Monday, August 3, 2015

65. முல்லை - தலைவி கூற்று

65. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: கோவூர்கிழார். இவர் கோவூரைச் சார்ந்தவர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களையும் (31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386, 400), நற்றிணையில் ஒருபாடலையும் (393), குறுந்தொகையில் ஒருபாடலையும் (65)  இயற்றியவர்.          சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்பதுங் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்திஎன்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறநானூறு- 45).  பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான்.  அவ்வமயம், “அறவை யாயின்,’நினதுஎனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.என்று அறிவுரை கூறினார்.  மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான்.  அப்போது, புலவர் கோவூர் கிழார், ‘இளந்தத்தன் ஒற்றர் அல்லர்; அவர் ஒரு புலவர்என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறநானூறு - 47).  சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறநானூறு - 46).  புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், கார்காலம் வந்த பிறகும் தலைவன் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. உன் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால், நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயே!” என்று கார்காலம் தன்னைக் கேட்பதாகத் தலைவி தோழியிடம் கூறித் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள்.

வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 
-.
அருஞ்சொற்பொருள்: வன் = வலிய; பரல் = பருக்கைக் கல்; தெள் = தெளிந்த; அறல் = நீர்; பருகிய = குடித்த; இரலை = ஆண்மான்; மறுவரல் = சுழற்சி, மயக்கம்; உகளுதல் = தாவுதல், பாய்தல்; தளி = மழைத்துளி; தண் = குளிர்ந்த; வரல் = வருவதை; நசைஇ = விரும்பி.

உரை: தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான்,  இன்பத்தை நுகர்வதற்காகத் தன்னுடைய துணையாகிய பெண்மானோடு, மகிழ்ச்சியுடன் சுழன்று துள்ளி விளையாடுகிறது.  இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டும் வருவதை விரும்பி, மிகவருந்திக் காத்திருக்கும் பொருட்டு, உயிரை வைத்துக் கொண்டிருகிறாயோ என்று கேட்பதற்காக, மழைத்துளியைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம் வந்திருக்கிறது.


விளக்கம்: கார் காலத்தில் மான் தன் துணையோடு மகிழ்ந்து விளையாடி இன்பம் நுகர்வதாக முல்லைப்பாட்டு, அகநாநூறு ஆகிய இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுவதாக உவே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார். ஆகவே, இங்கு, மான்கள் இன்பம் நுகர்வதாகக் குறிப்பிட்டிருப்பது கார் காலம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. கார்காலம் வந்த பிறகும் தலைவன் வராமல் இருப்பதால் தான் உயிரோடு இருப்பது தவறு என்று தலைவி எண்னுவதாகத் தோன்றுகிறது. மற்றும், மான்கள் தங்கள் துணையோடு மகிழ்ச்சியாக இருக்கும் இந்தக் கார்காலத்தில் நான் மட்டும் என் தலைவனைவிட்டுப் பிரிந்திருக்கிறேனே என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்.  

No comments:

Post a Comment