Sunday, June 26, 2016

210. தோழி கூற்று

210. தோழி கூற்று

பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார். இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் செள்ளை. கீரன் என்ற பெயருடையவர் நக்கீரனார் என்றும் பூதன் என்ற பெயருடையர் நப்பூதனார் என்றும் சிறப்பித்து அழைக்கப்பட்டதைப் போல, இவர் பெயருக்கு முன் என்ற எழுத்தும், பெயரின் இறுதியில் ஆர்விகுதியும் சேர்த்து நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.  ‘விருந்து வருமாயின் கரைந்து காட்டுக; வாராதாயின் நடந்து காட்டுக.’ என்று சிறுமிகள் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் காக்கையை நோக்கிப் பாடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறதுஇக்கருத்தை மையமாக வைத்து, இப்புலவர் இப்பாடலை  இயற்றியுள்ளார். ஆகவே, இவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார். இவர், பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்துபாடி, தொள்ளாயிரம் பலம் பொன்னும், நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பிரிந்துவந்த தலைமகன், “நன்காற்றுவித்தாய்என்றாற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பி வந்தான். அவனைப் பிரிந்திருந்த காலத்தில் தலைவி துன்புறாமல் பொறுத்துக் கோண்டிருந்ததாகத் தலைவன் கேள்விப்பட்டான்.  “நான் தலைவியைப் பிரிந்திருந்த பொழுது, நீ அவளுக்கு ஆறுதல் கூறி, அவள் வருந்தாமல் கவனித்துக்கொண்டாய்என்று தோழியைப் பாரட்டுகிறான். அதற்குத் தோழி, “ நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. காக்கை கரைந்த பொழுதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினேன். அவள் காக்கை கரைவது உன் வருகைக்கு அடையாளம் என்று எண்ணி, நம்பிக்கையுடன் பொறுமையாக இருந்தாள்என்று கூறுகிறாள்.

திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. 

கொண்டு கூட்டு: திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலி சிறிது.

அருஞ்சொற்பொருள்: திண்மை = வலிமை; நள்ளிகடையெழு வள்ளல்களில் ஒருவன்; கானம் = காடு; அண்டர் = இடையர்; பல்லா = பல் + = பல பசுக்கள்; தொண்டிசேரநாட்டில் இருந்த துறைமுகப் பட்டினம்; வெஞ்சோறு = விரும்பத்தகுந்த சோறு; செல்லல் = துன்பம்; பலி = காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு. 

உரை:  வலிய தேரையுடைய நள்ளி யென்னும் வள்ளலின் காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்களின் பாலிலிருந்து கிடைத்த நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றி நன்றாக விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய விரும்பத்தகுந்த  சோற்றை, ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு,  விருந்தினர் வருவார் என்பதற்கு அடையாளமாகக்  கரைந்த காக்கைக்குரிய அப்பலியானது, சிறிதளவவே ஆகும்.


சிறப்புக் குறிப்பு: வீட்டிற்கு அருகே காக்கை கரைந்தால், விருந்தினர் வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது.

No comments:

Post a Comment