255. தோழி கூற்று
பாடியவர்: கடுகு பெருந்தேவனார். இவர் இயற்றியதாக இந்த
ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: இடை
நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
கூற்று விளக்கம்: தலைவன்
பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் தன்மேல் உள்ள அன்பால், பொருள் தேடும் முயற்சிகளை இடையிலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிடுவானோ
என்று தலைவி கலைப்படுகிறாள். அதைக் கண்ட தோழி, ”அவர் தன் கடமையை
உணர்ந்தவர். ஆகவே, அவர் தாம் தேடிச்சென்ற
பொருளைப் பெற்ற பிறகுதான் வருவார்.”என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப் பியானை கண்டனர் தோழி
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே.
கொண்டு
கூட்டு:
தோழி! தம் கடன் இறீஇயர் எண்ணி, இடந்தொறும் காமர் பொருட்பிணி போகிய, நாம் வெம் காதலர்
சென்ற ஆறு, பொத்து இல் காழ அத்தம் யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, மறம்கெழு தடக்கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும் தடமருப்பு யானை கண்டனர்!
பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, மறம்கெழு தடக்கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும் தடமருப்பு யானை கண்டனர்!
அருஞ்சொற்பொருள்: பொத்து = பொந்து (ஓட்டை);காழ் = வயிரம் பாய்ந்த; யா = யா மரம்; அரை
= அடிப்பக்கம்; முழு = திரண்ட; உருவ = ஊடுருவுமாறு; மறம் = வலிமை;
தட = பெரிய, வளைந்த;
மருப்பு = கொம்பு; உயங்குதல்
= வருந்துதல்; வாங்கி = கொண்டுவந்து;
நிரை = வரிசை; கடன்
= கடமை; இறீஇயர் = நிறைவேற்றுவதற்காக;
எண்ணி = கருதி; காமர்
= விருப்பம்; வெம் = விரும்பும்;
ஆறு = வழி.
உரை: தோழி! தன்னுடைய கடமையை நிறைவேற்றக் கருதி, இடங்கள் தோறும்,
தாம் விரும்பும் பொருளைத் தேடும் பற்றுதலால், நாம்
விரும்பும் காதலர் நம்மைப் பிரிந்து சென்றார். அவர் சென்ற வழியில், ஓட்டையில்லாத,
வயிரம் பாய்ந்த யாமரங்களின், பொரிந்த திரண்ட
அடிபக்கத்தை ஊடுருவும்படித் தன் கொம்பால் குத்தி, அதிலிருந்து
வரும் நீரை, வலிமை பொருந்திய, பெரிய
துதிக்கையினால் கொண்டுவந்து, வருந்திய நடையையும், சிறிய கண்களையும் உடைய, பெரியயானை
வரிசையின், மிகுந்த பசியைத் தீர்க்கின்ற, வளைந்த கொம்பை உடைய ஆண் யானையைக்
கண்டிருப்பார்.
சிறப்புக் குறிப்பு: ”தலைவன்
தான் செல்லும் வழியில் ஆண்யானை தன்
இனத்தைப் பாதுகாப்பதைப் பார்த்திருப்பான். அதைப்போல் தானும் தன் குடும்பத்தைப்
பாதுகாப்பாதற்குப் பொருள் தேவை என்பதை உணர்ந்திருப்பான்.” என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்.
No comments:
Post a Comment