72.
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடியவர்:
மள்ளனார். இவர் குறுந்தொகையில் இந்த ஒரு செய்யுளையும் நற்றிணையில் ஒருசெய்யுளையும் (204) இயற்றியவர்.
பாடலின்
பின்னணி:
தலைவன்
தலைவியைக் கண்டு,
அவள் கண்களின் அழகை வியந்து, அவள் பேசும் இனிய
மொழிகளைக் கேட்டு இன்புற்று, அவளுடைய பெரிய, மென்மையான தோளைத் தழுவி மகிழ்ந்தான். அவளைப் பற்றிய நினைவாகவே
இருக்கிறான். அவனுடைய உடல்நிலையிலும் மனநிலையிலும் பெரிய மாற்றத்தைக்
கண்ட தலைவனின் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வாறு வருத்தமாக உள்ளாய்?” என்று கேட்கிறான்.
அதற்குத் தலைவன், “அந்தப் பெண்ணின் அழகும் அவள்
பேசிய இனிய் சொற்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அவளுடைய கண்கள்
பூக்களைப் போல் அழகாக இருந்தாலும் அவை என்னைத் தாக்கி, எனக்குத்
தாங்க முடியாத காமநோயைத் தந்தன .” என்று கூறுகிறான்.
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
அருஞ்சொற்பொருள்: அலமருதல் = சுழலுதல்; ஏ = அம்பு; நோய் = துன்பம்; தேமொழி = தேன் போன்ற இனிய சொற்கள்; பருவி = பருத்தி; பரீஇ = பருத்தி (பருவி என்பது மருவி பரீஇ என்று வந்தது.); வித்திய = விதைத்த; ஏனல் = தினைப்புனம் ; குரீஇ = குருவி; ஓப்புதல் = ஓட்டுதல்; மழை = குளிர்ச்சி.
உரை: பெரிய மலையில், இடையிடையே பருத்தி
விதைக்கப்பட்ட தினைப் புனம் ஒன்று உள்ளது. .அங்கே, தினையை உண்ணவரும் குருவிகளை ஒருபெண் ஓட்டிக்கொண்டிருந்தாள். அவள் இனியமொழி பேசுபவள்; பெரிய, மென்மையான தோள்களை உடையவள். அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூவைப் போன்றவை. அவை, அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்பவை. ஆனால், அதே
கண்கள் அம்புபோல் மாறி என்னைக் தாக்கின. மற்றும், எல்லாரும்
அறியும்படி, அந்தக் கண்கள் எனக்குத் துன்பத்தைத் தந்தன.
விளக்கம்: பூ
என்றது தாமரை அல்லது குவளை மலரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
”தலைவியின் கண்கள் பூவைப் போலக் காண்பதற்கு இனிமையாக இருந்து, தாம் அஞ்சுவது போலச் சுழன்றாலும், அவை அம்புபோல் கொடியவையாகி
என்னைத் துன்புறுத்தி, எல்லாரும் அறியுமாறு புண்போன்ற காமநோயை
எனக்குத் தந்தன.” என்று தலைவன் கூறுவதாகத் தோன்றுகிறது.
தினை விதைக்கப்பட்ட
நிலத்தில் பருத்தியை விதைத்து, தினை முதிர்ந்து அறுவடை செய்யப்பட்ட
பிறகு, பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாணர் வழக்கம் என்று
உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.
No comments:
Post a Comment