393. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
திணை: மருதம்.
கூற்று : தலைமகன்
சிறைப்புறமாகத் தோழி அலர் மலிவுரைத்து வரைவு கடாயது. (அலர் மலிதல் – ஊரார் கூறும் பழிச்சொற்கள்
மிகுதிப்படுதல்)
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின்
வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். தோழி,
“தலைவன் உன்னோடு பழகிய காலம் சிறிதாயினும், ஊரில் உங்களைப் பற்றிய பழிச்சொற்கள்
மிகுதியாக உள்ளன” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு கூறி, தலைவனும் தலைவியும் விரைவில்
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறாள்.
மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
கொண்டு
கூட்டு:
மகிழ்நன்
மயங்கு மலர்க் கோதை குழைய, முயங்கிய நாள் தவச் சில. அலர், கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண்
பாண்டியன் வினை வல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது.
அருஞ்சொற்பொருள்: மகிழ்நன் = மருத நிலத் தலைவன்; மயங்குதல் = கலத்தல்; கோதை
= மாலை; குழைதல் = கசங்குகுதல்;
முயங்குதல் = தழுவுதல்; தவ
= மிக; கூகை = கோட்டான்;
வாகை = ஓரூர்; பறந்தலை
= போர்க்களம்; வினைவல் = செயல்களில் (போரிடுவதில்) வல்ல;
ஞான்று = பொழுது; ஆர்ப்பு
= ஆரவாரம்.
உரை: பல
மலர்களையும் கலந்து தொடுக்கப்பட்ட உன்னுடைய மாலை
கசங்கும்படி, தலைவன் உன்னைத் தழுவிய நாட்கள் மிகச்
சிலவேயாகும். ஆனால்,
அதனால் உண்டான அலர், கோட்டான் பறக்கும்,
வாகை என்னும் இடத்திலுள்ள போர்க்களத்தில், பசும்பூண்
பாண்டியனுக்குத் துணையாகப் போர் புரிந்த, வலிமை மிக்க அதிகன்
என்பவன், தனது யானையோடு இறந்த பொழுது, ஒளிவீசும்
வாட்படையையுடைய கொங்கர்களின் வெற்றியால் உண்டாகிய ஆரவாரத்தினும் அதிகமாகியது.
சிறப்புக்
குறிப்பு:
பசும்பூண்
பாண்டியன் என்பவனும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
என்பவனும் ஒருவனே என்று கருதப்படுகிறது. இப்பாடலில்,
குறிப்பிடப்பட்ட அதிகன் என்பவன், பசும்பூண்
பாண்டியனின் தளபதிகளுள் ஒருவன். கொங்கர்களை அடக்கி வெற்றி
பெறுமாறு பசும்பூண் பாண்டியன் அதிகனை வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற
போருக்கு அனுப்பினான். அப்போரில், அதிகன்
தோல்வியுற்று இறந்தான். அதிகன் இறந்ததால், கொங்கர்கள் ஆரவாரித்தனர்.
No comments:
Post a Comment