70. குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடியவர்: ஓரம்போகியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 10-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன்
தலைவியோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவளைப் பிரிந்து தன்
இல்லத்திற்குச் செல்கிறான். செல்லும் வழியில், தலைவியின் அழகு, இளமை, மென்மை ஆகியவற்றை
எண்ணிப்பார்த்து அவன் மகிழ்கிறான். தலைவியை எப்படிப் புகழ்வது
என்று தெரியாமல் மீண்டும் அவளால் அவன் பெற்ற இன்பத்தை நினைத்துத் தனக்குத்தானே அவன்
பேசிக்கொள்கிறான்,
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
அருஞ்சொற்பொருள்: ஒடுங்கல் = செறிதல்; ஈர் = எண்ணெய் தடவிய;
ஓதி = கூந்தல்; ஒள் = ஒளி; நுதல் = நெற்றி; ஒண்ணுதல்
= ஒள்+நுதல் = ஒளிபொருந்திய
நெற்றி; குறுமகள் = இளம்பெண் (இங்கு, தலைவியைக் குறிக்கிறது); நறு = மணம் பொருந்திய; தண்
= குளிர்ச்சி; நீர் = தன்மை;
ஆர் = அருமை; அணங்கு
= வருத்தும் பெண் தெய்வம்; இனையள் = இத்தகையவள்; புனைதல் = பாராட்டுதல்;
கிளவி = சொற்கள் (பேச்சு);
அணை = தலையணை, பஞ்சு மெத்தை;
மெல்லியள் = மென்மையானவள்; முயங்குதல் = தழுவுதல்; கால்
= பொழுது.
உரை: நெஞ்சே, அடர்த்தியான, எண்ணெய் தடவி வாரப்பட்ட கூந்தலையும்,
ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, மணத்தையும்
குளிர்ச்சியும் உடையவள். ஆயினும், பிரிந்தகாலத்துப் அவள் பொறுத்தற்கரிய
வருத்தத்தைத் தருபவள். அவளை, இத்தகையவள்
என்று எப்படிப் புகழ்வது என்பதை நான் அறியேன். அவள் அதிகமாகப்
பேசாதவள். ஆனால் அவள் கூறும் சொற்கள் மென்மையானவை. நான் அவளைத் தழுவும் பொழுது அவள் ஒருபஞ்சணையைபோல் மென்மையானவள்.
விளக்கம்: சங்க
காலத்தில்,
பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்துவகையாக அலங்கரித்துக் கொண்டதாகவும்,
அந்த ஐந்து வகைகள் கொண்டை, சுருள் (அல்லது சுருளை), குழல், பனிச்சை,
வார்மயிர் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பாடலில், ”ஒடுங்கு ஈர் ஓதி”
யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை என்பதைக் குறிக்கிறது.
”ஒடுங்கு ஈர் ஓதி,
ஒண்ணுதற் குறுமகள்” என்றதால் கண்ணுக்கு இன்பமும்,
”சில மெல்லியவே கிளவி” என்றதால் செவிக்கு இன்பமும்,
”அணை மெல்லியள்” என்றதால் உடலுக்கு இன்பமும்,
“ நறுந்தண்ணீரள்” என்றதால் மூக்குக்கு இன்பமும், தலைவியிடம் தான்
பெறுவதைத் தலைவன் கூறுவதாகவும், ”யான் முயங்குங்கால்”
என்றதால் சுவை இன்பமும் பெறுவதைக் குறிப்பால் உணர்த்தியதாகவும் உ.
வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இங்கு,
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. (குறள் – 1101)
என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சிறப்பான விளக்கம்
ReplyDelete