Sunday, August 20, 2017

400. தலைவன் கூற்று

400. தலைவன் கூற்று
பாடியவர்: பேயனார்.
திணை: முல்லை.
கூற்று : வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.
கூற்று விளக்கம்தான் மேற்கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து, தேரில் வந்து தலைவியைக் கண்ட பின்னர், தலைவன், தேர்ப்பாகனை நோக்கி, ”இன்று நாம் விரைவாகத் தேரைச் செலுத்தாவிட்டால், என்னால் தலைவியைக் கண்டு, அவள் காமநோயைத் தீர்க்க முடியாது என்று கருதி, எனக்கு நீ நன்மை செய்ய விரும்பித் தேரை வெகு விரைவாகச் செலுத்தி, இங்கு கொண்டுவந்தாய். நீ  தேரை மட்டும் இங்கு கொண்டுவந்து தரவில்லை. என் தலைவியின் உயிரையே எனக்குத் தந்தாய்!” என்று பாராட்டுகிறான்.

சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே. 

கொண்டு கூட்டு: சேயாறு செல்வாமாயின், பெருந்தோட்கு காமம் இடர் இன்று களைகலம் என்று நன்று புரிந்து எண்ணிய மனத்தையாகி, முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப் புதுவழிப் படுத்த, மதியுடை வலவோய்! நோயுழந்து உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

அருஞ்சொற்பொருள்: சேய் = நெடுந்தூரம்; ஆறு = வழி; இடர் = துன்பம்; பெருந்தோள் = பெரிய தோளையுடைய தலைவி; முரம்பு = பருக்கைக்கற்கள் உள்ள மேட்டு நிலம்; கரம்பை = பாழ்நிலம்; வலவன் = தேர்ப்பாகன்; உழத்தல் = வருந்துதல்.; நல்குதல் = ஈதல் (தருதல்).

உரை: நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்வோமானால்பெரிய தோளையுடைய தலைவியின் காமநோயாகிய துன்பத்தை இன்று என்னால் களைய முடியாது என்று நினைத்துநன்மையை விரும்பிய மனமுடையவனாகிபருக்கைக் கற்கள் உள்ள மேட்டு நிலம் பிளக்கும்படி சென்று, பாழ் நிலத்திலே புதிய வழியைக் கண்டு தேரைச் செலுத்திய  அறிவிற் சிறந்த தேர்ப்பாகனே! காமநோயினால் வருந்தி வாழ்கின்ற தலைவியை, இறந்துபடாமல் உயிருடன் தருதற்குக் காரணமானதால், இன்று நீ தேரை மட்டுமா இங்கு கொண்டுவந்து தந்தாய்? இல்லை; என் தலைவியையே எனக்கு உயிருடன் தந்தாய்!

சிறப்புக் குறிப்பு: கரம்பைப் புது வழிப்படுத்தஎன்றது, இதற்குமுன் தேர் செல்லாத நிலத்தில் புதுவழியில் தேர்ப்பாகன் தேரைச் செலுத்தினான் என்பதைக் குறிக்கிறது. அவ்வாறு, புதுவழியில் தேரைச் செலுத்தியதால், தேர்ப்பாகனை, “ மதியுடை வலவோன்என்று தலைவன் பாராட்டுகிறான்.

No comments:

Post a Comment