390. கண்டோர் கூற்று
பாடியவர்: உறையூர் முதுகொற்றனார்.
திணை: பாலை.
கூற்று : புணர்ந்துடன்
போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையுங் காட்டிச் செலவு
விலக்கியது.
கூற்று
விளக்கம்: பாலைநிலவழியே
சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது
போயிற்று; ஆறலைக் கள்வரால் இன்னல்கள் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.
எல்லும்
எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
கொண்டு
கூட்டு:
சிறுபிடி
துணையே! எல்லும் எல்லின்று. சாத்து வந்து இறுத்தென, வேற்றுமுனை வெம்மையின் வளையணி நெடுவேல் ஏந்தி, மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரல் பாடும்
கேளாய்! செல்லாதீமோ!
அருஞ்சொற்பொருள்: எல் = கதிரவன்; எல்லின்று = ஒளிமங்கி
மறைந்தது; பாடு = ஒலி; பிடி = பெண்யானை;
வேற்று முனை = பகைவரின் போர் முனை; சாத்து = வணிகர்களின் கூட்டம்; இறுத்தல் = தங்குதல்; மிளை
= காடு; தண்ணுமை = ஒருவகைப்
பறை.
உரை: சிறிய
பெண்யானைக்குத் துணையாகிய களிறு போன்றவனே! கதிரவனும் ஒளி
மங்கி மறைந்தான். வணிகர்கூட்டம் வந்து தங்கியதால், பகைவரது போர்முனை போன்ற கொடுமையுடன், வளையை அணிந்த கையில் நெடிய வேலை ஏந்தி, காவற்காட்டிடத்தே வருகின்ற ஆறலைக் கள்வர்களின் தண்ணுமை என்னும் பறையின் முழக்கத்தின்
ஒலியைக் கேள்! ஆதலின், நீவிரிருவரும்
அவ்வழிச் செல்லாதீர்கள்.
சிறப்புக்
குறிப்பு: பாலைநிலத்திற் செல்லும் வணிகர் கூட்டத்தை
எதிர்த்து அவரது பொருளைக் கவர்வது பாலைநிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்களின்
இயல்பு.
No comments:
Post a Comment