209.
தலைவன் கூற்று
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப்
பாடல் 16
– இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்முற்றி (பொருள் முற்றி - பொருளீட்டும் முயற்சி நிறைவெய்தி) மறுத்தரும்
தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது (தெருட்டுதல்
= அறிவித்தல், தெளிவித்தல்)
கூற்று
விளக்கம்:
பொருள்
ஈட்டச் சென்ற தலைவன் பொருளுடன் திரும்பி வந்தான். வந்தவுடன் தோழியிடம்,
“ நான் தலைவியைப் பிரிந்திருக்கும் காலத்தில் , தலைவியின் நட்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அவளையே நினைத்திருந்தேன்.” என்று தலைவன் தோழியிடம் தலைவியின்
காதுகளில் விழுமாறு கூறுகிறான்.
அறந்தலைப்
பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.
கொண்டு கூட்டு: குறுநடை! அறம் தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும் இறப்பு அருங்குன்றம் இறந்த யாம் பல உள்ளலம். நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்சி தளை அவிழ் பல்போது கமழும் மைஇருங் கூந்தல் மடந்தை நட்பு.
அருஞ்சொற்பொருள்: தலைப்படுதல் =மேற்கொள்ளுதல்; மறம் = வலிமை;
குருளை = குட்டி; கறங்கும்
= உருளும்; இறத்தல் = கடத்தல்;
கடறு = காடு; கலித்தல்
= தழைத்தல்; முடம் = வளைந்தது;
சினை = கிளை; தளை அவிழ்
= முறுக்கு அவிழ்கின்ற; போது = மலரும் பருவத்து அரும்பு; மையிருங் கூந்தல் =
மை போன்ற கரிய கூந்தல்.
உரை: குறுகிய நடையை உடைய தோழி! வழிப்போக்கர்களின் உயிரைக் காக்கும் அறத்தைச் செய்யும், நெல்லிமரத்தினது அழகிய பசிய காய்கள், வலியையுடைய புலிக்குட்டிகள் கொள்ளக் கூடிய இடத்தில்,
உதிர்ந்து உருளுகின்ற, கடத்தற்கரிய மலைகளைக் கடந்து
சென்ற நான், அங்ஙனம் சென்றவிடத்தில் உள்ள பொருள்களை நினைக்கவில்லை.
வழியில் காட்டில் தழைத்த, வளைந்த கிளைகளையுடைய வெட்சியின், முறுக்குஅவிழ்ந்த, மலர்ந்த பல மலர்கள் மணக்கின்ற,
மையைப் போன்ற கரிய
கூந்தலையுடைய, தலைவியின் நட்பையே நினைந்திருந்தேன்.
சிறப்புக் குறிப்பு: வழிப்போக்கர்களின்
நீர் வேட்கையைத் தணித்து அவர்களின் உயிரைக் காக்கும் தன்மையையுடையதால் நெல்லிக்காய் “அறம் தலைப்பட்ட நெல்லி” என்று அழைக்கப்பட்டது.
No comments:
Post a Comment