247.
தோழி கூற்று
பாடியவர்: சேந்தம் பூதனார். இவர் இயற்பெயர் பூதன். இவர் சேந்தன் என்பவருடைய மகனாகையால் சேந்தம் பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக்
கருதப்படுகிறது. இவர்
குறுந்தொகையில் ஒருபாடலும் (247) நற்றிணையில் ஒருபாடலும்
(261) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: கடிநகர்த்
தெளிவு விலங்கினமை யறிய,
தோழி கூறியது. (கடிநகர் – காவல்
உள்ள வீடு; தெளிவு விலங்கினமை - தலைவன் தான் கூறித் தெளிவித்த
சூளுரையிலிருந்து மாறுபட்டமை)
கூற்று – 2: வரைவுடன் பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉமாம்.
கூற்று
விளக்கம்
- 1:
தலைவி
தன் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தாள். தலைவன் தலைவியைத் திருமணம்
செய்து கொள்வதாக உரைத்த சூளுரையிலிருந்து மாறுபட்டானா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்
தோழி, “ தலைவன் உன்னை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான்’”
என்று தலைவியிடம் கூறுகிறாள்.
கூற்று
விளக்கம்
2: தலைவன்
தலைவியை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைத் தலைவியிடம் கூறுகிறாள். இக் கருத்து, முதற் கூற்றில் உள்ள கருத்தைவிட ப் பொருத்தமானதாகத்
தோன்றுகிறது.
எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம்
திறவோர் செய்வினை அறவ தாகும்
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா ரிவ்வென
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீயுக யானை
ஆர்துயில் இயம்பு நாடன்
மார்புரித் தாகிய மறுவில் நட்பே.
கொண்டு
கூட்டு:
தோழி! வேங்கை வீயா மென்சினை வீ உக, யானை ஆர்துயில்
இயம்பும் நாடன் மார்பு உரித்தாகிய மறுஇல் நட்பு எழில் மிக
உடையது. ஈங்கு அணிப் படூஉம்; திறவோர்
செய்வினை அறவது ஆகும்; கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார்
இவ்வென ஆங்கு அறிந்திசின்.
அருஞ்சொற்பொருள்: எழில் = அழகு; அணிப்படூஉம் = விரைவில் கைகூடும்;
திறவோர் = திறமை உள்ளவர்; புணை = தெப்பம் (ஆதரவு);
மார் – அசைச் சொல்; அறிந்திசின்
= அறிந்தேன்; வீயா = கெடாத;
சினை = கிளை; ஆர்
= அரிய; உகுதல் = உதிர்தல்;
மறு = குற்றம்.
உரை: தோழி! வேங்கை மரத்தின், கெடாத மெல்லிய கிளையில் இருந்து
மலர்கள் உதிரும் இடத்தில் யானை ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சு விடுவதால் ஒலி உண்டாக்கும்
நாட்டை உடைய தலைவனது, மார்பை உரியதாகப் பெற்ற உன்னுடைய குற்றமற்ற
நட்பு மிக அழகுடையது. இவ்விடத்தில், அந்த
நட்பின் பயன் விரைவில் கைகூடும் ( அதாவது, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்). திறமை உள்ளவர் செய்யும் செயல்கள் அறத்தொடு பொருந்தியவையாகும். சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை ஆதரவாக
இருக்கும் என்பதை அறிந்தேன்.
சிறப்புக்
குறிப்பு:
வேங்கை மலர் தன் மேல் உதிரும் பொழுது, ஒலியோடு யானை தூங்கும் நாடன் என்றது, தலைவனின்
சுற்றத்தார் பாராட்ட, தலைவியை மணந்து கொண்டு வெளிப்படையாகத்
தலைவியோடு அவன் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment