34.
மருதம் - தோழி கூற்று
பாடியவர்:
கொல்லிக் கண்ணனார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின்
பின்னணி:
தலைவனைச்
சிலகாலமாகக் காணவில்லை.
ஆகவே, தலைவி வருத்தத்துடன் உடல் மெலிந்து உறக்கமின்றி
வாடுகிறாள். அவள் நிலையைக் கண்ட அவள் பெற்றோரும் மற்றவர்களும்
அவளை இகழ்ந்தார்கள். அவள் காதலன் அவளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான்
என்ற செய்தி தோழிக்குத் தெரிய வந்தது. “நீ யாரை விரும்பினாயோ
அவனே உன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான், ஆகவே இனி எல்லோரும்
மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று கூறித் தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
ஒறுப்ப
வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.
அருஞ்சொற்பொருள்: ஒறுத்தல் = தண்டித்தல், இகழ்தல், துன்புறுத்தல்
; ஓவுதல் = நீங்குதல்; ஓவலர்
= நீங்காதவர்கள் (தலைவியின் பெற்றோர்கள் அவளுக்கு
நெருக்கமான உறவு உடையவர்களாகையால் , ஓவலர் என்பது பெற்றோர்களைக்
குறிப்பதாகக் கொள்ளலாம்); தேறல் = தெளிதல்;
தமியர் = தனியர்; கௌவை
=பழிச்சொல், துன்பம் ; முனாஅது
= முன்னே; யானையங்குருகு = ஒருவகைக் குருகு (நாரை, கொக்கு);
கானல் = கடற்கரை; அம்
– சாரியை; தோடு = கூட்டம்;
அட்ட = அழித்த ; மள்ளர்
= வீரர்; ஆர்ப்பு = பேரொலி,
போர்; வெரூஉம் = அஞ்சும்;
குட்டுவன் = ஒரு சேரமன்னன்; மரந்தை = சேரநாட்டில் இருந்த ஒருநகரம்; குழை = சுருண்ட முடி; கிழவன்
= உரிமையுடையவன்.
உரை: உன்னுடைய
நிலையைக் கண்டு வருத்தமடைந்த உன் பெற்றோர்கள்
உன்னை இகழ்ந்தார்கள்.
உன்னுடைய நிலையைப் பற்றித் தெளிவாகத் தெரியாத மற்றவர்கள் நீ கூறியதை
மறுத்தார்கள். பகைவரை வென்ற வீரர்களின் போர் முழக்கத்தைக் கேட்டுக்
கடற்கரையில் உள்ள யானையங்குருகுகளுடைய கூட்டம்
அஞ்சும் இடமாகிய சேரன் குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரத்தைப் போல் நீ அழகுடன்
விளங்குகிறாய். உன் சுருண்ட
முடி தவழும் அழகிய நெற்றிக்கு உரிமையுடயவன் உன்னுடைய தலைவனே ஆவான். அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான். ஆகவே,
இனி நீ தலைவனைப் பிரிந்து தனிமையில்
உறங்கும் துன்பமில்லாமல் இல்லாமல் இருக்கலாம். இந்த ஊரில் உள்ள
மற்றவர்களும் இந்த இனிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம்.
விளக்கம்: யானையங்குருகு
என்பது யானையின் குரலை ஒத்த குரலை உடைய ஒருவகைக் குருகு. மரந்தை என்பது சேரநாட்டில் சேரன் குட்டுவனுக்குரிய ஒரு நகரம். இப்பாடலில், தலைவியின் அழகுக்கு மரந்தை நகரம் உவமையாகக்
கூறப்பட்டிருப்பதுபோல், புறநானூற்றுப் பாடல் 351 – இல் “வண்கை எயினன் வாகை அன்ன இவள்நலம்” என்று புலவர் மதுரைப் படைமங்க மன்னியார் பாடியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்
தக்கது.
தலைவியின் உடலுறுப்புகளுக்கு உரிமை உடையவனாகத் தலைவனைக் கூறுவது சங்ககால வழக்கு.
கலித்தொகைப் பாடல் 41-இல் “தோட்கிழவன்” என்று தலைவன் குறிப்பிடப்படுகிறான்.
மற்றும், பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை
அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும்
காணப்படுகிறது.
. . . . . . . . . . குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தல்
கிழவரைப் படர்ந்தே.
(புறநானூறு ,
113; 8-9)
பொருள்: சிறிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்களின் (பாரி மகளிரின்
) மண்முள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்) செல்கிறோம்.
. . . . . . . . . . . . . .
மென்சீர்க்
கலிமயிற்
கலாவத் தன்னஇவள்
ஒலிமென்
கூந்தல் உரியவா நினக்கே.
(குறுந்தொகை - 225; 5-7)
பொருள்:
மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய
கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
No comments:
Post a Comment