Tuesday, June 30, 2015

49. நெய்தல் - தலைவி கூற்று

49. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.  இவர் குறுந்தொகையில் பதினொரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், அகநானூற்றில் ஆறு பாடல்களும் ( 10, 71, 35, 140, 280, 370, 390), நற்றிணையில் பத்துப் பாடல்களும் ( 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) இயற்றியவர். இவர் சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தர்களாலும், திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும், அந்நாட்டிலிருந்த மரந்தை என்னும் நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடுநாட்டில் இருந்த கோவலூரும் இவரால் பாராட்டப்பட்டதால் இவர் அந்நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். 

பாடலின் பின்னணி: தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன்  விரும்பும் மனைவியாகவும் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள்.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 

அருஞ்சொற்பொருள்: கொங்குபூந்தாது; முண்டகம் = முள்ளிச் செடி; மணி = நீலமணி; கேழ் = நிறம்; மா = கருமை; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இம்மை = இப்பிறவி ; மறுமை = மறு பிறவி; நேர்தல் = பொருந்துதல் .

உரை: அணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச்செடியும்நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையுமுடைய நெய்தல் நிலத் தலைவஇப்பிறப்பு நீங்கிநமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்றவளாக (மனைவியாக) இருக்க வேண்டும்.

விளக்கம்: முள்ளிச் செடி முட்கள் நிறைந்த செடி. அந்த முள்ளிச் செடியின் இடையே மணமுள்ள தாதுக்கள் மிகுந்த மலர் இருப்பது போல், பரத்தையோடு கூடித் தன்னைப் பிரிந்து தனக்குக் கொடுமைகள் பலசெய்தாலும், தன் கணவன் தன்மீது மிகுந்த அன்புடையவன் என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.


நீயாகியர் என் கணவன்என்றதால் மறுபிறவியிலும் தலைவன்தான் அவளுக்குக் கணவன் என்பது தெளிவு. ஆகவே, தலைவிதான் அவனுக்கு மனைவி என்பதும் பெறப்படுகிறது. ஆனால், ”யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று தலைவி கூறுவது, அவள் மனைவியாக மட்டுமல்லாமல் அவனால் விரும்பப்படுபவளாகவும் இருக்க விரும்புகிறாள் என்பதைக் குறிக்கிறது. அதாவது, மறுபிறவிகளில் தன் கணவன் வேறு பெண்களை விரும்பாமல் தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என்ற கருத்தையும் தலைவி வலியுறுத்துகிறாள்.

No comments:

Post a Comment