74.
குறிஞ்சி - தோழி கூற்று
பாடியவர்:
விட்டகுதிரையார். ”விட்டகுதிரை” என்ற தொடரை இப்புலவர் இப்பாடலில் பயன்படுத்தியிருப்பதால்
இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக
இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின்
பின்னணி:
தலைவனும்
தலைவியும் தற்செயலாகச் சந்தித்தார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர்
மிகவும் விரும்புகின்றனர். ஆனால், அவனைத்
தொடர்ந்து சந்திப்பதற்கும் அவனோடு பழகுவதற்கும் தலைவி தயங்குகிறாள். தலைவியின் தயக்கத்திற்குக் காரணம் அவளுடைய பெற்றோர்களின் கட்டுப்பாடாகவோ அல்லது
அவர்களின் களவொழுக்கம் பிறருக்குத் தெரியவந்தால் அதனால் அலர் (ஊர்மக்களின் பழிச்சொல்) எழும் என்ற அச்சமாகவோ இருக்கலாம்.
“நீ அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ அவனை
விரும்புகிறாய். அவனும் உன் ஞாபமாகவே இருந்து உடல் மெலிந்து காணப்படுகிறான்.
இந்த நிலையில், நீ அவனைச் சந்தித்துப் பழகுவதுதான்
சரியானதாக எனக்குத் தோன்றுகிறது. நீ அவனைச் சந்திக்கத் தயங்கினால்,
அவனுக்கு உன் விருப்பம் எப்படித் தெரியும்? நீ
அவனை விரும்புவது அவனுக்குத் தெரியாவிட்டால், அவன் உனக்காக வெகுநாட்கள்
காத்திருக்காமல், வேறொரு பெண்னைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான்.
ஆகவே, அவன் குறிப்பிட்ட இடத்திற்கு நாம் செல்வோம்.
உன் அன்பையும் விருப்பத்தையும் அவனிடம் நீ பகிர்ந்துகொள்.” என்று தோழி தலைவிக்கு அறிவுறை
கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.
அருஞ்சொற்பொருள்: விசைத்தல் = வேகமுறல் (வேகமாக ஓடுதல்) ; விசும்பு = ஆகாயம்; தோய்தல் = பொருந்துதல்; கழை = மூங்கில்; படர்தல் = நினைத்தல்; வேனில் = வெயில் காலம் ; ஆனேறு = எருது (காளை) ; சாய்தல் = மெலிதல்; மாணலம் = மாண் + நலம் = மாட்சிமைப்பட்ட நலம்.
உரை: உன்
தலைவன்,குறிஞ்சி நிலத் தலைவன். அவன் நாட்டில், கட்டப்பட்டிருந்த குதிரை அவிழ்த்து
விடப்பட்டதும் விரைவாகத் துள்ளியெழும் எழுச்சியைப் போல், யானை
வளைத்துப் பின் விட்டதால் வானளாவிய பசிய மூங்கில் பொருந்திய குன்றுகள் உள்ளன.
நீ அவனை நினைத்து உடல் மெலிவதை
அவன் அறியாதவன். அவனும் உன்னோடு கூடி மகிழும் இன்பத்தை விரும்பி,
வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாத காளை போல் உடல் மெலிந்தான் என்று
கூறுகின்றனர்,
விளக்கம்:
யானை மூங்கிலை உண்ணுவதற்காக வளைத்தலும் எதற்காகவாவது அஞ்சி மூங்கிலை விடுவதும் குறிஞ்சி
நிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது, இந்தச் செய்தியை
குறுந்தொகையின் 54 – ஆம் பாடலில் காணலாம்.
”யாம்” என்றும் ”நம்” என்றும் தோழி குறிப்பிடுவது தலைவிக்கும் தோழிக்கும் உள்ள நெருங்கிய நட்பையும்
மனவொற்றுமையையும் குறிக்கிறது. வெயிலின் வெம்மையால் துன்பமடைந்த ஆனேறு, காமநோயால்
துன்புற்ற தலைவனுக்கு உவமை. வளைக்கும் பொழுது
வளைந்தாலும் இயல்பாகவே விண்ணை நோக்கி வளரும்
உயர்ந்த தன்மையை உடைய மூங்கிலைப்போல, தலைவன் தலைவியிடம் அன்பாகவும்
பணிவாகவும் பழகினாலும் அவன் இயல்பாகத் தலைமைப் பண்பு உடையவன் என்பது குறிப்பு.
தலைவி தலைவனைச் சந்தித்துப் பழகாவிட்டால், தலைவன்
விசைத்தெழுந்த மூங்கிலைப் போல் தலைவியோடு தனக்குள்ள தொடர்பை நீக்கிவிட்டு வேறொருபெண்ணைக்
காதலிக்கத் தொடங்கிவிடுவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.
மிகவும் எளிமையான உரை. நன்றி
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteஉங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.