தினால் என்ன?” என்று கேட்கிறாள். களவொழுக்கத்தை வெளிப்படுத்தினால், தலைவியின் உறவினர்கள் தலைவனை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நோக்கத்தோடும் தோழி இவ்வாறு தலைவியிடம் கூறுகிறாள்.

குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத்
துணியின் எவனோ தோழிநம் மறையே. 

கொண்டு கூட்டு: தோழி! குறும்படைப் பகழி, கொடுவில் கானவன்புனம் உண்டு கடிந்த பைங்கண் யானை நறுந்தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன்பணிக்குறை வருத்தம் வீட, நம் மறை துணியின் எவன்

அருஞ்சொற்பொருள்: படை = படைக்கலம்; பகழிஅம்பு; கொடுவில் = வளைந்த வில்; கானவன் = வேட்டுவன்; கடிதல் = வெருட்டுதல்; பைங்கண் = பசுமையான கண்; கிள்ளை = கிளி; பொறை = பாறை; அணவுதல் = அண்ணாந்து பார்த்தல்; பணி = செயல் (இங்கு, மணந்துகொள்வதைக் குறிக்கிறது); வீடல் = விடுதல்; மறை = மறைக்கப் பட்டது (இங்கு, களவொழுக்கத்தைக் குறிக்கிறது). எவனோ என்பதில் உள்ள ஓகாரமும், மறையே என்பதில் உள்ள ஏகாரமும் அசைநிலைகள்.
உரை: தோழி! குறிய படையாகிய அம்பையும் வளைந்த வில்லையும் உடைய வேட்டுவன், தினைப்புனத்தில் தினையை உண்ட,  பசிய கண்களையுடைய யானையை வெருட்டுகிறான்.  மணமுளள  தழையுடையை அணிந்த மகளிர்,  தினைப் புனத்தில் படிந்துள்ள கிளிகளை வெருட்டுகின்றனர். அந்த யானை, கிளிகளோடு சேர்ந்து, குறுகிய பாறைகள் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்காக அண்ணாந்து பார்க்கிறது. தலைவன் அத்தகைய  மலைநாட்டை உடையவன்தலைவன் உன்னை மணந்துகொள்ளும் செயல் நிறைவேறாமல், குறையாக இருப்பதால் வரும் துன்பம் நீங்கும்படி,  நம்முடைய களவொழுக்கத்தைப் பற்றிய செய்தியைத் துணிந்து வெளிப்படுத்தினால் என்ன?
சிறப்புக் குறிப்பு: தினை காப்பவரால் யானையும் கிளியும் வெருட்டப்படும் நாடு என்றது செவிலித்தாய் மற்றும் தாய் முதலியோரால் தலைவி காவலால் வைக்கப்பட்டதால், தலைவன் தான் விரும்பிய இன்பத்தைப் பெறாது வருந்தும்படி வெருட்டப்பட்டான் என்பதைக் குறிக்கும் உள்ளுறை உவமமாகும்.

பணிக்குறை வருத்தம்என்றது தலைவன் பெண்கேட்க வராமல் இருப்பதால் வரும் வருத்தத்தைக் குறிக்கிறது. அறத்தொடு நின்றால் உண்மையையுணர்ந்து பெற்றோர்களும் உறவினர்களும் தலைவனை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தலைவன் செய்ய வேண்டிய செயல் நிறைவுபெறும். தலைவியின் வருத்தமும் தீரும்

332. தோழி கூற்று

332. தோழி கூற்று
பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது வந்தொழுகா நின்ற காலத்துக் கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்:தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் தலைவன் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவன் களவொழுக்கத்தையே விரும்புவதாகத் தலைவி எண்ணி வருந்துகிறாள். ஒருநாள் இரவு, தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வந்து மறைவிடத்தில் நிற்கிறான். அவன் வருகையை அறிந்த தோழி, “ தலைவன் திருமணத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இருப்பதை நினைத்து, நீ படும் துன்பத்தை, நீயே தகுந்த முறையில் அவனிடம் எடுத்துரைத்தால் என்ன?” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு தலைவியைக் கேட்கிறாள்.

வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே. 

கொண்டு கூட்டு: தோழி! நாறுயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றச் சிறுகுடி யிழிதரு மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந்து  அரும்படர் தீர நீ நயந்து கூறின் எவனோ?

அருஞ்சொற்பொருள்: பெயல் = மழை; கடைநாள் = கடையாமம்; நோய் = காம நோய்; படர் = துன்பம்; நயந்து = விரும்பி; நாறு = மணம் வீசுகின்ற; உயிர்த்தல் = மூச்சு விடுதல் ; மடப்பிடி = இளம் பெண்யானை; தழீஇ = தழுவி; தடக்கை = வளைந்த கை; நண்ணிய = பொருந்திய.
உரை: தோழி! மணம் வீசுகின்ற மூச்சையுடைய இளம் பெண்யானையைத் தழுவிக்கொண்டு, வளைந்த துதிக்கையையுடைய ஆண்யானை, குன்றிலுள்ள சிற்றூரின் பொதுவிடங்களை நோக்கி இறங்கிச் செல்லுகிறது. அத்தகைய பொதுவிடங்கள் பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு, வாடைக் காற்று வீசுகின்ற, சிறிதளவே மழை பெய்யும் நாளின் கடைசி யாமத்தில், காமநோயில் நீந்திக்கொண்டிருக்கின்ற  உனது பொறுத்தற்கரிய துன்பம் தீரும் வண்ணம், நீயே விரும்பிக் கூற வேண்டியதைக் கூறினால் என்ன?
சிறப்புக் குறிப்பு: ஆண்யானை பெண்யானையைத் தழுவிகொண்டு பொதுவிடத்திற்கு வருவதைப் பற்றித் தோழி கூறுவது, தலைவன் தலைவியை வெளிப்படையாக பலரும் அறியும் வண்ணம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் குறிப்பை உணர்த்துகிறது.

ஆண்யானை பெண்யானையைத் தழுவிக்கொண்டு, பொதுவிடத்திற்கு வரும் காட்சியைத் தலைவன் கண்டிருப்பான். அதைக் கண்டால், தானும் தலைவியை மணந்துகொண்டு அன்போடு வாழவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் தோன்றும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.  

331. தோழி கூற்று

331. தோழி கூற்று

பாடியவர்: வாடாப் பிரபந்தனார்.
திணை: பாலை.
கூற்று : செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்:  தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைவிட்டுப் பிரியத் திட்டமிட்டிருப்பதை அறிந்த தலைவி  வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தின் காரணத்தை  அறிந்த தோழி, “ பாலை நிலம் மிகவும் கொடுமையானது. அது கடத்தற்கரியது. அதனால், தலைவர் உன்னைவிட்டுப் பிரிய மாட்டார். நீ வருந்தாதே.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்
கடுங்கண் யானைக் கான நீந்தி
இறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நறுவடிப் பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன நன்மா மேனி பசப்பநம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்குநெடுங்கழை திரங்கிய நீரில் ஆரிடைஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்றுகொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்கடுங்கண் யானைக் கான நீந்திஇறப்பர் கொல்?

அருஞ்சொற்பொருள்: கழை = மூங்கில்; திரங்குதல் = உலர்தல்; ஆர் = அரிய; ஆறு = வழி; வம்பலர் = புதியவர்கள் (வழிப்போக்கர்கள்); மாறுநின்று = எதிர் நின்று; சிலை = வில்; மறவர் = பாலை நிலத்து மக்கள்; கடறு = காடு; கூட்டுண்ணல் = கொள்ளையடித்துக் கூடி உண்ணுதல்; கடுங்கண் = கொடுமை; கானம் = காடு; நீந்தி = கடந்து; இறத்தல் = நீங்குதல் (பிரிதல்); நறு = மணமுள்ள; வடி = வடு மாங்காய்; பைங்கால் = பசுமையான அடிப்பக்கம்; மாத்து = மாமரத்தின்; மாமேனி = மாமை நிறம்; பசப்ப = பசலையுற.
உரை: தோழி, நீ வாழ்க! நல்ல மணமுள்ள வடுவையும், பசுமையான அடிப்பக்கத்தையும் உடைய மாமரத்தின் அழகிய தளிரைப் போன்ற நல்ல மாமை நிறமுள்ள மேனி பசலை அடையுமாறு, நம்மைக் காட்டிலும் அவருக்குச் சிறந்ததாகத் தோன்றுகின்ற பொருளைக் கொண்டுவரும் பொருட்டு, நெடிய மூங்கில் உலர்ந்து வாடிய,  நீர் இல்லாத, கடத்தற்கரிய இடத்தில், வளைந்த வில்லையுடைய மறவர்கள், எதிர்த்து நின்று, வழிப்போக்கர்கள் அழியும்படி, அவர்களிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கூடியுண்ணும், கொடிய  யானைகள் திரியும் காட்டைக் கடந்து, தலைவர் பிரிந்து செல்வாரோ? செல்ல மாட்டார்.

சிறப்புக் குறிப்பு: தலைவர் கடந்துசெல்ல எண்ணிய பாலைநிலம் கொடிய மறவர்கள் வாழும் இடம். அதனால், தலைவர் அங்குச் செல்ல மாட்டார் என்று எண்ணிய தோழி, பாலை நிலத்தின் கொடுமையை விரிவாகக் கூறுகிறாள். கூட்டுண்ணுதல் என்பது  வழிப்போக்கர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளை அடிப்பதைக் குறிக்கிறது.  

330. தலைவி கூற்று

330.  தலைவி கூற்று
பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியனார்.
திணை: மருதம்.
கூற்று : பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள், “இந்த மாலை நேரத்தில் நான் துன்பத்தால் தனிமையில் வாடுகிறேன். தலைவர் சென்ற நாட்டில், இந்த மாலைக்காலமும், தனிமையும் இல்லையோ?” என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள்.

நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

கொண்டு கூட்டு: தோழி! நலத்தகைப் புலைத்தி, பசைதோய்த்து எடுத்துத் தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்பேரிலைப் பகன்றைப் பொதி அவிழ் வான்பூஇன்கடுங் கள்ளின் மணம்இல கமழும் புன்கண் மாலையும் புலம்பும்அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?

அருஞ்சொற்பொருள்: நலம் = நற்குணம்; தகை = அழகு; புலைத்தி = வண்ணாத்தி; தலைப்புடை = முதல் துவைப்பு; தண் = குளிர்ந்த; கயம் = குளம்; பரூஉ = பருத்த; திரி = முறுக்கினது (இங்கு, முறுக்கிய ஆடையைக் குறிக்கிறது); கடுக்கும் = ஒக்கும்; பகன்றை = ஒருவகைக் கொடி; பொதி = தளை அவிழாத மொட்டு; வான்பூ = வெண்மையான பூ; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை.
உரை: தோழி! நற்குணமும் அழகுமுடைய வண்ணாத்தி, கஞ்சியிலே தோய்த்து எடுத்து, முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு, குளிர்ந்த நீர்நிலையில் போட்டபின், அந்நீரில், பிரியாத பருத்த ஆடையின் முறுக்கை ஒத்திருக்கின்ற, பெரிய இலைகளையுடைய பகன்றையின் முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்த வெண்மையான மலர், இனிய கடுமையான கள்ளைப் போல நல்ல மணமில்லாமல் நாறுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், தனிமையும், தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்டில், இல்லையோ?
சிறப்புக் குறிப்பு: பகன்றையின் மலர்கள் வெண்ணிறமானவை. அதன் மலர்கள் நல்ல மணமில்லாதவை. பன்றையின் மொட்டு, முறுக்கிய துணியைப் போல் காட்சி அளிக்கும். முறுக்கிய துணி பகன்றை மொட்டுக்கு உவமை.

எனக்குத் துன்பதைத் தரும் மாலைக்காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டில் இல்லை போலிருக்கிறது. அவை அங்கு இருந்தால், என்னைத் துன்புறுத்துவது போல் அவரையும் துன்புறுத்தும். அவர் அத் துன்பத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் நீங்க விரும்பிஇங்கு வந்திருப்பார்.” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

329. தலைவி கூற்று

329. தலைவி கூற்று
பாடியவர்: ஓதலாந்தையார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறத்துந் தோழிக்கு யான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருத்தத்தோடு அழுதுகொண்டிருந்தாள். அதைக் கண்ட தோழி, “நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து, நீ தூங்காமல் இருப்பதையும் அழுவதையும் நிறுத்து.“ என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “நான் பொறுத்துக்கொண்டுதான் இருக்க விரும்புகிறேன். இருந்தாலும், என் கண்கள் தானாகவே தூக்கத்தை இழந்து அழுகின்றன. அதற்கு நான் என்ன செய்வேன்.?” என்று தலைவி தன் கண்களை வேறுபடுத்திக் கூறுகிறாள்

கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. 

கொண்டு கூட்டு: கான இருப்பை வேனல் வெண்பூ வளி பொரு நெடும் சினை உகுத்தலின்,  ஆர்கழல்புகளிறு வழங்கு சிறுநெறி புதையத் தாஅம் பிறங்கு மலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்துபயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித் தெள்நீர் நிகர்மலர் புரையும் நன்மலர் மழைக்கணிற்கு பனி எளிய

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; இருப்பை = ஒருவகை மரம்; வேனல் = வேனிற்காலம்; வளி = காற்று; பொருதல் = தாக்குதல்; சினை = கிளைஉகுத்தல் = உதிர்த்தல்; ஆர் = காம்பு; கழல்பு = கழன்றுபுதைய = மறைய; தாஅம் = பரவும்; பிறங்குதல் = விளங்குதல்; இறந்தவர் = கடந்தவர்; படர்தல் = நினைத்தல்; பயில்தல் = நெருங்கல்; நிகர் = ஒளி; புரையும் = போன்ற; பனி = நீர்த்துளி.

உரை: காட்டில் வளர்ந்த இருப்பை மரத்தின்,  வேனிற்காலத்திலே மலரும் வெண்ணிறமான பூக்கள்,  காற்றால் அலைக்கப்பட்ட நெடிய கொம்புகள் உதிர்ப்பதால், காம்பினின்றும் கழன்று, யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி, பரவிக் கிடக்கும்அத்தகைய  மலைகளையுடைய, கடத்தற்கு அரிய பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைத்து, மிகுந்த இருளையுடைய நடு இரவில், தூங்காமல்,  தெளிந்த நீரில் உள்ள ஒளி பொருந்திய மலரைப் போன்ற, நன்றாக விளங்குகின்ற, குளிர்ச்சியையுடைய என் கண்களில், நீர்த்துளிகள்  எளிதில் உண்டாகின்றன

328. தோழி கூற்று

328. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வேறுபடும் கிழத்தியை, அவர் வரையும் நாள் அணித்தெனவும், அலரஞ்சலெனவும் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ஊரில் உங்கள் இருவரையும் பற்றி அலர் மிகுதி ஆயிற்று. அதனால், நல்லதே நடக்கும். உன் சுற்றத்தார் அனைவரும் தலைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவனை உனக்குக் ஏற்ற கணவனாகக் கருதி, விரைவில் உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வர். ஆகவே, இந்த அலரைக் கண்டு  நீ அஞ்ச வேண்டியதில்லை.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இரங்குந் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: சிறுவீ ஞாழல் வேர் அளைப் பள்ளிஅலவன் சிறுமனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இயங்குந் துறைவன் நல்கிய நாள்தவச் சில. அலர் வில்கெழு தானை விச்சியர் பெருமகன்வேந்தரொடு பொருத ஞான்றை,  பாணர் புலிநோக்கு உறழ்நிலை கண்டகலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

அருஞ்சொற்பொருள்: வீ = பூ; ஞாழல் = ஒரு வகை மரம்; அளை = வளை; பள்ளி = இடம்; அலவன் = நண்டு; சிதைத்தல் = அழித்தல்; புணரி = அலை; குணில் = குறுந்தடி; இரங்குதல் = ஒலித்தல்; நல்குதல் = அன்பும் அருளும் காட்டுதல்; தவ = மிக; ஞான்று = பொழுது; உறழ்தல் = ஒத்தல்; கலி = ஆரவாரம்; ஆர்ப்பு = முழக்கம்.    சிலவே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலைஅலரே, பெரிதே என்பவற்றில் உள்ள ஏகாரங்கள் அசை நிலை.
உரை: சிறிய மலரையுடைய ஞாழல் மரத்தின் வேரில் உள்ள வளையிடமாகிய நண்டின் சிறிய வீடு அழியும்படிக் கடலலைகள் மோதும். அவ்வலைகள் குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன், உன்னிடம் அன்போடும் அருளோடும் பழகிய  நாட்கள் மிகவும் சிலவேயாகும். விற்படையோடு கூடிய விச்சியர்களுக்குத் தலைவன், அரசர்களோடு போர் செய்த காலத்தில், பாணர்களது புலியைப் போன்ற பார்வையைக் கண்டு,  குறும்பூரில் உள்ளவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் செய்த ஆரவாரத்தைவிட ஊராரின் பழிச்சொற்களால் உண்டாகிய  முழக்கம் பெரிதாக உள்ளது.
சிறப்புக் குறிப்பு: போர் நடக்கும் இடத்தில் உள்ள மக்கள் ஆரவாரம் செய்தாலும், முடிவில் போரில் ஒருவர் வெற்றி பெறுவதைப்போல், ஊரார் அலர் தூற்றினாலும், தலைவிக்கும் தலைவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.
 புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் விச்சிக்கோன் என்ற ஓரு குறுநிலமன்னனைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் விச்சியர் பெருமகன் அவனாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

பாணர் போர்க்களத்திற்குச் சென்று, போரில் வெற்றி பெற்ற  மன்னனை களவழிப்பா, பரணி முதலிய பாடல்களால் புகழ்ந்து பாடுதல் மரபு. போர் முடியும்வரை போரில் யார் வெற்றி பெறுவார் என்பதைப் பாணர்கள் அறியாததால், அவர்கள் ஒதுங்கி இருந்து, இருதரத்தாரும் போர் செய்வதைக் காண்பர். புலி மற்ற விலங்குகளை வேட்டையாடும்பொழுது பதுங்கி இருந்து, பார்த்துத் தக்க சமயத்தில் பாய்வதைப்போல், பாணர்கள் ஒதுங்கி இருந்து போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். இங்கு, புலியின் பார்வை பாணர்களின் பார்வைக்கு உவமை.