69.
குறிஞ்சி - தோழி கூற்று
பாடியவர்: கடுந்தோட்
கரவீரனார். கரவீரம் என்பது சோழ நாட்டில் திருவாரூருக்கு அருகில் உள்ள ஓரூர். இவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம்
என்று கருதப்படுகிறது. இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல்
மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைவன் இரவு
நேரத்தில் தலைவியைக் காணவருவதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. இரவு நேரத்தில் வந்தால், அவனுக்கு எதாவது தீங்கு வருமோ
என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஒருநாள் இரவு தலைவியைக் காணத்
தலைவன் வருகிறான். அப்பொழுது, “’ இனி,
நீ இரவில் வரவேண்டாம். இவ்வாறு களவொழுக்கத்தில்
உங்கள் காதலைத் தொடர்வதைவிட, நீ தலைவியைத் திருமணம் செய்துகொண்டு
வாழ்வதே சிறந்தது.” என்று தலைவனிடம் தோழி மறைமுகமாகக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
அருஞ்சொற்பொருள்: கருங்கண் = கருமை நிறமான கண்கள்; தா = தாவுதல்; கலை = கரிய ஆண்குரங்கு; பெரும்பிறிது = இறப்பு; கைம்மை = கணவனை இழந்த நிலைமை; உய்யா = தாங்கிக்கொள்ள முடியாத; காமர் = விருப்பம்; மந்தி = பெண்குரங்கு; கல்லா = பயிற்சி இல்லாத; வன் = வலிய; பறழ் = குட்டி ; கிளை = உறவு; அடுக்கம் = பக்க மலை; செகுத்தல் = கொல்லுதல்; சாரல் = மலைச்சாரல்; நடுநாள் = நள்ளிரவு; வாரல் = வருவதைத் தவிர்.
உரை: கருமை
நிறமுள்ள கண்களையும், தாவும் இயல்பையும் உடைய ஆண்குரங்கு இறந்ததால், கைம்மைத்
துன்பத்தைத் தாங்கமுடியாத, அந்த ஆண்குரங்கின் துணையாகிய பெண்குரங்கு,
தன்னுடைய தொழிலில் (மரமேறுவது போன்ற தொழில்களில்)
பயிற்சி இல்லாத தன்னுடைய வலிய குட்டியை, சுற்றம்
ஆகிய குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த மலைப்பக்கத்திலிருந்து
தாவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே!
இனி, நீ நள்ளிரவில் வரவேண்டாம். நீ நள்ளிரவில் வந்தால் உனக்குத் தீங்குண்டாகும் என்றெண்ணி நாங்கள் வருந்துவோம்.
நீ நீடூழி வாழ்வாயாக!
விளக்கம்: ”இரவில்
வருவதால் உனக்குத் தீங்கு வரலாம். அவ்வாறு உனக்குத் தீங்கு நேர்ந்தால்
தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே, நீ இரவில்
வந்து களவொழுக்கத்தைத் தொடர்வதை நிறுத்திவிட்டு, முறைப்படி அவளைத்
திருமணம் செய்துகொள்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.
ஆண்குரங்கு
இறந்ததால்,
கைம்மையுடன் வாழ விரும்பாத பெண்குரங்கு, தன் உயிரைப்
போக்கிகொண்டதைப்போல், நீ நள்ளிரவில் வரும்பொழுது புலி,
யானை, பாம்பு முதலிய விலங்குகளின் கொடுமையால் நீ
இறக்க நேர்ந்தால், தலைவியும் உன்னைப்பிரிந்து வாழ விரும்பாமல்
இறந்துவிடுவாள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.
உள்ளுறை உவமத்திற்கு
அப்பால் இன்னொரு செய்தியும் இப்பாடலில் உள்ளது. ”தலைவ! உன் நாட்டில் அஃறிணைப் பொருளாகிய
பெண்குரங்குகூடத் தன் துணையாகிய ஆண்குரங்கு இறந்தவுடன் தான் உயிர்
வாழாமல் இறக்குமெனின், எம் தலைவி மட்டும் உன்னைப் பிரிந்து எப்படி
வாழ்வாள்? அவளுடைய உணர்ச்சியை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?”
என்று தோழி மறைமுகமாகக் கேட்பதாகவும் தோன்றுகிறது. இவ்வாறு, ஒரு பாடலில் உள்ளுறை உவமத்திற்கு அப்பாலும்
ஒருபொருள் இருக்குமானால் அஃது இலக்கணத்தில் “இறைச்சி”
என்று அழைக்கப்படுகிறது. பெரும்பான்மைத் தலைவனின்
கொடுமையைக் கூறும் இடங்களிலும், சிறுபான்மை அன்பை உரைக்கும் இடங்களிலும்
புலவர்கள் அகத்திணைப் பாடல்களில் இறைச்சியை பயன்படுத்துவது வழக்கம்.
|
||
|
No comments:
Post a Comment