Sunday, August 30, 2015

82. குறிஞ்சி - தலைவி கூற்று

82. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கடுவன் மள்ளனார்: தமிழ்நாட்டில் கடுவங்குடி என்ற பெயருள்ள ஊர்கள் பல உள்ளன. கடுவன் என்பது கடுவங்குடி என்பதின் திரிபாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.இவர் அகநானூற்றில் மூன்று பாடல்களும் ( 70, 256, 354) குறுந்தொகையில் ஒருபாடலும் (82) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: முன்பனிக்காலம் வந்தும் இன்னும் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். “அவர் உன்மீது மிகவும் அன்புடையவர். அவர் விரைவில் திரும்பி வருவார். நீ கவலைப்படாதே.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “ பிரிந்து செல்வதற்கு முன் அன்புயுடையவராகத்தான் இருந்தார். ஆனால், முன்பனிக்காலம் வந்தும் அவர் இன்னும் வரவில்லையே.  இனி என்னோடு அன்பாகவும் எனக்கு ஆதரவாகவும் இருப்பவர் யார்?”  என்று தன் ஐயத்தையும் அச்சத்தையும்  தோழியிடம் தெரிவிக்கிறாள்.
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே. 

கொண்டுகூட்டு: தோழி, சாரல் பெரும்புனம் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும் அரும்பனி அச்சிரம் வாராதோர் வார் உறு வணர் கதுப்பு உளரிப் புறம் சேர்பு அழாஅல் என்று நம் அழுதகண் துடைப்பார். யார் ஆகுவர் கொல்?

அருஞ்சொற்பொருள்: வார் =நீளம்; உறுதல் = பொருந்துதல்; வணர் = சுருண்ட முடி; கதுப்பு = கூந்தல் ; உளர்தல் = கோதுதல்; புறம் = முதுகு; சேர்பு = சார்ந்து; அழாஅல் = அழாதே; சாரல் = மலைப்பக்கம்; புனம் = வயல் (தினைப்புனம்); மறுகால் = தினையரிந்தபின் இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர்; கொழுமை = செழுமை; அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்).

உரை: தோழி, மலைப்பக்கத்தில் குறவனது பெரிய தினைப்புனத்தில், முதலில் விளைத்த  தினைய அறுவடை செய்தபின், அதன் மறுகால் பயிருனூடே செழிப்பாக வளர்ந்துள்ள அவரைக் கொடி பூக்கும், பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலம் வந்துவிட்டது. என் தலைவர் இன்னும் வரவில்லையே! முன்பு, (நான் அழுதால்) அவர் என்னுடைய நீண்ட சுருண்ட கூந்தலைத் தடவி, முதுகை சேர்த்து அணைத்துக்கொண்டுஅழாதேஎன்று கூறி என் கண்ணீரைத் துடைப்பார். இனி, நான் அழுதால், என்னை அன்போடு அணைத்து என் கண்ணீரைத் துடைப்பவர் யார்?  

விளக்கம்:   குறவன், ஒருமுறை அறுவடை செய்த தினைப்பயிரால் பயன்பெற்றது மட்டுமல்லாமல் மீண்டும் மறுகாலில் விளையும் பயிராலும் அவரையாலும் பயன்பெறுதற்குரிய முன்பனிக்காலம் என்றது தலைவன் பிரிந்து செல்வதற்குமுன் தலைவியோடு இன்புற்றதல்லாமல், தன் பணியை முடித்துத் திரும்பிவந்து மீண்டும் தலைவியோடுகூடி இன்புற்றிருப்பதற்குரிய முன்பனிக்காலம் என்று உள்ளுறை உவமமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.  

81. குறிஞ்சி - தோழி கூற்று

81. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.    பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள்.  இவரது இயற்பெயர் சாத்தனார்.  இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்.  தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கன் என்பது தொழிற்பெயர்.  மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.  இவர் புறநானூற்றில் இயற்றிய ஒரு செய்யுள் (198) மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுட்களையும் (38, 214, 242, 268, 305), நற்றிணையில் 8 செய்யுட்களையும் (25, 37, 67, 104, 199, 299, 323, 378), குறுந்தொகையில் 5 செய்யுட்களையும் (81, 159, 278, 314, 366) இயற்றியுள்ளார். 
பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் பகல் நேரங்களில் சந்தித்தார்கள். தலைவன் தலைவியை இரவில் சந்திக்க விரும்புகிறான். தலைவியிடம் தன் விருப்பத்தை நேரடியாகக் கூறினால் அவள் சம்மதிக்க மட்டாளோ என்று எண்ணித் தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் இரவு நேரத்தில் சந்திக்க விரும்புவதாகவும், அதற்குத் தோழி உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்கிறான். தலைவனுக்காகப் பரிந்துரை செய்வதைத் தோழி விரும்பவில்லை. ஆனால், தலைவன் மீண்டும் மீண்டும் தோழியை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால், “சரி. உனக்காக நான் தலைவிடம் பேசுகிறேன்என்று தோழி கூறினாள். தலைவனை இரவு நேரத்தில்  சந்திப்பதற்குத் தோழி தலைவியை சம்மதிக்கச் செய்தாள்விருப்பமும் அச்சமும் கூடிய மனநிலையோடு தலைவி தலைவனை ஒருநாள் இரவு சந்தித்தாள். தலைவனும் தலைவியும் உணர்ச்சி வசப்பட்டார்கள். இருவரும் உடலுறவு கொண்டார்கள். தலைவி முதன்முறையாகத் தன் பெண்மை நலத்தை (கற்பை) இழந்தாள்.  உணர்ச்சியினால் உந்தப்பட்டு நடைபெற்ற தவறையும் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் எண்ணிப்பார்த்துத் தலைவி தனிமையில் வருத்தத்தோடு வாடுகிறாள். மறுமுறை தலைவியை சந்திக்கத் தலைவன் அதே இடத்திற்கு வருகிறான், அங்கே, தலைவிக்குப் பதிலாகத் தோழி வருகிறாள். ” நீ தலைவிக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்; அவளைக் கைவிட்டுவிடாதே; அவளோடு பழக வேண்டும்என்று கூறி, தானும் தலைவியும் வசிக்கும் ஊரையும் அதற்கான அடையாங்களையும் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.



இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே. 

கொண்டுகூட்டு: நின்சொல் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழல் பல்சினை ஒருசிறைபுதுநலன் இழந்த புலம்புமார் உடையள் இவள்உதுக்காண் ! நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணை எம் சிறுநல் ஊர்.  (நீ)  உள்ளல் வேண்டும்!

அருஞ்சொற்பொருள்: தேறுதல் = நம்புதல்; பசு = பசுமையான; நனை = மொட்டு; ஞாழல் = ஒருவகை மரம்சினை = கிளை; சிறை = இடம்; புதுநலன் = புதிதாக இருந்த பெண்மை நலம் (கற்பு); புலம்பு = தனிமை; மார்அசை நிலை, இடைச்சொல்; உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்); தெய்ய - அசை நிலை ; உள்ளல் = நினைத்தல்; புலவு = புலால் நாற்றம்; திரை = அலை; கானல் = சோலை; பெண்ணை = பனைமரம்.

உரை:, உன் சொல்லை ஏற்றுக்கொண்டு உனக்காக நான் கூறிய சொற்களை நம்பி, பசுமையான அரும்புகளையுடைய ஞாழல் மரத்தின் பல கிளைகள் இருக்கும் ஓரிடத்தில், இதுவரை இழக்காமல் இருந்த தன் பெண்மை நலத்தை இழந்ததால் தலைவி இப்பொழுது தனிமையில் வருந்துகிறாள். அதோ பார் !  நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடையது, எமது சிறிய நல்ல ஊர். இனி, நீ எம்மை மறவாது நினைக்க வேண்டும்.

விளக்கம்: தோழியின் சொற்களை நம்பித் தலைவி தன் காதலனை இரவு நேரத்தில் சந்திக்கச் சம்மதித்தாள். கடந்தமுறை சந்தித்த பொழுது அவள் முதன்முறையாகத் தன் பெண்மை நலத்தை இழந்தாள். அதனால், அவள் மனக்கலமுற்றுச் செய்வதறியாமல் தனிமையில் வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் நிலைக்குத் தான் ஒரு காரணம் என்பதை நினைத்துத் தோழியும் வருந்துகிறாள். ”தலைவன் தொடர்ந்து தலைவியோடு பழக வேண்டும்; அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்; திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய வேண்டும்.” என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அவளும் தோழியும் வசிக்கும் ஊரையும் அதற்கான அடையாளங்களையும் தலைவனுக்குக் கூறுகிறாள்.


கடல் அலைகள் நுரைகளுடன் கூடி  வெண்மையாக இருப்பதால் கடலுக்கு  நிலவும், சோலை அடர்த்தியாக இருண்டு இருப்பதால் சோலைக்கு இருளும் உவமையாகக் கூறப்பட்டுள்ளனசிறிய ஊராக இருந்தாலும் அவ்வூர் நல்ல ஊர் என்பதைக் குறிப்பதற்காக, “சிறு நல்லூர்என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது

80. மருதம் - பரத்தை கூற்று

80. மருதம் - பரத்தை கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளை 15- ஆம் பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து, பரத்தையோடு வாழ்கிறான். தலைவனின் செயலால் கோபமுற்ற தலைவி பரத்தையை இகழ்ந்து பேசுகிறாள். தலைவி தன்னை  இகழ்ந்து பேசியது பரத்தைக்குத் தெரியவந்ததுதன்னைப் பற்றிப் புறங்கூறினாள் என்று கேட்ட பரத்தை, “நானும் தலைவனும் நீர்த்துறையில் குளித்து விளையாடி மகிழப் போகிறோம்தலைவிக்கு வலிமையும் திறமையும் இருந்தால் தன் கணவனை என்னிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும்என்று தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறுகிறாள்.
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. 

கொண்டுகூட்டு: கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிபெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாம் அஃது அயர்கம் சேறும்.  தான், அஃது அஞ்சுவது உடையளாயின், வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. 

அருஞ்சொற்பொருள்: ஆம்பல் = ஆம்பல் மலர்; முழுநெறி = இதழொடிக்கப்படாத முழுப்பூ; அடைச்சுதல் = செருகுதல்; பெரும்புனல் = வெள்ளம்; இரு = பெரிய; அயர்தல் = விளையாடுதல்; சேறல் = செல்லுகை; வெம்போர் = வெம்மையான போர்; நுகம் = வலிமை; பட = அழிய; கடத்தல் = வெல்லுதல்; பல்வேல் = பலவேல்களையுடைய; எழினி = ஒரு குறுநிலமன்னன்; முனை = போர்முனை; ஆன் = பசு; நிரை = கூட்டம்; கிளை = சுற்றம்.
உரை: நாம் நம்முடைய கூந்தலில் இதழொடிக்கப்படாத முழு ஆம்பற்பூக்களைச் செருகி, நீர்மிகுந்த பெரிய துறையை விரும்பி, அங்கே தலைவனோடு விளையாடச் செல்வோம்நாம் அவ்வாறு தலைவனோடு விளையாடுவதைக் கண்டு தலைவி அஞ்சுவாளானால், கடுமையான போரில், பகைவரின் வலிமையை அழித்து வெற்றிபெற்ற, பல வேற்படைகளையுடைய எழினியின் போர்முனையில் உள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல, அவள் தன் கொழுநனின் மார்பைத் தன் சுற்றத்தரோடு சேர்ந்து பாதுகாப்பாளாக.

விளக்கம்:  சங்க காலத்தில் எழினி என்ற பெயரில் பல  குறுநில மன்னர்கள் இருந்தார்கள். ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழினி என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி என்று உ. வே. சா அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஒரு சமயம் எழினியின் பசுக்களை (ஆனிரையை) அவனுடைய பகைவர்கள் கவர்ந்து சென்றனர். எழினி தன்னுடைய வலிய படையுடன் சென்று தன்னுடைய ஆனிரையை மீட்டுவந்தான். இந்த நிகழ்ச்சி அகநானூற்றின் 105 – ஆம் பாடலிலும், 372 – ஆம் பாடலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”எழினி தன் வலிமையால் தன் பசுக்களை மீட்டியதைப் போலத் தலைவி வலிமையும் திறமையும் உடையவளாக இருந்தால், நான் கவர்ந்த அவளுடைய கணவனைத் தலைவி என்னிடமிருந்து பாதுகாக்கட்டும்.” என்று பரத்தை தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறித் தலைவியை எள்ளி நகையாடுகிறாள்.

79. பாலை – தலைவி கூற்று

79. பாலைதலைவி கூற்று

பாடியவர்: குடவாயிற் கீரக்கனார்.  இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவி தன்னுடன் வரமாட்டாள் என்று தவறாகப் புரிந்துகொண்ட தலைவன் அவளிடம் சொல்லாமலேயே அவளைப் பிரிந்து, பொருள் தேடச் செல்கிறான். தன்னைத் தவறாகப் புரிந்துகொண்ட தலைவன் தான் சென்ற இடத்திலேயே தங்கிவிட்டானோ என்று தலைவி தோழியிடம் கூகூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.
 
கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 

கொண்டுகூட்டு: யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்கு, சொல்லாது அகறல் வல்லுவோர்கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை ஏறி, ஒய் எனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்த் தாமே சேர்ந்தனர் கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; தோல் = மரத்தின் பட்டை; நயந்து = விரும்பி; பொரிதல் = பொருக்குவெடித்தல்; தாள் = அடிப்பக்கம்; ஓமை = ஒரு மரம்; வளி = காற்று; பொருதல் = வீசுதல்; சினை = கிளை; அலங்கல் = அசைதல்; உலவை = மரக்கொம்பு; ஒய்யென = விரைவாக ; புலம்பு = தனிமை ; தரு = தரும் (வெளிப்படுத்தும்) ; குரல = குரலையுடைய; புறவு = புறா; பெடை = பெண்பறவை; அத்தம் = பாலை நிலம்; நண்ணுதல் = பொருந்துதல்;  சீறூர் = சிற்றூர்; சேர்தல் = ஒன்று கூடுதல்; ஒல்லுதல் = உடன்படுதல்; தப்பல் = தவறு புரிதல்; அகலல் = நீங்கல்; வல்லுவோர் = வல்லவர் .
உரை: தோழி, நாம் அவர் பிரிவுக்கு உடன்பட மாட்டோம் என்று தலைவர் தவறாக எண்ணியதால், சொல்லாமற் செல்லுதலில் வல்லமை உடைய அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற இடத்தில், காட்டு யானைகள் தோலை விரும்பியுண்ட, பொரிந்த தாளோடு கூடிய ஓமை மரங்களின் காற்று அடிக்கும் கிளைகளுள் அசையும் உலர்ந்த கிளையின் மேல் ஏறி விரைவாகத், தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலோடு, ஆண்புறாக்கள் தங்கள் துணையை அழைக்கும் பாலைநிலத்தில் உள்ள, அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ?

விளக்கம்: பாலை நிலத்திலுள்ள ஆண்புறா தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ என்றது, ”பறவையினங்களும் தம் துணையை அன்போடு அழைக்கும் அவ்விடத்தில் தங்கினால், அங்குள்ள நிகழ்ச்சிகள் அவர் என்னிடம் வந்து வாழவேண்டிய கடமையை அவருக்கு அறிவுறுத்தும் அல்லவா/”  என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறதுதலைவர் சொல்லாமல் செல்லுவதுண்டு என்பது  குறுந்தொகையின் 43 – ஆம் பாடலிலும் கூறப்பட்டுள்ளது

78. குறிஞ்சி - பாங்கன் கூற்று

78. குறிஞ்சி - பாங்கன் கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து.  வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர்.  இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.  இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர்.  இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 6 செய்யுட்களையும் ( 78, 105, 161, 266, 280, 368) இயற்றியவர்.  மற்றும் பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.  இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
குறுந்தொகையில், ‘கொங்குதேர் வாழ்க்கைஎன்று தொடங்கும் பாடலைச் (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது.  அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்ததாகவும், நக்கீரர், ‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமேஎன்று சொன்னதாகவும் திருவிளையாடற் புராணத்தில் கூறப்படுகிறது. 

பாடலின் பின்னணி: தலைவன் ஒரு பெண்மீது காதல் கொண்டிருக்கிறான். அவன் காதல் ஒருதலைக் காதலாகத் தோன்றுகிறது. தன்னுடைய காதல் வெற்றி பெறாததால், தலைவன் உடல் மெலிந்து காணப்படுகிறான். தலைவனுடைய மெலிந்த தோற்றத்தைக் கண்ட தோழன் (பாங்கன்) தலைவனுக்கு அறிவுரை கூறி, அவனைத் தேற்றுகிறான்.

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.

கொண்டுகூட்டு: பெருவரை மிசையது நெடுவெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப ! காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்து.  (அது) நோதக்கன்றே !

அருஞ்சொற்பொருள்: வரை = மலை; மிசை = மேல், உச்சி; முதுமை = பேரறிவு; வாய் = வாய்த்த;கோடியர் = கூத்தர்; முழவு = முரசு; ததும்புதல் = முழங்குதல்; சிலம்பு =பக்கமலை; இழிதல் = விழுதல்; இலங்குதல் = விளங்குதல்; வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; யாவதும் = சிறிதும்; நோதக்கது = துன்பம் தரும் தன்மையது.
உரை: பெரிய மலையின் உச்சியிலுள்ள, நெடிய வெண்மையான அருவியானது, மிகுந்த அறிவுடைய கூத்தர்களின் முரசைப் போல ஒலித்து, பக்கமலையில் விழுகிறது. அத்தகைய,  விளங்குகின்ற மலைகளையுடைய குறிஞ்சிநிலத் தலைவ!  காமமானது, சிறிதும், இது நன்மையென உணரும் அறிவில்லாதவர்களிடத்தும் சென்று தங்குகின்ற, பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது, துன்பம் தரும் தன்மையையுடையது.
விளக்கம்:      மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த மலையில்  வீழ்ந்தது போல, மிகுந்த பெருமையையுடைய தலைவன், அவனுடைய பெருமையையும் அறிவையும் நீக்கிக் காமங்கொண்டான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம். மற்றும், அந்த அருவியின் ஒலி தலைவனைப் பற்றி ஊர் மக்கள் எழுப்பும் அலரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
சென்ற இடத்தாற் செல்விடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.                                                       (குறள் – 422)

என்ற குறள், தீயவழிகளில் மனத்தைச் செலுத்தாது நல்ல வழிகளில் மனத்தைச் செலுத்துவது அறிவு என்கிறது. காமம் அதன் நன்மையை உணராதவரிடத்தும் செல்வதால் அதைப் பேதை என்று இப்பாடலில் புலவர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. ”காமத்துக்குக் கண்ணில்லைஎன்னும் பழமொழி இங்கு நினைவு கூரத்தக்கது.

இப்பாடலில், தலைவனின் காதல் ஒருதலைக் காதலாகத் தோன்றுகிறது. தன்னைக் காதலிக்காத ஒருவரைக் காதலிப்பவர்கள் தங்கள் மான உணர்வைப் பற்றிக் கவலைப்படமாட்டர்கள் என்ற கருத்து,

            செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
            உற்றார் அரிவதொன்று அன்று.                                         (குறள் – 1255)


என்ற குறளில் காணப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

77. பாலை - தலைவி கூற்று

77. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர்.  இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.  இவர் தந்தை பெயர் மருதன்.  ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவரது  இயற்பெயர் இளநாகன்.  இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி உடல் மெலிந்து காணப்படுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்ட தோழி, “ உன் தோள்கள் ஏன் மெலிந்து காணப்படுகின்றன? உனக்கு உடல்நலமில்லையா?” என்று கேட்கிறாள். தன் தோள்கள் மெலிந்திருப்பதின் காரணத்தை  தலைவி தோழிக்குக் கூறுவதாக  இப்பாடல் அமைந்துள்ளது.

அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே.

கொண்டுகூட்டு: அம்ம ! வாழி !தோழி ! வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கைநெடுநல் யானைக்கு இடு நிழலாகும் அரிய கானம் சென்றோர்க்கு எளிய ஆகிய (என்) தடமென் தோளே. யாவதும் தவறெனின் தவறோ இலவே.

அருஞ்சொற்பொருள்: யாவதும் = சிறிதும்; சுரம் = பாலை நிலம் ; வெஞ்சுரம் = வெப்பமுடைய பாலைநிலம்; உலத்தல் = சாதல்; வம்பலர் = வழிப்போக்கர்கள்; உவல் = தழை; பதுக்கை = குவியல்; கானம் = காடு; தடம் = பெருமை.
உரை: அம்ம, தோழி ! நீ வாழ்க! வெப்பமான பலைநிலத்தில், இறந்த வழிப்போக்கர்களுடைய உடலை மறைப்பதற்காகத் தழைகள் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த குவில்கள் பெரிய நல்ல யானைக்கு,  நிழலைத் தருவதற்குப் பயன்படுகின்றன. அத்தகைய, கடத்தற்கரிய பாலைநிலத்தில், என்னைப் பிரிந்து சென்ற தலைவருக்காக என்னுடைய பெரிய மென்மையான தோள்கள் மெலிந்தன. தோள்கள் மீது சிறிதும் தவறில்லை.
விளக்கம்: பாலைநிலத்திற் செல்லும் வழிப்போக்கர்களை, பாலைநிலத்திலுள்ள வழிப்பறிக் கள்வர்கள் கொன்று, அவர்களின் உடலைத் தழைக்குவில்களாலும் கற்குவியல்களாலும் மூடுவது வழக்கம்.  ”நான் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருந்தாலும், அவர் தழுவிய என் தோள்கள் அவரோடு தொடர்பு உடையவையாதலால், அவர் செல்லும் வழியில் உள்ள கொடுமைகளை நினைத்துத் தாமாகவே மெலிந்தன. அது தவறன்றுஎன்று தலைவி தன் தோள்கள் மெலிந்ததற்குக் காரணம் கூறுகிறாள். இவ்வாறு தலைவி வருத்தத்தில் இருக்கும் பொழுது, அவள் உடலுறுப்புகளுக்கு உணர்வுடையன போலக் கூறுவது இலக்கிய மரபு என்பதை தொல்காப்பியம் சுட்டிக் காட்டுகிறது.

வண்ணம் பசந்து புலம்புறு காலை
உணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி
புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. (தொல். பொருளியல் – 8)

பொருள்: தலைவனின் பிரிவால் பசலையுற்றுத் தனிமையில் வருந்தும் போது, தன் கண், நெற்றி, தோள் முதலான உறுப்புக்களை, அவை தாமாகவே தலைவனின் பிரிவை உணர்ந்து வருந்துவன போலப் பொருந்திய வகையில் தலைவி சேர்த்துச்  சொல்வாள்.


திருக்குறளில் கண் விதுப்பழிதல் (அதிகாரம் – 118) என்ற அதிகாரத்திலும் நெஞ்சொடு கிளத்தல் (அதிகாரம் -125) என்ற அதிகாரத்திலும் கண்கள் தாமாகவே செயல்படுவதாகத் தலைவி கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது

76. குறிஞ்சி - தலைவி கூற்று

76. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளி மங்கலங்கிழார். இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்கள் (76, 110, 152, 181) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்ற செய்தியை அறிந்த தோழி அதைத் தலைவியிடம் கூற வந்தாள். ஆனால், அந்தச் செய்தி தலைவிக்கு முன்பே தெரியும். ஆகவே, தலைவி, “அவர் செல்வதை நீ தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது என்னிடம் வந்து அவர் பிரிந்து செல்லப் போகிறார் என்று சொல்லுகிறாயே!” என்று கூறுகிறாள்.

காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே. 
-
கொண்டுகூட்டு: சிலம்பிற் சேம்பின் வள்ளிலை, வாடை தைஇ அலங்கல் பெருங்களிற்றுச் செவியின் மான  தண்வரல் தூக்கும் கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே கல்வரை மார்பர்  காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச் செல்ப என்ப
 அருஞ்சொற்பொருள்: காந்தள் = வெண்காந்தள் மலர்; ஒங்கல் = உயர்ச்சி; செல்ப = செல்வார்; என்ப = கூறுகின்றனர்; வரை = மலை; சிலம்பு = பக்கமலை; சேம்பு = ஒருவகைச் செடி (சேப்பங்கிழங்குச் செடி) ; அலங்கல் = அசைதல்; வள் = வளம்; களிறுஆண் யானை ( யானை); மானல் = ஒத்தல்; தைஇ = தடவி; தண் = குளிர்ச்சி ; தண்வரல் = குளிர்ச்சியைக் கொண்டுவரும் ; வாடை = வாடைக் காற்று; தூக்கும் = அசைக்கும்; அச்சிரம் = முன்பனிக்காலம்; அஞர் = துன்பம்.
உரை: தோழி, மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது செழுமையான இலைகளைத் தடவிக்கொண்டு வாடைக்காற்று வருகிறது. அந்த வாடைக்காற்றில், சேம்பின் இலைகள், பெரிய யானையின் காதுகளைப்போல் அசைகின்றன. குளிர்ச்சியோடு வரும் அந்த வாடைக்காற்று வீசும் கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில், நான் நடுங்கும்படியான துன்பத்தை அடையும்படிகற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய என் தலைவர், காந்தளை வேலியாகயுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிற்கு என்னைப் பிரிந்து செல்வார் என்று கூறுகின்றனர்.

விளக்கம்: ”கல்வரை மார்பர்என்று தலைவி தலைவனைக் குறிப்பிடுவது, முன்பனிக்காலத்தில் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லுவதை அவள் விரும்பாததால் அவனை இரக்கமற்ற கல்நெஞ்சினன் என்று கூறுவதைக் குறிக்கிறது

Monday, August 17, 2015

75. மருதம் - தலைவி கூற்று

75. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 33 – இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு வாழ்ந்துவந்தான். ஒருநாள், பாணன் ஒருவன் தலைவியிடம் வந்து, தலைவன் அவளுடைய இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகக் கூறினான். அந்தச் செய்தியைக் கேட்ட த் தலைவி பெருமகிழ்ச்சி அடைந்தாலும், அந்தச் செய்தி உண்மைதானா என்பதைத் தெளிவாகத்  தெரிந்துகொள்ள விரும்புகிறாள்.

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

அருஞ்சொற்பொருள்: ஒன்று = உண்மை; தெளிதல் = அறிதல்; நசை = விருப்பம்; சோணைபாடலிபுத்திரம் என்னும் ஊருக்கு அருகே இருந்த ஒரு ஆறு; படிதல் = மூழ்குதல், குளித்தல், அனுபவித்தல்; மலிதல் = மிகுதல்; பாடலி = பாடலிபுத்திரம் என்னும் நகரம். பெறீஇயர் = பெறுவாயாக.

உரை: பாண, என் கணவர் வருவதை,  நீயே உன் கண்ணால் கண்டாயோ? அல்லது அவர் வரவைக் கண்டவர்களிடமிருந்து கேட்டறிந்தாயோ? பிறரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாயானால், யாரிடமிருந்து தெரிந்துகொண்டாய்? நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். நீ  சொல்வாயாக; சொன்னால், வெண்மையான  கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் மூழ்கி விளையாடும், பொன்மிகுந்த பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.

விளக்கம்: போருக்குச் சென்ற தலைவன் பாசறையிலிருக்கும் காலத்தில் பாணனைத் தலைவி தூது விடுதலும்,  தலைவனும் பாணனைத் தலைவியிடம் தூது விடுதலும்  ஐங்குறுநூற்றுப் பாடல்கள் 477, 478 மற்றும் 479 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அது ஒருமரபாக இருந்ததாகவும் , . வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார். அவ்வாறு, தூது சென்ற பாணன், தலைவன் வரவைக் கூறியதால் தலைவி அவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.  

சோணை என்பது ஒரு ஆறு. அந்த ஆற்றின் வடகரையில், பழங்காலத்தில் மகத நாட்டின் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரம் என்னும் நகரம் இருந்ததாகத் தெரிகிறது. பாடலிபுத்திரம் பாடலி என்று அழைக்கப்பட்டதும்  அது பொன்னால் சிறப்படைந்திருந்ததும் அகநாநானூறு மற்றும் பெருங்கதை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

 தலைவி  "பாடலிபெறீஇயர்" என்று கூறியது அவள் பாணனைப் பெருஞ்செல்வம் பெறுவாயாக என்று வாழ்த்தியதைக் குறிக்கிறது.

தலைவனுடைய வரவைத் தலைவி பலகாலமாக எதிர்பார்த்து,அவன் வராததால்  ஏமாற்றம் அடைந்திருந்ததால், தலைவன் வருகிறான் என்று பாணன் சொன்னதை நம்ப முடியாமல், ”நீ கண்டனையோ?, கண்டார்க் கேட்டனையோ?, யார்வாய்க் கேட்டனையோ? ” என்று கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறாள். இவ்வாறு அவள் பலமுறை கேட்பது கணவன் வரவில் அவளுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது,


மொழிமோ என்பதில், மோ என்பது முன்னிலை அசை.

74. குறிஞ்சி - தோழி கூற்று

74. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: விட்டகுதிரையார். விட்டகுதிரைஎன்ற தொடரை இப்புலவர் இப்பாடலில் பயன்படுத்தியிருப்பதால் இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.  சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் தற்செயலாகச் சந்தித்தார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகின்றனர். ஆனால், அவனைத் தொடர்ந்து சந்திப்பதற்கும் அவனோடு பழகுவதற்கும் தலைவி தயங்குகிறாள். தலைவியின் தயக்கத்திற்குக் காரணம் அவளுடைய பெற்றோர்களின் கட்டுப்பாடாகவோ அல்லது அவர்களின் களவொழுக்கம் பிறருக்குத் தெரியவந்தால் அதனால் அலர் (ஊர்மக்களின் பழிச்சொல்) எழும் என்ற அச்சமாகவோ இருக்கலாம். “நீ அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ அவனை விரும்புகிறாய். அவனும் உன் ஞாபமாகவே இருந்து உடல் மெலிந்து காணப்படுகிறான். இந்த நிலையில், நீ அவனைச் சந்தித்துப் பழகுவதுதான் சரியானதாக எனக்குத் தோன்றுகிறது. நீ அவனைச் சந்திக்கத் தயங்கினால், அவனுக்கு உன் விருப்பம் எப்படித் தெரியும்? நீ அவனை விரும்புவது அவனுக்குத் தெரியாவிட்டால், அவன் உனக்காக வெகுநாட்கள் காத்திருக்காமல், வேறொரு பெண்னைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான். ஆகவே, அவன் குறிப்பிட்ட இடத்திற்கு நாம் செல்வோம். உன் அன்பையும் விருப்பத்தையும் அவனிடம் நீ பகிர்ந்துகொள்.” என்று தோழி தலைவிக்கு அறிவுறை  கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. 

அருஞ்சொற்பொருள்: விசைத்தல் = வேகமுறல் (வேகமாக ஓடுதல்) ; விசும்பு = ஆகாயம்; தோய்தல் = பொருந்துதல்; கழை = மூங்கில்; படர்தல் = நினைத்தல்; வேனில் = வெயில் காலம் ; ஆனேறு = எருது (காளை) ; சாய்தல் = மெலிதல்; மாணலம் = மாண் + நலம் = மாட்சிமைப்பட்ட நலம்.
உரை: உன் தலைவன்,குறிஞ்சி நிலத் தலைவன். அவன் நாட்டில்கட்டப்பட்டிருந்த குதிரை அவிழ்த்து விடப்பட்டதும் விரைவாகத் துள்ளியெழும் எழுச்சியைப் போல், யானை வளைத்துப் பின் விட்டதால் வானளாவிய பசிய மூங்கில் பொருந்திய குன்றுகள் உள்ளன. நீ அவனை நினைத்து  உடல் மெலிவதை அவன் அறியாதவன். அவனும் உன்னோடு கூடி மகிழும் இன்பத்தை விரும்பி, வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாத காளை போல் உடல் மெலிந்தான் என்று கூறுகின்றனர்,
விளக்கம்: யானை மூங்கிலை உண்ணுவதற்காக வளைத்தலும் எதற்காகவாவது அஞ்சி மூங்கிலை விடுவதும் குறிஞ்சி நிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது, இந்தச் செய்தியை குறுந்தொகையின் 54 – ஆம் பாடலில் காணலாம்.
யாம்என்றும் நம்என்றும் தோழி குறிப்பிடுவது தலைவிக்கும் தோழிக்கும் உள்ள நெருங்கிய நட்பையும்  மனவொற்றுமையையும் குறிக்கிறது. வெயிலின் வெம்மையால் துன்பமடைந்த ஆனேறு, காமநோயால் துன்புற்ற தலைவனுக்கு உவமை.    வளைக்கும் பொழுது வளைந்தாலும் இயல்பாகவே  விண்ணை நோக்கி வளரும் உயர்ந்த தன்மையை உடைய மூங்கிலைப்போல, தலைவன் தலைவியிடம் அன்பாகவும் பணிவாகவும் பழகினாலும் அவன் இயல்பாகத் தலைமைப் பண்பு உடையவன் என்பது குறிப்பு. தலைவி தலைவனைச் சந்தித்துப் பழகாவிட்டால், தலைவன் விசைத்தெழுந்த மூங்கிலைப் போல் தலைவியோடு தனக்குள்ள தொடர்பை நீக்கிவிட்டு வேறொருபெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.  

73. குறிஞ்சி - தோழி கூற்று

73. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவனும்தலைவியும் முதலில் பகலில் சந்திதார்கள். பின்னர், இரவு நேரங்களில் சந்தித்தனர். இவ்வாறு களவொழுக்கம் தொடர்ந்தது. ஆனால் தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அதனால், தோழியும் தலைவியும்  வருத்தமுற்றனர். “உனக்குத் திருமணம் விரைவில் நடைபெற வேண்டுமானால், நாம் சற்று சிந்தித்துத் தந்திரமாகச் செயல்பட வேண்டும்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 

அருஞ்சொற்பொருள்: மகிழ்நன் = தலைவன்; வெய்யை = விரும்புகிறாய்; அழியல் = வருந்தாதே; நன்னன் = சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன்; நறு = மணம் பொருந்திய; மா = மாமரம்; ஒன்றுமொழி = உறுதிமொழி ( வஞ்சினம்); கோசர் = பழைய வீரர் குடியினுள் ஒரு சாரார்; வன்கண் = கொடுமை; சூழ்ச்சி = ஆராய்ச்சி (தந்திரம்).
உரை: தோழி, நீ தலைவனது மார்பை (தலைவனை) விரும்புகிறாய்.  உனக்கும் அவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவேண்டுமானால், நன்னன் என்னும் அரசனுடைய காவல்மரமாகிய மாமரத்தை வெட்டி, அவனது நாட்டினுள் புகுந்து, வஞ்சினம் கூறிய கோசரைப் போல, நாம் சிந்தித்துத் தலைவன் வருந்துமாறு சிறிது தந்திரமாக ஒருதிட்டம் தீட்டவேண்டும். நீ வருந்தாதே.

விளக்கம்: நன்னன் என்ற பெயரில் பல குறுநில மன்னர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளை வெவ்வேறு காலத்தில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நன்னன் என்பவன் கொங்கு நாட்டுக்கு அருகில் இருந்த ஒரு மலைநாட்டை ஆட்சி புரிந்தவன் என்று கருதப்படுகிறது. அவனது காவல் மரம் ஒரு மாமரம்.  அந்த மரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஒன்று ஆற்றுநீரில் மிதந்து வந்தது. நீராடிய கோசர் குடிப் பெண்ணொருத்தி அந்தப் பழத்தை எடுத்துத் தின்றாள். அவள் அந்தப் பழத்தைத் தின்றதைக் குற்றமாகக் கருதிய நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். ஆகவே, அவன் பெண்கொலை புரிந்த் நன்னன் என்று அழைக்கப்பட்டான் (குறுந்தொகை 292). தங்கள் குலப்பெண் ஒருத்தியை நன்னன் கொலை செய்ததால், கோபமுற்ற கோசர், ஒரு சூழ்ச்சி செய்து, நன்னனின் காவல் மரத்தை வெட்டி வீழ்த்தினர். கோசர்கள் செய்த சூழ்ச்சி இன்னதென்று தெரியவில்லை.
ஒன்றுமொழி என்பது வெவ்வேறு விதமாகப் பேசாமல் உறுதியாக ஒன்றைச் சொல்லுவதைக் குறிக்கிறது. ஆகவே, ஒன்றுமொழி என்பதற்கு வஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம். வஞ்சினம் கூறினால் அதை நிறைவேற்றுவதில் கோசர்கள் வல்லவர்கள் என்பது குறுந்தொகையின் 15 –ஆம் பாடலிலிருந்து தெரிய வருகிறது. கோசர்கள் தங்கள் வஞ்சினத்தை நிறைவேற்றுவதைப் போல், தலைவனை இனி சந்திக்க முடியாது என்று கூறி, உறுதியுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், தலைவன் திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வான் என்பது குறிப்பு.

72. குறிஞ்சி - தலைவன் கூற்று

72. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: மள்ளனார். இவர் குறுந்தொகையில் இந்த ஒரு செய்யுளையும் நற்றிணையில்  ஒருசெய்யுளையும் (204) இயற்றியவர்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைக் கண்டு, அவள் கண்களின் அழகை வியந்து, அவள் பேசும் இனிய மொழிகளைக் கேட்டு இன்புற்று, அவளுடைய பெரிய, மென்மையான தோளைத் தழுவி மகிழ்ந்தான். அவளைப் பற்றிய நினைவாகவே இருக்கிறான். அவனுடைய உடல்நிலையிலும் மனநிலையிலும் பெரிய மாற்றத்தைக் கண்ட தலைவனின் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வாறு வருத்தமாக உள்ளாய்?” என்று கேட்கிறான். அதற்குத் தலைவன், “அந்தப் பெண்ணின் அழகும் அவள் பேசிய இனிய் சொற்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அவளுடைய கண்கள் பூக்களைப் போல் அழகாக இருந்தாலும் அவை என்னைத் தாக்கி, எனக்குத் தாங்க முடியாத காமநோயைத் தந்தன .” என்று கூறுகிறான்.

பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.

அருஞ்சொற்பொருள்: அலமருதல் = சுழலுதல்; = அம்பு; நோய் = துன்பம்; தேமொழி = தேன் போன்ற இனிய சொற்கள்; பருவி = பருத்தி; பரீஇ = பருத்தி (பருவி என்பது மருவி பரீஇ என்று வந்தது.); வித்திய = விதைத்த; ஏனல் = தினைப்புனம் ; குரீஇ = குருவி; ஓப்புதல் = ஓட்டுதல்; மழை = குளிர்ச்சி.
உரை: பெரிய மலையில், இடையிடையே பருத்தி விதைக்கப்பட்ட தினைப் புனம் ஒன்று உள்ளது. .அங்கே, தினையை உண்ணவரும் குருவிகளை ஒருபெண் ஓட்டிக்கொண்டிருந்தாள். அவள் இனியமொழி பேசுபவள்; பெரிய, மென்மையான தோள்களை உடையவள். அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூவைப் போன்றவை. அவை, அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்பவை. ஆனால், அதே கண்கள் அம்புபோல் மாறி என்னைக் தாக்கின. மற்றும், எல்லாரும் அறியும்படி, அந்தக் கண்கள் எனக்குத் துன்பத்தைத் தந்தன.

விளக்கம்: பூ என்றது தாமரை அல்லது குவளை மலரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
தலைவியின் கண்கள் பூவைப் போலக் காண்பதற்கு இனிமையாக இருந்து, தாம் அஞ்சுவது போலச் சுழன்றாலும், அவை அம்புபோல் கொடியவையாகி என்னைத் துன்புறுத்தி, எல்லாரும் அறியுமாறு புண்போன்ற காமநோயை எனக்குத் தந்தன.” என்று தலைவன் கூறுவதாகத் தோன்றுகிறது.


தினை விதைக்கப்பட்ட நிலத்தில் பருத்தியை விதைத்து, தினை முதிர்ந்து அறுவடை செய்யப்பட்ட பிறகு, பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாணர் வழக்கம் என்று உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.