260.
தோழி கூற்று
பாடியவர்: கல்லாடனார். இவர் கல்லாடம் என்ற ஊரினராக
இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”கல்லாடத்துக் கலந்து இனிது அருளி” என்ற
மாணிக்கவாசகர் வாக்கால் கல்லாடம் என்பது ஒருசிவத்தலம் என்று அறியப்படுகிறது. ஆனால், ”கல்லாடம்
இப்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது? அது எங்கே உள்ளது?”
முதலிய வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன், அம்பர் கிழான் அருவந்தை, பொறையாற்றுக் கிழான் ஆகியோரைப் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுட்கள்
(23, 35, 371, 385, 391) இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் (9, 83, 113, 171, 198, 209,
333) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களையும் (260, 269) இயற்றியுள்ளார். இவர் பாடல்களில்
பல வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.
திணை: பாலை.
கூற்று: அவர்
வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி
சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன்
கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிப் பிரிந்து சென்றான். கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். “தோழி!
நீ வருந்தாதே. தலைவன் வருவான் என்பதற்கு அறிகுறியாக
நல்ல சகுனங்கள் காணப்படுகின்றன. அதனால், அவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று கூறித் தோழி தலைவிக்கு
ஆறுதல் கூறுகிறாள்.
குருகும் இருவிசும் பிவரும் புதலும்
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும்
வருவர்கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக்
கன்றி லோரா விலங்கிய
புன்றா ளோமைய சுரனிறந் தோரே.
கொண்டு கூட்டு: தோழி! வாழி! குருகும் இருவிசும்பு இவரும்; புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்.
பொருவார் மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை வண்தேர்த்
தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, கன்றுஇல் ஓர் ஆ
விலங்கிய புன்தாள் ஓமைய சுரனிறந் தோர் வருவர்கொல்?
அருஞ்சொற்பொருள்: குருகு = நாரை; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; இவர்தல்
= பறத்தல்; புதல் = புதர்;
வரி = கோடு; வாய் நெகிழ்ந்தன
= மலர்ந்தன; சுரி = முறுக்குள்ள;
பொலிந்த = அழகுடன் விளங்கும்; செற்றும் = செறியும் (இறுகும்);
பொருவார் = போரிடுபவர்; மண்ணெடுத்து
உண்ணுதல் = பகவரை வென்று அவர் நாட்டுப் பயன்களைத் தாம் நுகர்தல்;
அண்ணல் = தலைமை பொருந்திய; வண் = வளமான; தொண்டையர்
= தொண்டை நாட்டை ஆண்டவர் மன்னர்கள்; வழை
= சுரபுன்னை மரம்; அமலுதல் = நெருங்குதல்; சுரன் = சுரம்
= பாலை நிலம்.
உரை: தோழி! நீ வாழ்க! நாரைகள் பெரிய வானத்தில் உயரப் பறக்கின்றன;
புதர்களிலுள்ள அரும்புகள்,
வரிகளையுடைய வண்டுகள்
ஊதுவதனால் மலர்ந்தன; சுழித்த சங்காற் செய்த வளையல்களால் விளங்கிய
தோள்களில் அவ்வளையல்கள் செறிந்தன (இறுகின). இவ்வாறு நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன. பகைவரது நாட்டை வென்று பயன் அடைகின்ற தொண்டைமான்கள்,
தலைமை பொருந்திய யானைகளையுடைய யனைப்படையையும், வளமான தேரப்படையையும் உடையவர்கள். அவர்களுக்குரிய, சுரபுன்னை மரங்கள் நெருங்கிய மலைப்பக்கத்தில், கன்றில்லாத
ஒரு பசுவை, நிழலினால் தம்மிடம் வரச் செய்து தடுத்த, சிறிய அடிப்பக்கத்தையுடைய ஓமை
மரங்களை உடைய பாலை நிலங்களைக் கடந்து சென்ற தலைவர் வருவார்.
சிறப்புக் குறிப்பு: புதல் என்பது புதரில் உள்ள மலர்களுக்கு
ஆகுபெயராக வந்தது. தொண்டையர் என்பது தொண்டை நாட்டை ஆண்ட மன்னர்களைக்
குறிக்கிறது. தொண்டை நாடு தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை
உள்ளடக்கியதாகும். தொண்டையர் அடுக்கம் என்பது வேங்கட மலையைக் குறிப்பதாக உ. வே.சா
அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
கன்று இல்லாத
பசுவை ஓமை மரம் தன்னிடம் வரவழைத்து நிழலைத் தந்ததைக் கண்ட தலைவன், தன் மனைவிக்குத் தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து விரைவில் திரும்பிவருவான்
என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
No comments:
Post a Comment