179. தோழி கூற்று
பாடியவர்: குட்டுவன் கண்ணனார். இவரது இயற்பெயர் கண்ணன். இவர் குட்ட
நாட்டில் இருந்ததால் குட்டுவன் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார். சேரருக்கு குட்டுவன் என்ற ஒருபெயரும் உண்டு. ஆகவே,
இவர் சேரர் மரபினர் என்று கருதுவாரும் உளர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல்
மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: பகல் வருவானை இரவுக்குறி
நேர்ந்தாள் போன்று வரைவுகடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியோடு அளவளாவுவது வழக்கம்.
ஒருநாள் அவன் வேட்டையாடிய பிறகு தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்தபொழுது கதிரவன் மறைத்து இருள் சூழ ஆரம்பித்தது. அவனைப் பார்த்த தோழி, “இப்பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டது. இன்றிரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக” என்று கூறுகிறாள். இரவில் திரும்பிப் போனால், போகும் வழியில், தலைவனுக்கு இன்னல்கள் நேருமோ என்று அஞ்சிய தோழி அவனை இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதால்,
தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று தோழி கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய உதுஎம் ஊரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
கொண்டு கூட்டு: ஐய! கல்லென் கானத்து, கடமா ஆட்டி எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன. செல்லல்! ஓங்குவரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கில் குவட்டிடையது. உது எம் ஊர்.
அருஞ்சொற்பொருள்: கல் = ஒலிக் குறிப்பு; கானம் = காடு;
கடமா = ஒரு விலங்கு; ஆடி
= வேட்டை ஆடி; எல் = வெயில்,
ஓளி; ஞமலி
= நாய்; அடுக்கம் = மலைப்பக்கம்;
குவை = கூட்டம்; கழை
= மூங்கில்; கயவாய் = ஆழமான
வாய், பெரிய வாய்; கூழை = குட்டையானது; குவடு = மலையுச்சி.
உரை: ஐய! கல்லென்னும் ஆரவாரமான ஓசையையுடைய காட்டில், கடமாவை
நீ வேட்டையாடினாய். இப்பொழுது, பகற்பொழுது
மங்கியது. வேட்டை ஆடுவதற்கு
உனக்கு உதவியாக இருந்த நாய்களும் களைப்பாக இருக்கின்றன. இப்பொழுது,
நீ திரும்பிச் செல்ல வேண்டாம். உயர்ந்த
மலைப்பக்கத்தில், இனிய தேனடையைக் கிழித்த, கூட்டமாக வளர்ந்துள்ள பசிய மூங்கில்களின் குருத்தை, ஆழ்ந்த வாயையும் பேதைமையையும் உடைய யானைகள் தின்றன. யானைகள் தின்றதால் குட்டையாகிய மூங்கிலையுடைய,
மலையுச்சியின் இடையே எமது ஊர் உள்ளது.
|
|
No comments:
Post a Comment