Sunday, June 14, 2015

37. பாலை - தோழி கூற்று

37. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 16-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண்யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம், அன்பு; நல்கல் = அன்போடு அளித்தல் ; பிடி = பெண் யானை; களைஇய = நீக்குவதற்காக; பெருங்கை = பெரிய துதிக்கை; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); மென் = மெல்லிய; சினை = கிளை; யாஅம் = யா = ஒருவகை மரம் ; பொளித்தல் = கிழித்தல், உரித்தல்.

உரை: தோழி, தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர், நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் சென்ற வழிபெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது.


விளக்கம்: ஆண்யானை அன்போடு தன் பெண்யானையின் பசியைப் போக்குவது போல் தலைவனும் தலைவியின் விருப்பத்திற்கு இணங்கி விரைவில் வருவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

No comments:

Post a Comment