Sunday, October 2, 2016

257. தலைவி கூற்று

257. தலைவி கூற்று

பாடியவர்: உறையூர்ச் சிறுகந்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: இப்பாடலில் திருமணத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்பாடலைத் தலைவி தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றியும் தன் காம உணர்வைப் பற்றியும் தோழிக்குக் கூறியதாகக் கருதலாம். தலைவி, ”என் காமம், தலைவனைக் கண்ட போது இன்பத்தைத் தருகிறது. அவனைக் காணாத போது துன்பத்தைத் தருகிறது. எப்பொழுதும் தலைவனோடு இருந்தால் துன்பில்லாமல் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.” என்று கூறுகிறாள்.

வேரு முதலும் கோடு மோராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்
அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. 

கொண்டு கூட்டு: தோழி! நம் காமத்துப் பகைவேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ்வு அன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்அகலினும் அகலா தாகி இகலும்.

அருஞ்சொற்பொருள்: முதல் = அடிமரம்; கோடு = கிளை; ஓராங்கு = இடைவெளியின்றி; தூங்குபு = தொங்குவனவாய்; தொடரி = தொடர்ந்து; கீழ் தாழ்வு = கீழே தாழ்ந்திருப்பது போன்ற; கோள் = குலை; வீழ்கோள் = விழுவதுபோலத் தோன்றும் பழக்குலைகள்; ஆர்கலி = ஆரவாரம்; வெற்பன் = மலைக்குத் தலைவன்; இகல் = பகை; இகலும் = பகைக்கும்.

உரை: தோழி! என்னிடத்து உள்ள காமமாகிய பகை, வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும், இடைவெளியின்றி,  தொடுத்து வைத்ததைப் போலத்  தொங்கிக்கொண்டு தொடர்ச்சியாக,  கீழே தாழ்ந்திருப்பது போல் தோன்றும்,  தாழ்ந்த குலைகளை உடைய பலாமரங்கள் உள்ள, ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன், இங்கே வருந்தோறும்  கூடவே வரும். அவன் பிரிந்து போனாலும் அந்தக் காம உணர்வு பிரிந்து போகாமல் பகைத்து என்னைத் துன்புறுத்தும்.


சிறப்புக் குறிப்பு: காமம் இன்பத்தைத் தருவதாயினும் தலைவனைப் பிரிந்த பொழுது தன்னுடனேயே இருந்து தனக்குத்  துன்பத்தைத் தருவதால் காமத்தைப் பகை என்று தலைவி கருதுகிறாள். பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள பண்பு நாணம். அவர்களுடைய காதல் வாழ்க்கை நாணத்துக்கும் காமத்துக்கும் இடையே ஏற்படும் போராட்டம். அதனால், காமத்தைப் பகை என்று கூறினாள் என்றும் பொருள் கொள்ளலாம். தலைவனுடைய நாட்டில் பலாமரத்தில் வேர், அடிப்பாக்கம், கிளகைள் ஆகிய எல்லா இடங்களிலும் தொடர்ந்து பழங்கள் இருப்பதைப் போல், தலைவனோடு இடைவிடாது எப்பொழுதும் ஒன்றுகூடி இருந்தால் எப்பொழுதும் இன்பமாகவே இருக்கலாம் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment