77. பாலை - தலைவி கூற்று
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும்
கூறுவர். இவர் மருதத்திணை சார்ந்த
பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர்
தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும்
இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது
இயற்பெயர் இளநாகன். இவர்
புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி
எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில்
4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
|
பாடலின்
பின்னணி:
தலைவனைப்
பிரிந்திருப்பதால் தலைவி உடல் மெலிந்து காணப்படுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்ட தோழி, “ உன் தோள்கள் ஏன் மெலிந்து
காணப்படுகின்றன? உனக்கு உடல்நலமில்லையா?” என்று கேட்கிறாள். தன் தோள்கள் மெலிந்திருப்பதின் காரணத்தை தலைவி தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே.
கொண்டுகூட்டு: அம்ம ! வாழி !தோழி ! வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை, நெடுநல் யானைக்கு இடு நிழலாகும் அரிய கானம் சென்றோர்க்கு எளிய ஆகிய (என்) தடமென் தோளே. யாவதும் தவறெனின் தவறோ இலவே.
அருஞ்சொற்பொருள்: யாவதும் = சிறிதும்; சுரம் = பாலை
நிலம் ; வெஞ்சுரம் = வெப்பமுடைய பாலைநிலம்;
உலத்தல் = சாதல்; வம்பலர்
= வழிப்போக்கர்கள்; உவல் = தழை; பதுக்கை = குவியல்;
கானம் = காடு; தடம்
= பெருமை.
உரை: அம்ம, தோழி ! நீ வாழ்க! வெப்பமான பலைநிலத்தில்,
இறந்த வழிப்போக்கர்களுடைய உடலை மறைப்பதற்காகத் தழைகள் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.
அந்த உயர்ந்த குவில்கள் பெரிய நல்ல யானைக்கு, நிழலைத் தருவதற்குப் பயன்படுகின்றன. அத்தகைய, கடத்தற்கரிய பாலைநிலத்தில், என்னைப் பிரிந்து சென்ற தலைவருக்காக என்னுடைய பெரிய மென்மையான தோள்கள் மெலிந்தன.
தோள்கள் மீது சிறிதும் தவறில்லை.
விளக்கம்:
பாலைநிலத்திற் செல்லும் வழிப்போக்கர்களை, பாலைநிலத்திலுள்ள வழிப்பறிக்
கள்வர்கள் கொன்று, அவர்களின் உடலைத் தழைக்குவில்களாலும் கற்குவியல்களாலும்
மூடுவது வழக்கம். ”நான்
தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருந்தாலும், அவர் தழுவிய என்
தோள்கள் அவரோடு தொடர்பு உடையவையாதலால், அவர் செல்லும் வழியில்
உள்ள கொடுமைகளை நினைத்துத் தாமாகவே மெலிந்தன. அது தவறன்று”
என்று தலைவி தன் தோள்கள் மெலிந்ததற்குக் காரணம் கூறுகிறாள். இவ்வாறு தலைவி வருத்தத்தில் இருக்கும் பொழுது, அவள் உடலுறுப்புகளுக்கு
உணர்வுடையன போலக் கூறுவது இலக்கிய மரபு என்பதை தொல்காப்பியம் சுட்டிக் காட்டுகிறது.
வண்ணம் பசந்து புலம்புறு காலை
உணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி
புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. (தொல். பொருளியல்
– 8)
பொருள்: தலைவனின் பிரிவால் பசலையுற்றுத் தனிமையில் வருந்தும் போது, தன் கண், நெற்றி, தோள் முதலான உறுப்புக்களை,
அவை தாமாகவே தலைவனின் பிரிவை உணர்ந்து வருந்துவன போலப் பொருந்திய வகையில்
தலைவி சேர்த்துச் சொல்வாள்.
திருக்குறளில்
கண் விதுப்பழிதல்
(அதிகாரம் – 118) என்ற அதிகாரத்திலும் நெஞ்சொடு
கிளத்தல் (அதிகாரம் -125) என்ற அதிகாரத்திலும்
கண்கள் தாமாகவே செயல்படுவதாகத் தலைவி கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
No comments:
Post a Comment