183.
தலைவி கூற்று
பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ
வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது கார்காலம்
வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று தோழி கவலைப்படுகிறாள்.
”அவர் சென்ற இடத்தில், கார்காலத்திற்கான அடையாளங்களை
அவர் காண்பார். அவற்றைக் கண்டால் அவர் என்னை நினைத்து விரைவில்
திரும்பி வருவார்” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
சென்ற நாட்ட கொன்றைஅம் பசுவீ
நம்போல் பசக்கும் காலைத் தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்த்த நெறிகோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புலத் தானே.
கொண்டு
கூட்டு:
புல்லென்
காயாப் பூக்கெழு பெருஞ்சினை, மென்மயில் எருத்தில்
தோன்றும் கான வைப்பிற் புன்புலத்தான் சென்ற நாட்ட, கொன்றையம் பசுவீ,
நம்போல் பசக்குங் காலை, தம்போல் சிறுதலைப் பிணையின் தீர்த்த நெறிகோடு இரலை மானையுங் காண்பர்கொல் நமரே.
நம்போல் பசக்குங் காலை, தம்போல் சிறுதலைப் பிணையின் தீர்த்த நெறிகோடு இரலை மானையுங் காண்பர்கொல் நமரே.
அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; வீ = பூ; பசத்தல் = பொன்னிறமாதல்; பிணை
= பெண்மான்; தீர்ந்த = நீங்கிய;
நெறி = வளைவு; கோடு
= கொம்பு; இரலை = ஆண்மான்;
நமர் = நம்மவர் ( தலைவர்);
காயா = ஒருவகை மரம் (காசா
மரம்); கெழு = பொருந்திய; சினை = கிளை; எருத்து =
கழுத்து; கானவைப்பு = முல்லை
நிலம்; புன்புலம் = புன்செய் நிலம்.
உரை: மழைபெய்வதற்கு முன்பு பொலிவிழந்திருந்த
காயாமரத்தின் கிளைகள்,
மழைபெய்த பிறகு மலர்கள் நிறைந்து மயிலின் மெல்லிய கழுத்தைப்போல் தோன்றுகின்ற,
காடுகளோடு கூடிய புன்செய் நிலத்தை உடைய நாட்டிற்கு நம் தலைவர் நம்மைப் பிரிந்து
சென்றிருக்கிறார். அவர் சென்ற நாட்டில், கொன்றையின் அழகிய மலர்கள், நம்மைப் போலப் பசலை
நிறத்தையடையும் கார் காலத்தில், அவர் என்னைப் பிரிந்திருப்பதைப்போல்,
சிறிய தலையையுடைய பெண்மானிடத்திலிருந்து பிரிந்திருக்கும் வளைந்த கொம்புகளையுடைய
ஆண்மானையும், நம் தலைவர் காண்பாரோ?
சிறப்புக் குறிப்பு: கார்காலத்தில்
மலர்ந்திருக்கும் பொன்னிறமான கொன்றை மலர்களைக் கண்டால், தலைவருக்குத் தான் பிரிவினால் பசலை நோயுற்றிருப்பது நினைவிற்கு வரலாம் என்று
தலைவி எண்னுகிறாள். மற்றும், கார்காலத்தில்
ஆண்மானும் பெண்மானும் பிரியாமல் இருப்பதைக் கண்டால் தன் தலைவியோடு தானும் இருக்கவேண்டும்
என்ற எண்ணம் தலைவருக்குத் தோன்றும். அதனால், அவர் விரைவில் தன்னைக் காண வருவார் என்று தலைவி நம்புகிறாள்.
No comments:
Post a Comment