Tuesday, June 30, 2015

48. பாலை - தோழி கூற்று

48. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார்.  இவரது இயற்பெயர் உத்திரை. உத்திரம் என்னும் விண்மீன் நிலவிய நாளில் பிறந்ததால் இவர் உத்திரையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் ஒருபெண்பாற் புலவர்.  இவர் பூங்கண் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் பூங்கண் உத்திரையார் என்று அழைக்கப்பட்டார். இவர், புறநானூற்றில் ஒரு செய்யுளும் (277) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (48, 171) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள். பூந்தாதுக்களால் செய்யப்பட்ட பாவையைக் கையில் வைத்திருக்கிறாள். நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகமாகிக் கொண்டிருகிறது. வெயிலின் கொடுமையால் அவள் கையில் உள்ள பாவை வாடிக் கொண்டிருக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் காணப்படுகிறாள். அங்கு, சில பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளயாடிக்கொண்டிருக்கிறார்கள். தாதுக்காளால் செய்யப்பட்ட பாவை வாடுவதைக் கண்டு, தலைவி வருத்தத்துடன் செயலற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள், “வெயிலில் அந்தப் பாவை வாடுவது இயற்கை. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்படாதே. எங்களோடு விளையாட வா.” என்று தலைவியை அழைக்கிறார்கள். தலைவியின் வருத்தத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று அவளுடைய தோழிக்குத் தெரியும். ”தலைவன் விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால் தலைவி அவள் கவலையைவிட்டு மகிழ்ச்சியாக இருப்பாளே.” என்று தோழி எண்ணுகிறாள்.

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; பாவை = பொம்மை; கையாறு = செயலொழிந்து அயர்தல் ; ஓம்புதல் = ஒழித்தல், விடுதல்; ஒரை = மகளிர் விளையாட்டு; ஆயம் = கூட்டம்; இனை = வருத்தம்; உழத்தல் =வருத்துதல், செய்தல்; நசை = விருப்பம்; இசைதல் = கிடைத்தல், இயலுதல்.

உரை: ”பூந்தாது முதலிய பொருட்களால் செய்யப்பட்ட, மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவை காலைப் பொழுதில் வாடுவதால் வருந்திச் செயலற்ற நிலையில் இருப்பதை தவிர்ப்பாயாக.” என்று ஒரை ஆடும் மகளிர் கூட்டம் சொல்லிய பிறகும் மிகுந்த வருத்தத்தோடு உள்ள, நல்ல நெற்றியை உடைய தலைவியின் பசலை நீங்க,  இவள் விரும்பும் ஒரு சொல்லைத் தலைவர் கூறமாட்டாரோ?


விளக்கம்: இன்ன பண்புஎன்றது தலைனைக் காணாத நேரம் நீடித்ததால், தலைவி வருத்தமுற்று பசலை நோயைப் பெற்றாள் என்பதைக் குறிக்கிறது.  நசையாகு பண்பின் அன்ன ஒரு சொல்என்றது திருமணம் செய்துகொள்வேன் (வரைந்துகொள்வேன்) என்று தலைவி தலைவனிடமிருந்து கேட்க விரும்பும் சொல்லைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment