332. தோழி கூற்று
பாடியவர்: மதுரை
மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது
வந்தொழுகா நின்ற காலத்துக் கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்:தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் தலைவன் சிறிதும் அக்கறை காட்டவில்லை.
அவன் களவொழுக்கத்தையே விரும்புவதாகத் தலைவி எண்ணி வருந்துகிறாள்.
ஒருநாள் இரவு, தலைவியைக் காண்பதற்காகத் தலைவன்
வந்து மறைவிடத்தில் நிற்கிறான். அவன் வருகையை அறிந்த தோழி,
“ தலைவன் திருமணத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இருப்பதை நினைத்து,
நீ படும் துன்பத்தை, நீயே தகுந்த முறையில் அவனிடம்
எடுத்துரைத்தால் என்ன?” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு தலைவியைக்
கேட்கிறாள்.
வந்த
வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.
கொண்டு
கூட்டு:
தோழி! நாறுயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றச் சிறுகுடி யிழிதரு மன்ற நண்ணிய மலைகிழ
வோற்கே வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந்து அரும்படர் தீர நீ நயந்து கூறின் எவனோ?
அருஞ்சொற்பொருள்: பெயல் = மழை; கடைநாள் = கடையாமம்;
நோய் = காம நோய்; படர்
= துன்பம்; நயந்து = விரும்பி;
நாறு = மணம் வீசுகின்ற; உயிர்த்தல்
= மூச்சு விடுதல் ; மடப்பிடி = இளம் பெண்யானை; தழீஇ = தழுவி;
தடக்கை = வளைந்த கை; நண்ணிய
= பொருந்திய.
உரை: தோழி! மணம் வீசுகின்ற மூச்சையுடைய இளம் பெண்யானையைத் தழுவிக்கொண்டு, வளைந்த துதிக்கையையுடைய ஆண்யானை, குன்றிலுள்ள சிற்றூரின்
பொதுவிடங்களை நோக்கி இறங்கிச் செல்லுகிறது. அத்தகைய பொதுவிடங்கள்
பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு, வாடைக் காற்று வீசுகின்ற,
சிறிதளவே மழை பெய்யும் நாளின் கடைசி யாமத்தில், காமநோயில் நீந்திக்கொண்டிருக்கின்ற உனது பொறுத்தற்கரிய துன்பம்
தீரும் வண்ணம், நீயே விரும்பிக் கூற வேண்டியதைக் கூறினால்
என்ன?
சிறப்புக்
குறிப்பு:
ஆண்யானை
பெண்யானையைத் தழுவிகொண்டு பொதுவிடத்திற்கு வருவதைப் பற்றித் தோழி கூறுவது, தலைவன் தலைவியை வெளிப்படையாக பலரும் அறியும் வண்ணம் திருமணம் செய்துகொள்ள வேண்டும்
என்னும் குறிப்பை உணர்த்துகிறது.
ஆண்யானை பெண்யானையைத் தழுவிக்கொண்டு, பொதுவிடத்திற்கு வரும் காட்சியைத் தலைவன் கண்டிருப்பான். அதைக் கண்டால், தானும் தலைவியை மணந்துகொண்டு அன்போடு
வாழவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் தோன்றும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
No comments:
Post a Comment