47. குறிஞ்சி - தோழி
கூற்று
பாடியவர்: நெடுவெண்ணிலவினார். இப்பாடலில் “நெடுவெண்ணிலவே” என்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பதால், இவர் நெடுவெண்ணிலவினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது..
பாடலின்
பின்னணி:
தலைவன்
இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.
ஆகவே, தோழி நிலவை நோக்கி, “ நீ ஓளி தருவதால்தான் தலைவன் இரவில்
வருகிறான். அவர்களின் களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆனால், இவ்வாறு நீ நீண்ட நேரம் காய்வது அவர்களின்
களவொழுக்கத்திற்கு நீ செய்யும் நல்ல செயலன்று.” என்று கூஊறுகிறாள்.
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
அருஞ்சொற்பொருள்: கருங்கால் = கரிய அடிப்பக்கம்; வேங்கை = வேங்கை
மரம்; வீ = பூ; உகுதல் = உதிர்தல்;
துறுகல் = பாறை; இரு
= பெரிய; குருளை = நரி,
நாய், பன்றி, புலி,
மான், முயல் ஆகியவற்றின் குட்டி; எல் =இரவு.
உரை: நீண்ட
நேரம் எறியும் வெண்ணிலவே!
கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பாறை, பெரிய புலிக்குட்டியைப் போலக் காட்சி அளிக்கும் காட்டில் இரவு நேரத்தில் வரும்
தலைவருடைய களவொழுக்கத்திற்கு, நீ நன்மை புரியவில்லை.
விளக்கம்: நிலவின்
ஒளியிருப்பதால்,
கருமை நிறமுடைய பாறையின்மேல் விழுந்து கிடக்கும் மஞ்சள் நிறமுள்ள வேங்கை
மலர்களைக் கண்டு தலைவன் புலிக்குட்டி என்று எண்ணி அஞ்சக்கூடும். அதுமட்டுமல்லாமல், புலிக்குட்டி இருந்தால், அங்கே மற்ற புலிகளும் இருக்கக்கூடும் என்று தலைவன் எண்ண வாய்ப்பு இருப்பதால்,
அவனுடைய அச்சம் மிகுதியாகலாம். நிலவொளி நீண்ட நேரம் இருப்பதால் தலைவன் தலைவியின்
களவொழுக்கம் அதிக நேரம் நீடிக்கலாம். இவ்வாறு களவொழுக்கம் தொடர்ந்து
நீடித்து நடைபெற்றால், அது தலைவியின் பெற்றோர்களுக்கும் ஊராருக்கும்
தெரிய வாய்ப்பு உண்டு. பின்னர், களவொழுக்கம்
தொடர்ந்து நடைபெற முடியாது. ஆகவே, நீண்ட
நேரம் நிலவு காய்வதால், களவொழுக்கத்திற்கு கேடு விளையுமே ஒழிய
நன்மை இல்லை என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம்
செய்துகொள்ளவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
|
No comments:
Post a Comment