80.
மருதம் - பரத்தை கூற்று
பாடியவர்:
ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளை 15- ஆம் பாடலில் காணலாம்.
பாடலின்
பின்னணி:
தலைவன்
தலைவியைப் பிரிந்து,
பரத்தையோடு வாழ்கிறான். தலைவனின் செயலால் கோபமுற்ற
தலைவி பரத்தையை இகழ்ந்து பேசுகிறாள். தலைவி தன்னை இகழ்ந்து பேசியது பரத்தைக்குத் தெரியவந்தது. தன்னைப் பற்றிப் புறங்கூறினாள் என்று
கேட்ட பரத்தை, “நானும் தலைவனும் நீர்த்துறையில் குளித்து விளையாடி
மகிழப் போகிறோம். தலைவிக்கு
வலிமையும் திறமையும் இருந்தால் தன் கணவனை என்னிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும்”
என்று தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறுகிறாள்.
கூந்தல் ஆம்பல் முழுநெறி
அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.
கொண்டுகூட்டு: கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி, பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாம் அஃது அயர்கம் சேறும். தான், அஃது அஞ்சுவது உடையளாயின், வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.
அருஞ்சொற்பொருள்: ஆம்பல் = ஆம்பல் மலர்; முழுநெறி = இதழொடிக்கப்படாத முழுப்பூ; அடைச்சுதல் = செருகுதல்; பெரும்புனல் = வெள்ளம்; இரு = பெரிய; அயர்தல் = விளையாடுதல்; சேறல்
= செல்லுகை; வெம்போர் = வெம்மையான
போர்; நுகம் = வலிமை; பட = அழிய; கடத்தல் = வெல்லுதல்; பல்வேல் = பலவேல்களையுடைய;
எழினி = ஒரு குறுநிலமன்னன்; முனை = போர்முனை; ஆன் =
பசு; நிரை = கூட்டம்;
கிளை = சுற்றம்.
உரை: நாம்
நம்முடைய கூந்தலில் இதழொடிக்கப்படாத முழு ஆம்பற்பூக்களைச் செருகி, நீர்மிகுந்த பெரிய துறையை விரும்பி, அங்கே தலைவனோடு விளையாடச்
செல்வோம். நாம் அவ்வாறு
தலைவனோடு விளையாடுவதைக் கண்டு தலைவி அஞ்சுவாளானால், கடுமையான
போரில், பகைவரின் வலிமையை அழித்து வெற்றிபெற்ற, பல வேற்படைகளையுடைய எழினியின் போர்முனையில் உள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப்
போல, அவள் தன் கொழுநனின் மார்பைத் தன் சுற்றத்தரோடு சேர்ந்து
பாதுகாப்பாளாக.
விளக்கம்: சங்க காலத்தில் எழினி என்ற பெயரில்
பல குறுநில மன்னர்கள் இருந்தார்கள்.
ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழினி
என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி என்று உ. வே. சா அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
ஒரு சமயம் எழினியின் பசுக்களை (ஆனிரையை)
அவனுடைய பகைவர்கள் கவர்ந்து சென்றனர். எழினி தன்னுடைய
வலிய படையுடன் சென்று தன்னுடைய ஆனிரையை மீட்டுவந்தான். இந்த நிகழ்ச்சி
அகநானூற்றின் 105 – ஆம் பாடலிலும், 372 – ஆம் பாடலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”எழினி தன்
வலிமையால் தன் பசுக்களை மீட்டியதைப் போலத் தலைவி வலிமையும் திறமையும் உடையவளாக இருந்தால்,
நான் கவர்ந்த அவளுடைய கணவனைத் தலைவி என்னிடமிருந்து பாதுகாக்கட்டும்.”
என்று பரத்தை தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறித் தலைவியை எள்ளி நகையாடுகிறாள்.
No comments:
Post a Comment