215.
தோழி கூற்று
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். இவர் இயற்பெயர்
மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த
அளக்கர் ஞாழலார்
என்பவரின் மகனாகையால்
மதுரை அளக்கர்
ஞாழலார் மகனார்
மள்ளனார் என்று
அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் மதுரை அளக்கர்
ஞாழார் மகனார்
மள்ளனார் என்றும்
அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவர் பாடியனவாக
அகநானூற்றில் ஏழு
பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344,
353), குறுந்தொகையில் இரண்டு
பாடல்களும் (188, 215), நற்றிணையில்
மூன்று பாடல்களும்
(82, 297, 321), புறநானூற்றில் ஒருபாடலும்
(388)
காணப்படுகின்றன. அம்மள்ளனார்
என்ற பெயருடைய
புலவர் ஒருவர்
நற்றிணையில் உள்ள
82-ஆம் பாடலை
இயற்றியுள்ளார். அம்மள்ளனார்
என்பவரும் இப்பாடலை
இயற்றிய மள்ளனார்
என்பவரும் ஒருவர்
அல்லர் என்று
கருதப்படுகிறது.
திணை: பாலை.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடைத்
தோழி வற்புறுத்தியது.
கூற்று
விளக்கம்:
தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து
விடுவார்” என்று தோழி உறுதி கூறுகிறாள்.
படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
என்றூழ் மாமலை மறையும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நீரில்
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்
கொடுவரி இரும்புலி காக்கும்
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! வாழி! நீர்இல் வறுங்கயம்
துழைஇய இலங்கு மருப்பு யானை குறும்பொறை மருங்கின்
அமர்துணை தழீஇக் கொடுவரி இருபுலி காக்கும் நெடுவரை மருங்கில் சுரன் இறந்தோர் சுடரும் என்றூழ்
மாலை மறையும் இன்று அவர் வருவர்!
படரும் பைப்பயப் பெயரும்!
அருஞ்சொற்பொருள்: படர் = துன்பம்; பைபய = மெல்ல மெல்ல
(பையப்பைய என்பது திரிந்து பைபய என்று வந்தது); என்றூழ் = ஞாயிறு; கயம்
= குளம்; துழைஇய = துழாவிய;
துழாவல் = கிளறுதல்; இலங்குதல்
= விளங்குதல்; மருப்பு = கொம்பு (தந்தம்); பொறை
= பாறை; மருங்கு = பக்கம்;
அமர்தல் = விரும்புதல்; தழீஇ
= தழுவி; கொடு = வளைந்த;
வரி = கோடு; இரு
= பெரிய; சுரன் = பாலை நிலம்;
இறந்தோர் = கடந்து சென்றவர்; கொல் – அசைநிலை.
உரை: தோழி! நீ வாழ்க! நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய,
விளங்கிய கொம்புகளையுடைய ஆண்யானைகள், சிறிய பாறைகளின்
அருகில், தாம் விரும்புகின்ற, தம்முடைய
துணையாகிய பெண்யானைகளைத் தழுவி, வளைந்த கோடுகளையுடைய பெரிய புலியின்
தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்ற, உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள
பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, அத் தலைவர், ஒளியுடன் விளங்குகின்ற ஞாயிறு, பெரிய மலையில் மறைகின்ற
மாலை நேரத்தில் இன்று வருவார்! உன் துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்.
சிறப்புக் குறிப்பு: ஆண்யானைகள்
தம் பெண்யானைகளைப் பாதுகாப்பதைப் பார்த்த தலைவரின் உள்ளம் கனியும். தலைவிமீது உள்ள காதல் அவரை விரைவில் திரும்பிவரச் செய்யும் என்பது இப்பாடலில்
உள்ள இறைச்சிப் பொருளாகும்.
No comments:
Post a Comment