385. தலைவி கூற்று
பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வேற்று
வரைவு மாற்றியது.
கூற்று
விளக்கம்: புதியவர்
தலைவியைப் பெண்கேட்க வந்தனர். அதை அறிந்த தலைவி, “தலைவன் என்மீது மாறாத அன்பு கொண்டவன். அவன் முதன்முதலில்
என்னைச் சந்தித்த பொழுது எவ்வாறு அன்போடு இருந்தானோ, அதுபோல்
இப்பொழுதும் அன்புடையவனாக இருக்கிறான். அவன் என்னைத் திருமணம்
செய்துகொள்ளப் போகிறான். அதை அறியாத இவ்வூரில், புதியோர் சிலர்
என்னைப் பெண்கேட்க வந்துள்ளனர்” என்று தோழியிடம் கூறி, புதிதாக வந்தவர்களின் திருமணத்திற்கான
செயல்களைத் தடுக்க முயற்சி செய்கிறாள்.
பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்
பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே.
கொண்டு
கூட்டு:
பலவில்
சேர்ந்த பழம் ஆர் இனக்கலை,
சிலைவில் கானவன் செந்தொடை
வெரீஇ, செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல் இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் பெருவரை
அடுக்கத்துக் கிழவோன் என்றும் அன்றை அன்ன நட்பினன்.
இவ் அழுங்கல் ஊர் புதுவோர்த்து.
அருஞ்சொற்பொருள்: ஆர்தல் = உண்ணுதல்; பல = பலா; கலை = ஆண்குரங்கு; கானவன்
= வேட்டுவன்; சிலை = சிலைமரம்;
தொடை = தொடுத்தல்; செந்தொடை
= குறி தவறாது அம்பு தொடுத்தல்; வெரீஇ
= அஞ்சி; செரு = போர்;
சாரல் = மலைப்பக்கம்; இரு
= பெரிய; வெதிர் = மூங்கில்;
அமை = கோல்; தயங்க
= அசைய; வரை = மலை;
அடுக்கம் = பக்கம்; அழுங்கல்
= ஆரவாரம்.
உரை: பலாமரத்திலிருந்த
பழத்தை உண்ட ஆண் குரங்குகள், சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய
வேட்டுவனது குறி தவறாத நல்ல அம்புக்கு அஞ்சி, போர்க்களத்தை அடைந்த குதிரைகளைப் போலப் பொங்கி எழுந்து, மலைச்சாரலிலுள்ள பெரிய மூங்கிலின்
நீண்ட கோல் அசையும்படிப் பாயும், பெரிய மலைப்பக்கத்தையுடைய
தலைவன், எப்பொழுதும் அன்றிருந்ததைப் போல் மாறுபாடின்றி
இருக்கும் நட்பையுடையவன். அவன் அவ்வாறு இருக்க, இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது, என் திருமணம் குறித்து
வந்த புதியவர்களை உடையதாக உள்ளது.
386.தலைவி கூற்று
பாடியவர்: வெள்ளிவீதியார்.
திணை: நெய்தல்.
கூற்று
:
பிரிவிடை
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால்,
தலைவி வருந்துகிறாள். “முன்பெல்லாம் நீ மாலைக்காலத்தில்
இவ்வாறு வருந்தாமல் மகிழ்ச்சியோடு இருந்தாயே! இப்பொழுது என்ன
ஆயிற்று? தலைவன் விரைவில்
வந்துவிடுவான். நீ இவ்வாறு வருந்துவது சரியன்று” என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவி, “மாலைக்காலம் இத்துணைத் துன்பத்தையும் தனிமையையும் தரும் என்பதைத் தலைவன் பிரிவதற்குமுன்
நான் அறிந்திலேன். ” என்று கூறுகிறாள்.
வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே.
கொண்டு
கூட்டு:
வெண்மணல் விரிந்த வீ ததை கானல் தண் அம் துறைவன் தணவா ஊங்கு வாலிழை மகளிர் விழவுஅணிக் கூட்டும் மாலையோ அறிவேன்.
மன். மாலை,
நிலம் பரந்தன்ன புன்கணொடு, புலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.
நிலம் பரந்தன்ன புன்கணொடு, புலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.
அருஞ்சொற்பொருள்: வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக
வந்தது.); ததை = பரவிய; கானல் = கடற்கரைச் சோலை; துறைவன்
= நெய்தல் நிலத்தலைவன்; தணத்தல் = பிரிதல்; ஊங்கு = முன்பு;
வால் = தூய்மை; புன்கண்
= துன்பம்; புலம்பு = தனிமை.
உரை: தோழி! வெண்மையான மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய,
குளிர்ந்த கடற்றுறையையுடைய
தலைவன், என்னைப்
பிரிவதற்கு முன்பு, நான், தூய
அணிகலன்களை அணிந்த மகளிர், விழவுக்குரிய அலங்காரங்களைச் செய்துகொள்கின்ற மாலைக்காலத்தையே
அறிந்திருந்தேன். இப்பொழுது, அது
கழிந்தது! அம்மாலைக் காலம், நிலவுலகம் முழுதும் பரவியது போன்ற
பெரியதுன்பத்தோடு, வருத்தத்தைத் தரும் தனிமையை உடையது என்பதை
நான் அப்பொழுது அறியேன்.
No comments:
Post a Comment