177.
தோழி கூற்று
பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப்
பாடல்
175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வரப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அவனை நினைத்து வருத்தத்தோடு இருக்கும் தலைவியிடம் அச்செய்தியைக் கூறுகிறாள்.
கடல்பாடு அவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாம்தம்
புலப்பினும் பிரிவுஆங்கு அஞ்சித்
தணப்புஅருங் காமம் தண்டி யோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! வாழி! கடல் பாடு அவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென்று. மன்றம் அம் பெண்ணை
மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பை என நரலும். நாம் தம் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அரும் காமம் தண்டியோர் அவர் இன்று வருவர்
கொல்?
அருஞ்சொற்பொருள்: பாடு = ஒலி; அவிந்து = அடங்கி; கானல்
= கடற்கரைச் சோலை; மயங்குதல் = மாறுபடுதல் ( ஒளி மங்குதல்); கழி
= உப்பங்கழி; புலென்றன்று = பொலிவிழந்தது; மன்றம் = பொதுவிடம்;
பெண்ணை = பனை; பை என
= மென்மையாக; நரலுதல் = ஒலித்தல்;
கூவுதல்; பலத்தல் = ஊடுதல்;
ஆங்கு = அசைச்சொல்; தணப்பு
= பிரிவு; தண்டுதல் = வசூலித்தல்
(வலித்து அணைத்துக் காம இன்பத்தை நுகர்தல்); கொல்
= அசைச்சொல்.
உரை: தோழி! கடல் ஒலி அடங்கியது. கடற்கரைச் சோலை ஒளி மங்கியது. துறையையும் நீரையும் உடைய கரிய உப்பங்கழி,
பூக்கள் கூம்பியதனால் அழகிழந்தது.
பொதுவிடத்தில் உள்ள அழகிய பனைமரத்தின் மடலில் வாழும் அன்றிற்
பறவையும், மெல்லக் கூவுகின்றது. முன்பு
நீ அவரோடு ஊடினாலும், உன்னைப் பிரிவதற்கு அஞ்சி, நீங்குதற்கரிய காம இன்பத்தை உன்னுடன்
நன்றாக அனுபவித்த உன் தலைவர் இன்று வருவார்.
சிறப்புக்
குறிப்பு:
கடல்
ஒலி அடங்குதல் முதலியன இரவு வந்ததைக் குறிக்கின்றன. கடல்
ஒலியடங்குதலாவது, மீனவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அவர்களுடைய
இல்லங்களுக்குச் சென்றதால், அவர்கள் எழுப்பும் ஆரவாரம் அடங்கியது
என்பதைக் குறிக்கிறது.
இப்பாடலைத்
தோழியின் கூற்றாகக் கருதாமல் தலைவியின் கூற்றாகக் கருதலாம். தலைவனைக் காணத் துடிக்கும் தலைவி, ”இன்று வருவர்
கொல்?” என்று தோழியிடம் கேட்பதாக இப் பாடலுக்குப் பொருள் கொள்ளுதல் சிறந்ததாகத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment