60.
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடியவர்: பரணர். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
பாடலின்
பின்னணி:
தலைவனுடைய
பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம்
அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே
போதும். அதுவே எனக்கு
மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
அருஞ்சொற்பொருள்: தாள் = அடிப்பக்கம்; கூதளை = கூதளஞ்செடி;
வரை = மலை; பெருந்தேன்
– தேனடையைக் குறிக்கிறது; இருக்கை = அமர்ந்திருக்கும்; கோலுதல் = குவித்தல்;
சுட்டுபு = சுட்டி; நல்குதல்
= அருள் கூர்தல் ; நயத்தல் = விரும்புதல்; கால் = காலம்.
உரை: குறுகிய
அடியையுடைய கூதளஞ்செடி அசைந்து ஆடும் உயர்ந்த மலையிலுள்ள, பெரிய தேனடையைக் கண்ட முடவன்,
காலில்லாததால் உட்கார்ந்துகொண்டே, தன் உள்ளங்கையை ஒரு சிறிய குடை (பாத்திரம்) போல் குவித்து, அம்மலையின் கீழே இருந்தபடியே,
அந்தத் தேனடையைப் பலமுறை சுட்டிக்காட்டித் தன் கையை நக்கி இன்புற்றதைப் போல, தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பலமுறை பார்ப்பதே
என் உள்ளத்திற்கு இனிமையானதாக இருக்கிறது.
விளக்கம்: ”நெடுவரை” என்றது காலுடையவர்களாலும் ஏறுதற்கு அரிய உயரமான
மலை என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. குடை என்றது
பனையோலையால் செய்யப்பட்டு நீர் எடுப்பதற்கும் குடிப்பதற்கும் உணவுப்பொருள்களை
வைப்பதற்கும் உரிய ஒருகருவி. ”உட்கைச் சிறுகுடை” என்றது முடவன் தன் உள்ளங்கையைக் குவித்து
வைத்திருப்பது ஒருசிறிய குடைபோல் உள்ளது என்பதைக் குறிக்கிறது. ”முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாற்போல” என்னும்
பழமொழி இங்கே நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment